வைரஸை எதிர்க்கும் உணவுகள்

Spread the love

வைரஸ், பாக்டீரியாவை விட சிறிய நுண்ணுயிர். பாக்டீரியாவே மிகச் சிறிய நுண்ணுயிர். கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். ஆனால் வைரஸ் கிருமிகளை மைக்ரோஸ்கோப் மூலம் கூட பார்க்க முடியாது பிரத்யேகமான நவீன எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் தான் பார்க்க இயலும். மிகச்சிறிய பாக்டீரியாவின் உடலுக்குள்ளேயே கூட வைரஸ் கிருமிகள் நுழைந்து விடும் என்றால் அதன் அளவை புரிந்து கொள்ளுங்கள் வைரஸின் அளவு 10 லிருந்து 300 நானோ மீட்டர்கள். ஒரு நானோ மீட்டர் என்பது 1 மில்லி மீட்டரை 100 கோடியாக பிரித்தால் அந்த 100 கோடியில் 1 பங்கு

வைரஸின் குணங்கள்

வைரஸ் கிருமிகளால் தனியாக வாழ முடியாது. அவை உயிருள்ள செல்களில் குடி கொண்டு இனப்பெருக்கம் செய்யும்.

வைரஸ் கிருமிகள் ஒரு புரத கவசத்தால் மூடப்பட்டிருக்கின்றன.

செல்லுக்குள் நுழைந்தவுடன் வைரஸ் கிருமிகள், அந்த செல்லின் நார்மல் செயல்பாடுகளை முடக்கிவிடும். செல்லின் வளர்சிதை மாற்றம் வைரஸின் கட்டுப்பாட்டில் வந்து விடும். இதனால் வேறு செல்களை உருவாக்குவது போல் செல்கள், வைரஸ்களை மேலும் மேலும் உருவாக்கும். செல்கள் இறந்துவிட்டால் அவற்றால் உருவாக்கப்பட்ட வைரஸ் வேறு செல்களுக்கு மாறி அவற்றை பாதிக்கும். சில வைரஸ்கள் செல்களை கொல்வதில்லை. ஆனால் அவற்றின் செயல்பாடுகளை மாற்றிவிடுகின்றன. நார்மல் செயலான செல்கள் பிரிந்து புதிதாக உருவாகும் செயல்பாடுகள் மாறி அசுரவேகத்தில் வைரஸ் செல்கள் உருவாகி புற்றுநோய் ஏற்படலாம்.

குறிப்பிட்ட வைரஸ் குறிப்பிட்ட செல்லை தான் தாக்கும். உதாரணமாக ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ், மேல் சுவாச மண்டலத்தில் உள்ள செல்களை தாக்கும். தவிர தாவரங்களை தாக்கும் வைரஸ்கள் மனிதர்களை பாதிப்பதில்லை. மனிதர்களை மட்டும் தாக்கும் வைரஸ்கள் தனிப்பட்டவை.

சில வைரஸ்கள் செல்களில் குடி கொண்டு “உறங்கியிருக்கும்”. செல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் விழித்தெழுந்து தங்களின் பாதிப்புகளை உண்டாக்கும்.

வைரஸ்கள் பரவும் விதம்

வைரஸ் கிருமிகள் விழுங்குவது, உட்கொள்வது, மூச்சு வழியே, கொசுக்கள் என்று பல வழிகளில் உடலினுள் புகுந்து விடுகின்றன. வைரஸ் நுழைவதை நம் உடலும் பல வழிகளில் எதிர்க்கிறது. நமது சர்மம் வைரஸின் நுழைவுக்கு முதல் தடங்கல். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி சீராக இருந்தால் வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் இன்டர்ஃபிரான் என்ற வைரஸை பரவ விடாமல் தடுக்கும் பொருளை உண்டாக்குகின்றன. தவிர இரத்தத்தில் உள்ள வெள்ளணுக்கள் வைரஸை எதிர்த்து போராடும். இருந்தாலும் வைரஸின் பாதிப்புகள் உலகின் மருத்துவ துறைக்கு ஒரு பெரிய சவாலாகும். வைரஸ்களை முழுமையாக அழிப்பது கடினம். தடுப்பூசிகளும், வைரஸை எதிர்க்கும் மருந்துகளும் தற்போது வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை.

வைரஸ் கிருமிகளில் உள்ள நியூக்ளிக் அமிலத்தை பொருத்து அவை

ஆர். என். ஏ வைரஸ்கள் என்றும், டி. என். ஏ வைரஸ்கள் என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

சில ஆர். என். ஏ. வைரஸ்கள்

ரெட்ரோ வைரஸ், அரினா வைரஸ், ரியோ வைரஸ், காலிஸி வைரஸ், கரோனா வைரனா முதலியவை.

சில டி. என். ஏ. வைரஸ்கள்

பாக்ஸ் வைரஸ், ஹெர்பீஸ் வைரஸ், அடினோ வைரஸ், பார்வோ வைரஸ் முதலியன.

வைரஸ்களால் வரும் சில நோய்கள்

ஜலதோஷம், எய்ட்ஸ், அம்மை நோய்கள், டெங்கு, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா போன்ற ஃப்ளூ காய்ச்சல், வயிற்று பாதிப்புகள், போலியோ முதலிய பல நோய்கள்.

வைரஸ்களை எதிர்க்கும் உணவுகள்

தயிர் – தயிர் ஒரு சிறந்த வைரஸை எதிர்க்கும் உணவு. தினமும் 225 கிராம் தயிர் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் போன்ற மேல் சுவாச மண்டல தொற்றுகளை தவிர்க்கலாம். காமாலை நோய்களுக்கும் தயிர் நல்லது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், அம்மோனியா உண்டாவதை தடுக்கிறது. அதிக அளவு அம்மோனியா ஹெபாடிடீஸ் போன்ற கல்லீரல் நோய்களை உண்டாக்கும். பாலிலும் தயிரிலும் கிட்டத்தட்ட ஒரே வித ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், நல்ல பாக்டீரியாக்கள் தயிரை ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் அடங்கிய உணவாக மாற்றுகின்றன. புரோபையாடிக் தயிர் இன்னும் நல்லது.

இலவங்கப்பட்டை – இலவங்கப்பட்டையிலிருந்து எடுத்த கெட்டி கஷாயத்தை வெந்நீர் கலந்து குடிப்பது வைரஸ் நோய்களை வராமல் தடுக்க உதவும். வெளியில் செல்லும் முன்பு, இந்த கஷாயத்தை குடித்து விட்டு சென்றால் சுற்றுப்புற சூழலின் மாசு, தூசிகளால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம். இலவங்கப்பட்டை கஷாயம் தொற்றுகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையது.

பூண்டு – கிட்டதட்ட 600 ஆண்டுகளாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பூண்டு பல மருத்துவ குணங்கள் கொண்டது. பூண்டில் உள்ள அல்லிசின் சிறந்த கிருமி நாசினி. தொற்று நோய்களை தடுக்கும். கபத்தால் உறைந்து போன சுவாச பாதைகளின் அடைப்புகளை நீக்குகிறது. பூண்டை சூப்பாக செய்து குடிக்க, உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறும். வைரஸ் ஜுரங்களை குறைக்கும் பூண்டு, நிரூபிக்கப்பட்ட கிருமி நாசினி.

இஞ்சி – பிரசித்தி பெற்ற இயற்கை மருந்துகளில் இஞ்சி முக்கியமானது. ஃப்ளூ வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் பெற்றது. ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கப் வெந்தய கஷாயம் மற்றும் தேன் சேர்த்து குடிக்க, வைரஸ் ஜுரங்கள் குறையும். ஜலதோஷம் இருமலுக்கு, துண்டு செய்த இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு தேன் சேர்த்து குடிக்கவும்.

துளசி – மகா விஷ்ணுவுக்கு உகந்த துளசியை, வீட்டில் வளர்த்து தினமும் வணங்குவது இன்றும் நடக்கிறது. மழைக்காலத்தில் ஜலதோஷம், ஃப்ளூ, டெங்கு ஜுரங்கள் அடிக்கடி தாக்கும் – இவை வராமல் காக்க துளசி இலை கஷாயம் தினமும் குடிக்க வேண்டும். வைரஸ் ஜுரம் அதிகமாக இருந்தால், 1/2 லிட்டர் தண்ணீரில் நிறைய துளசி இலைகளைப் போட்டு, கூடவே பொடித்த ஏலக்காய்களை சேர்த்து காய்ச்சி எடுத்த கஷாயத்துடன் தேன் சேர்த்து குடிக்கலாம். ஜுரத்தின் உத்வேகம் குறையும்.

எலுமிச்சம் பழம் – எலுமிச்சையும் வைரஸ்களை விரட்ட உதவும். இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 1/2 லிட்டர் கொதிக்கும் நீரில் கலந்து, தேன் சேர்த்து பருகவும். ஜலதோஷம் மறைந்து விடும். தவிர எலுமிச்சை வைரஸால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு அருமருந்து. மஞ்சள் காமாலை நோயாளிக்கு 20 மி.லி. அளவில் எலுமிச்சை ஜுஸைத் அடிக்கடி தரவும். கல்லீரலை காக்கும்.

வெங்காயம் – இதில் உள்ள க்யூர்சிடின் என்ற பொருள் வைரஸை மட்டுமல்ல பாக்டீரியாக்களையும் அழிக்கும். வதக்கிய வெங்காயம் ஜலதோஷத்திற்கு நல்லது. இன்ஃப்ளூயன்சா இருந்தால், வெங்காய சாற்றுடன் சம அளவு தேன் கலந்து 2 (அ) 3 ஸ்பூன் கொடுக்கவும்.

ஆரஞ்சு – ஆரஞ்சுப்பழம் வைட்டமின் சி செறிந்தது. எல்லாவித வைரஸ், பாக்டீரியா பாதிப்புகளுக்கு ஆரஞ்ச் ஜுஸ் கொடுக்கலாம். ஜலதோஷம், ஃப்ளூ முதலியவை குணமாகும்.

மஞ்சள் – இதுவும் ஒர் சிறந்த வைரஸ் கிருமிநாசினி. ரத்தத்தை சுத்தீகரிக்கும் ஆற்றல் உடையது. வயிற்றுக்குள் நுழைந்து கிருமிகளை அழிக்கும். சூடான ஒரு கப் பாலில் அரைத் தேக்கரண்டி போட்டு கலக்கி குடிக்கவும். இதனால் ஜலதோஷம், மூக்கடைப்பு, தொண்டைப்புண், வாய்ப்புண், மூச்சுத்திணறல் – இவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.


Spread the love