அன்றாட உணவுப் பட்டியலில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? என்னென்ன உணவுகள் சாப்பிடக் கூடாது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே. ஆரோக்கியம் காக்க விரும்புபவர்கள் அனைவரும் இதனைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
நாம், நமது உடலின் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் பற்றி யோசிப்பதே இல்லை. ஜங்க் புட் வகைகளை முழுவதுமாக தவிர்த்து புரதச் சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் அன்றாட உணவுப் பழக்கங்களில் சில தவறுகளை செய்கிறோம் என்பது மட்டும் உறுதி.
அன்றாடம், எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்கிற பட்டியல் இதோ…!
மாலை நேர நொறுக்குத் தீனி / கவனம் தேவை! மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் அதிகம் கவனம் தேவை. மாலை வேளைகளில் பசி எடுக்கும் போது சமோசா. கேக், பப்ஸ், சாண்ட்விச், பர்கர் என நொறுக்குத் தீனிகளை உண்ணத் தூண்டும். இந்த மாலை வேளையில் பசி நம்மை அதிகம் வாட்டும் போது நாம் எதனை உண்கிறோம் என்பது பற்றி அதிகம் கவனம் கொள்வதில்லை, அதே போல எவ்வளவு உண்கிறோம் என்பது பற்றியும் கவலைப் படுவதும் இல்லை.
இந்த சமயத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் நொறுக்குத் தீனியில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில், இச்சமயத்தில் நாம் தேர்வு செய்யும் நொறுக்குத் தீனி நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான எரிசக்தியை விட அதிகமான எரிசக்தியைத் தந்து நாம் நினைப்பதை விட வெகுவாக நம் உடல் நலத்தை பாதித்து விடும்.
எனவே இது போன்ற சமயங்களில் எரிசக்தி குறைவான அதே சமயம் போஷாக்கு நிறைந்த காய்கறிகள், பழங்கள், சாலட்கள், உலர் பழங்கள், கொட்டைகள், பயறு வகைகள், தானிய ஸ்நாக்ஸ் போன்றவைகளை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு மெதுவாக சாப்பிடவும். ஏன் தட்டில் எடுத்து சாப்பிட வேண்டுமென்றால், அப்பொழுது தான் எவ்வளவு சாப்பிட்டோம் என்ற அளவு தெரியும்.
உணவிற்கு பின் இனிப்புகள் / டெசர்ட்ஸ்
உணவருந்தியதற்கு பின் இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்பது நம்மில் பல பேருக்கு இருக்கும், பழக்கங்களாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும்.
இவ்வாறு உணவருந்திய பின், நாம் வயிறார உண்ட பின் நாம் இனிப்புகளை உண்ணும் போது நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் எடையை அதிகரிக்கும், ஆரோக்கியமாக வாழ நீங்கள் எடுக்கும் முயற்சி வீணாய் போகும். தினமும், டெசர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் மட்டும் இவ்வகை டெசர்ட் இனிப்புகள் உண்ணலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கானது பிரை, சிப்ஸ், குழம்பு, சமோசா என பல்வேறு விதமாக நம் உணவில் இடம்பிடித்து விடுகிறது நாமும் அவை இருந்தால் தான் உண்கிறோம். இந்த உருளைக் கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவைக் கூட்டவோ தான் நாம் உருளைக் கிழங்கை பயன்படுத்துகிறோம்.
அதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. ஆனால் பலர் உருளைக் கிழங்கு அல்லது உருளை சிப்ஸ் இல்லாமல் உணவு உண்பதில்லை என உறுதியுடன் இருக்கின்றனர். அதனால், வாய்வுத் தொல்லை, ஜுரணக் கோளாறுகள் என ஏற்பட்டு நாளடைவில் உங்கள் உடல் எடையும் அதிகரித்து விடும். ஆகவே, அடுத்த முறை உருளைக் கிழங்கிற்கு பதிலாக நல்ல காய்கறிகளை பயன்படுத்துங்கள்.
பால்
பல்வேறு உடல் சம்பந்தமான பிரச்னைகளுக்கும் பால் தீர்வாக இருக்கிறது. ஆனால், அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை விடுங்கள், பால் ஜுரணமாக சற்று அதிக நேரம் எடுக்கும்.
பால் குடிக்கவில்லை என்றால் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள்.
இல்லையென்றால் பிரச்னை பாலில் இல்லை. வேறு ஏதாவது உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பால் சாப்பிடும் போது சிறிது தண்ணீர் சேர்த்து இளஞ்சூடாக சாப்பிட்டால் பால் எளிதாக ஜுரணமாகும், பிரச்சனைகளும் குறையும்.
இவை அனைத்தும் பொதுவான குண நலன்கள், இவை ஒருவருக்கொருவர் மாறுபடலாம், மாறுபடும். உங்கள் உடம்பிற்கும், உங்களது வாழ்க்கை முறைக்கும் ஏற்றது எது என்பதை நீங்களே முடிவு செய்ய முடியும்.
அ. பாரதி