“உங்களது இளமை நெடுநாள் நிலைக்க வேண்டுமானால் சிறுக உண்ணுங்கள். சிறுகக் குடியுங்கள்” என்று 400 ஆண்டுகளுக்கு முன் கர்னரோ என்ற ஆங்கில மேதை கூறினார். அது இன்றையளவும் உண்மையாக இருக்கிறது. அளவுக்கு மீறி உண்பதுவும் குடிப்பதுவும் மனிதர்களைக் காலத்திற்கு முன்னரே மூப்படையச் செய்வதுடன் விரைந்து மாளவும் வகை செய்கிறது என்பது தான் அண்மைய அறிவியல் ஆய்வுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்வது.
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையாண்கண் நோய்”
அளவறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்பது போல், அளவின்றி உண்பவனிடத்தில் நோய் நிலைத்து நிற்கும் என்பது இக்குறளின் பொருள். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் உயிரை வாழ்விப்பதும், அளவில் மிகுந்தால் நோய் தந்து ஊறு செய்வதும் உணவே. “மெல்லிது கலந்து அளவுப் பருகி” என்ற சங்க காலப் பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது.
இது குறித்தே ஒளவை மூதாட்டி “மீதூண் விரும்பேல்” என்று கூறிச் சென்றாள். மீதூண் உண்பதனால் செரிவு உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. வயிற்றுப் பொருமல், ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பல தொல்லைகள் உண்டாகக் கூடும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அளவில் மிகுந்து உண்கின்ற போது உடற்பருமன் எளிதாக அதிகரிக்கிறது. நீரிழிவும், மூட்டுவலியும் எங்கே, எங்கே என்று தேடி வரத் தொடங்குகின்றன.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உடல்வாகு, உடல் எடை, செய்யும் தொழில் ஆகியவற்றை அனுசரித்துத் தங்களுக்கேற்ற தினசரி கலோரி அளவை உறுதி செய்ய வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் வாழ்நாட்களை உயர்த்துவதன் நிமித்தம் உணவு மறுத்தலைக் கைக்கொண்டிருந்தனர் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
“இப்போது உண்கின்ற அளவில் பாதியளவே உண்டு வந்திருப்போமானால், நாம் இப்போது இருப்பதை விட இன்னும் இளமையாக இருந்திருப்போம்” என்று கூறுகிறார் அமெரிக்க முதியவர்கள் சங்கத் தலைவர் பென்னி ஜெரால்டு. நீண்ட நெடுங்காலம் நோயின்றி வாழ விரும்புகின்றவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட ஐந்து கட்டுப்பாடுகளையும் மனதில் நிறுத்தி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் நெடுங்காலம் இனிதாக வாழ வகையுண்டு.
பசியாத போது உண்ணாதீர்கள் – மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும் பசிக்காத போது உண்பதில்லை. விலங்குகள் பெரும்பாலும் நோயின்றி வாழ இதுவே காரணம். “மருந்தென வேண்டாவா யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”
தேவைக்கதிமான தீனி வேண்டாம் – அளவிற்கு அதிகமாக உண்ணுதல் என்பது மனிதர்களிடையே ஒரு நோயாகவே வளர்ந்துள்ளது. அளவறிந்து உண்க.
நோய்க்கு உணவிடாதீர்கள் – நோயுற்றிருக்கும் போது பெரும்பாலும் பசி உணர்வு தோன்றுவதில்லை. வயிற்றில் செரிமான நீர் சுரக்காததே இதற்குக் காரணம். எனவே நோயுற்றிருக்கும் வேளைகளில் உண்பதைத் தவிருங்கள்.
கிழமையில் ஒரு நாள் பழ உணவு – வாரத்தில் ஒரு நாள் பழங்கள் மட்டுமே உண்பது என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உப்பு, புளி, காரம் போன்றவற்றை நீக்கி உடல் தூய்மை பெறலாம்.
கிழமையில் ஒரு நாள் ஒரு பொழுது உண்க – வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒரு பொழுது மட்டும் உண்டு பழகுங்கள். காலையிலும் பகலிலும் உணவு கொள்ளாது மாலையில் ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளுங்கள். சிறந்த உடல் நலமும் மன நலமும் வாய்க்கப் பெறுவீர்கள்.