வயிற்றுப்புண் எளிதாக ஆறிட எளிய வழி

Spread the love

உணவு முறை மாற்றம்

வயிற்றுப்புண் நோயாளிகளுக்கு எவ்வாறு மருத்துவமும் மருந்துகளும் முக்கியமோ அதே போல உணவு முறையும் மிக மிக முக்கியம். வயிற்றுப்புண் நோயாளிகள் தகுந்த உணவு முறையைக் கையாளுவது மிக மிக இன்றியமையாதது. அப்போது தான் அவர்களுக்கு மருந்துகளும் சிறப்பாக வேலை செய்யும். எளிதாக வயிற்றுப்புண் ஆறிடும். சுமார் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அமெரிக்க மருத்துவமனைகளில் வயிற்றுப்புண் மருத்துவ நிபுணருடன் உணவு முறை மாற்றத்தை விளக்கிச் சொல்லிட உணவுக்கலை வல்லுனர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த சமீப 30 ஆண்டுகளாக புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளால், மருந்துகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும், ஆனால் உணவு முறையில் எந்த மாற்றமும் கட்டுப்பாடும் தேவையில்லை என அவ்வளவாக இதற்கு கவனம் செலுத்தப்படுவதில்லை. இது முற்றிலும் தவறு. நாம் உண்ணும் உணவு வயிற்றைச் சென்றடைந்து அங்கே தான் ஜீரணிக்கப்பட்டு அதன் சக்தியை உடல் கிரஹித்துக் கொள்கின்றது. அவ்வாறு ஜீரணிக்க உடல் அமிலங்களையும் பிற சுரப்புகளையும் சுரக்கின்றது. உணவுகளை ஜீரணிக்க உதவும். அமிலம் மேலும் வயிற்றுப் புண்ணை உண்டாக்கும். வாய்ப்பு உள்ளது எனவே உணவு முறை என்பது வயிற்றுப்புண் நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளுக்கு மிகவும் தேவை.

வயிற்றுப்புண் அதற்கான மருத்துவர் குறிப்புகள் பண்டைக்கால செய்திகளிலேயே காணப்பட்டுள்ளது. எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகள், வயிற்றை கஷ்டப்படுத்தாத உணவுகளை, அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக உண்பது பால் பால் சார்ந்த பொருட்களை உண்பது வயிற்றுப் புண்களை எளிதாக ஆற உதவும் எனும் குறிப்புகள் கி.பி. முதலாம் நூற்றாண்டு நூல்களிலேயே காணப்படுகின்றன. இது எதனைக் குறிக்கின்றது என்றால் உணவு முறை மாற்றத்தின் அவசியத்தை நம் மூதாதையரே உணர்ந்து அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எளிதாக பிரச்சனையை தீர்த்திட உதவும் என்பதனைக் காட்டுகிறது.

வயிற்றுப் புண்களை எளிதாக ஆற்றக் கூடிய உணவுகளை வகைப்படுத்தி இங்கே தருகின்றோம்.

பால் உணவு

பல காலமாக பால் வயிற்றுப் புண்ணை ஆற்றிடும் என்ற கருத்து உள்ளது. இது மிகவும் தவறானதாகும். 1980 களுக்கு முன்பாக இக் கருத்து இருந்தது உண்மை தான் ஆனால் அதன் பின் ஏற்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவில் பால் எந்த வித நன்மையும் செய்யவில்லை மாறாக சில கெடுதல்களையே உண்டாக்குக்கின்றது என கண்டறியப்பட்டது. பாலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஒரு டம்ளர் பால் குடித்த பின்னர் அந்த பாலை ஜீரணிக்க உடல் சுமார் 30 மிலி. அதிகமான அமிலத்தை சுரக்க வேண்டியுள்ளது. இது தவிர பாலில் உள்ள கொழுப்புச்சத்து அதிக கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் இதய நோய் உடையவர்களுக்கும் வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை வலியுறுத்த அண்மையில் நடந்த ஆராய்ச்சியில் வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினருக்கு பால் மற்றும பால் சார்ந்த உணவுகளும், மற்ற குழுவினருக்கு இயல்பான உணவுகளும் கொடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. எண்டோஸ்கோபி மூலமாக கண்டறிந்ததில் பால், பால் சார்ந்த பொருள் உண்டவர்களுக்கும், உண்ணாதவர்களுக்கும் எந்த வித வித்தியாசமும் கண்டறியப்படவில்லை. எனவே பால், பால் சார்ந்த பொருள்களை உண்பது பிற பிரச்சனைகளைத் தான் ஏற்படுத்துமே ஒழிய வேறு நன்மைகள் எதனையும் ஏற்படுத்தாது.

மது

மதுவும் பாலைப் போன்றது தான் அதனை ஜீரணிக்க உடல் அதிக அமிலத்தை சுரக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பீர் போன்ற மது வகைகளை உண்ணும் பொழுது அதிகமான அமிலம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு அது வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிற்றுப்புண்ணையும் ஆறவிடாமல் செய்து விடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே வயிற்றுப்புண் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உடையவர்கள் மது வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

காபி

காபி பருகுவதாலும் உடல் அதிக அமிலம் சுரக்க வேண்டியுள்ளது. அதிலும் பால் குறைவாக ஜீனி இல்லாத காபியாகவோ, டீயாகவோ இருக்கும் பொழுது வயிறு அதிக அமிலம் சுரக்க வேண்டியுள்ளது. இதனால் வயிற்றுப்புண் நெஞ்செரிச்சல் போன்றவை அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே இந்நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது நல்லது.

உப்பு

உப்பு அதிகமாக சேர்ப்பதாலும் வயிற்றுப்புண் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுகின்றது. எனவே இந்நோயாளிகளில் குறைவாக உப்பு சேர்ப்பது நல்லது.

மசாலா

வயிற்றின் உட்புறத்திலும் இரைப்பையில் ஒரு விதமான சளிப்படலம் உள்ளது. இந்த சளிப்படலம் சீராக இருந்தால் தான் வயிற்றுப்புண் ஆறும் அல்லது புண் ஏற்படாமல் இருக்கும். ஆனால் நாம் உண்ணும் உணவில் உள்ள மசாலா, காரம் மிளகு மிளகாய் கடுகு போன்றவை இந்த சளிப்படலத்தை அழிக்கக் கூடியவை எனவே அவ்வாறு சளிப்படலம் அழிக்கப்படும் பொழுது வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது வந்த புண்ணும் எளிதாக ஆறுவதில்லை எனவே மசாலா காரம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய்

எண்ணெயிலிட்டுப் பொறித்த வறுத்த உணவுகள் வயிற்றுப்புண்ணை அதிகமாக்கும். இவற்றை ஜீரணிக்க அதிக அமிலம் தேவைப்படுவதால் அந்த அமிலமே வயிற்றுப்புண்ணை உண்டாக்கும். எனவே இந்நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது நல்லது.

நார்ச்சத்து

இந்நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உண்பது மிகவும் நல்லது. ஏனெனில் நார்ச்சத்து வயிற்றின் உட்புறம் உள்ள சளிப்படலத்தை வலுப்படுத்தக் கூடியது. எனவே நார்ச்சத்து அதிகமாக உள்ள  உணவுகள் மற்றும் தீட்டப்படதா நார்ச்சத்து மிகுந்த அரிசி கோதுமை போன்றவற்றை இந்நோயாளிகள் உண்ணும் பொழுது அந்த சளிப்படலம் வலுவடைந்து மீண்டும் வயிற்றுப் புண் வருவதைத் தடுக்கின்றது. எனவே இவை நல்லது.

வைட்டமின் யூ

உண்ணுகின்ற உணவின் அளவு குறைவாகவும் அடிக்கடியும் இருப்பது வயிற்றுப்புண்களை ஆற்றிட மிகவும் உதவும். எனவே ஒரே சமயத்தில் அதிகமான அளவு உணவு உண்டுவிட்டு பின் நெடுநேரம் பட்டினியாக இருப்பதனைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த இடைவெளி நேரத்தில் உண்பது சிறந்த பலனைத் தரும் மருந்துகள் விரைவாகச் செயல்படவும் வயிற்றுப்புண் எளிதாக ஆறிடவும் உதவும்.

எவ்வகை மருத்துவம் செய்தாலும் வயிற்றுப்புண் மீண்டும் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் மருத்துவம் செய்தவுடன் எளிதாக ஆறிடும் ஆனால் அதுவே உணவுப்பழக்க வழக்கங்கள் முறையாக இல்லையெனில் மீண்டும் ஏற்பட்டு தொல்லையைத் தரும். எனவே மீண்டும் தாக்காமல் பார்த்துக் கொள்ள மிக மிக அவசியம் உணவு முறை மாற்றம்.

காரம், மசாலா, எண்ணெய், புளிப்பு, காபி, டீ போன்றவற்றைக் குறைத்து, புகை, மது நீக்கி, நேராநேரத்திற்கு குறைவான அளவு எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளை உண்டு தக்க மருத்துவம் செய்து வந்தால் வயிற்றுப்புண்ணை எளிதாக ஆறிடச் செய்யலாம் மீண்டும் வராமலும் பார்த்துக் கொள்ளலாம்.


Spread the love