காதல் தரும் உணவு!

Spread the love

 விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

   சிட்டுக்குருவியைப் போலேஞ்..

   பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்

   பீடையிலாத தோர் கூடு கட்டிக்கொண்டு

   முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

   முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்குஞ்ஞ்ஞ்ஞ்        (விட்டு)

மகாகவி பாரதியாரின் அற்புதமான வரிகள் இவை.  சிட்டுக்குருவியைக் காட்டி மனித வாழ்வு எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்துச் சொன்ன பாரதி ஒரு வாழ்வியல் வல்லுனர் என்றால் அது மிகையாகாது.  கூடிப் பெறும் இன்பம் என்பது எந்த ஓர் உயிரினத்தின் வாழ்வுக்கும் அடித்தளம்.  அதிலும் மற்ற உயிரினமெல்லாம் இனப் பெருக்கத்திற்கு தன் சக்தியை உலகில் அதிகரிக்க மட்டுமே கூடுகையில், மனிதன் மட்டுமே தன் வாழ்வின் அங்கமாகக் காதலை, காமத்தைக் கொண்டிருப்பது சிறப்பு.

வாயுத் தொந்தரவைப் போக்க ஒரு சிட்டிகை பெருங்காயத்தை மோரில் கரைத்து சாப்பிடுவது போல, தன் காதலியை மகிழ்விக்க ஏதேனும் அற்புத உணவைத் தேனில் குழைத்து சாப்பிடலாம் என வரும் உடனடி எதிர்பார்ப்பு ஏமாற்றம் தான் தரும்.

என்னதான் ஒரு நட்சத்திர விடுதியின் குளுகுளு உணவறையில் மெல்லிதாக சாக்ஸபோன் இசைக்க பகட்டாக ஆடையணிந்து அமர்ந்திருக்கையில், ப்ரீபெய்ட் புன்னகையுடன், ”ஊலகின் அத்தனை சுவையும் கூட்டித்தரவா? எனும் அக்கரை வினவல் அருகாமையில் இருந்தாலும் வராத காதல், கொளுத்தும் வெயிலில் சோளக் காட்டு ஓரத்தில் வைக்கோல் போரில் சாய்ந்து கொண்டு காதலியின் கரம்பற்றி அவள் தம் தாவணி ஓரத்தில் முடிந்து எடுத்து வந்த கருப்புப் பணியாரத்தை சுவைக்கையில் பீறிட்டு வரும்.  அங்கு காதல் தந்தது கறுப்பணியாரம் அல்ல, காதலியின் அருகாமையும் கரிசல் காட்டு கரிசனமும் தான்.

உடலும் உள்ளமும் காதலுக்குத் தயாராகும்போது, சரியான உணவுத் தேர்வும் இருந்துவிட்டால் உத்வேகம் உறுதி.  நெருக்கடியும், அவசரமும் நிறைந்த இந்த நவீன வாழ்வில், உடலையும் உள்ளத்தையும் காதலுக்குத் தயார்படுத்துவதற்கும் கூட சிறப்பு உணவுகள் அவசியப் படுகின்றன. இந்தக் கட்டுரை “அந்த” உணவுக்கு.

காதலுக்கான முதல் தேர்வு பழங்கள்

காதலுக்கான முதல் தேர்வு பழங்கள், மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி முதலியவற்றின் காமம் கூட்டும் திறனை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.  வைட்டமின்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த இந்தப் பழங்கள் மனதை காதலுக்கு வசப்படுத்துவதிலும், களிப்பில் உறவை நீடிக்கச் செய்யவும் பயன் தருகின்றன.  குறிப்பாக பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் உறவுக்கு உறுதி தருவதில் ஆதாமை அவசரப்படுத்திய ஆப்பிளை விட மேலானது என்கிறது உணவு அறிவியல்.  பேரீச்சை நெடுங்காலமாக அரபு நாட்டின் காதல் சின்னம்.  இங்கும் முகமதியர் வரவுக்குப் பின்னர், சித்த, ஆயுர்வேத மருந்துகளில் காமம் விளைவிக்க கர்ச்சூர்காய் எனும் பேரீச்சை சேராத லேகியங்கள் இல்லை எனலாம்.

“ஸ்ட்ராபெர்ரி பெண்ணே !” எனப்பாடியது உதட்டழகைப் பார்த்து மட்டுமல்ல.  உண்மையில் “ஸ்ட்ராபெர்ரி” பழம் காமத்தை தூண்டும் கனி, ஆண்களுக்கு “டெஸ்டோஸ்ட்ரோன்” எனும் காமம் தூண்டும் ஹார்மோனைத் தூண்டுவதிலும், பெண்ணுக்கு மனதைக் காதலின்பால் கசிய வைப்பதிலும் ஸ்ட்ராபெர்ரிக்குச் சம்பந்தம் உண்டு என்கின்றனர் மேற்கத்திய உணவியலாளர்கள்.

ஸ்ட்ராபெர்ரிக்கு உள்ள அந்த சக்தி நம்ம ஊர் நாவல் பழத்துக்கு உண்டு. மாதுளம் பழமோ சீன மருத்துவத்தில், காதலுக்கும் கருத்தரிப்புக்கும் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. மாதுளையின் கனிரசத்துடன் துவங்கும் மாலைச் சிற்றுண்டி உணவு காதலியுடனான இரவு விருந்துக்கு ஏற்றது! உலர்கனி வகையில் பேரீச்சை, காய்ந்த திராட்சை, அத்தி இவை காதல் வைட்டமின் தரும் கனிகள் எனலாம்.

மரக்கறி மன்னர்கள் காதலில் அதிகம் ஈடுபடுவர் என்கிறது அறிவியல்.  விலங்குகளிலும் “ அப்பாவி டொமஸ்டிக் சமைத்து” விலங்குகள் காதல் செய்வதில் உறுமும் சிங்கம், புலியைக் காட்டிலும் அதிக வீரியம் கொண்டவையாம்! ஆதலால், தற்போது கொஞ்சம் காஸ்ட்லியாகிப் போய்விட்டாலும் கீரை, காய்கறிகளுக்கு உணவில் தவறாது இடம் கொடுப்பது அவசியம்.  காமம் விளைவிக்கும் கீரைகள் என்று சித்த மருத்துவம் ஒரு பட்டியலே தந்துள்ளது.  தாளிக்கீரை, தூதுவளை, சிறுகீரை, முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் கொஞ்சம் பாசிப்பயறு, பசுநெய் சேர்த்து சமைத்து உண்டால் ஆண்மை பெருகும் என்கிறது சித்தமருத்துவம்.  (இயக்குனர் பாக்கியராஜுக்கு முன்னரே சித்த மருத்துவம் முருங்கைக்காயை முழுதாக காதலுக்கும், காமத்துக்கும், கருத்தரிப்புக்கும் பெரிதாக பரிந்துரைத்துள்ளது.)  முருங்கை விதையில் உள்ள “பெண் ஆயில்”! சத்து காதலுக்கும், காமத்துக்கும் அருமருந்து!.

அடடா புலால் உணவுக்கு காதலில் தடையா? என பயப்படவேண்டாம்.  அளவோடு சாப்பிடும் கோழிக்கறி, லோப்ஸ்டர் மீன் துண்டுகள் காதலைத் தூண்டும்.  அன்பு மொழி பேச வேண்டிய காதலுக்கு முந்தைய பொழுதில் காதலியும், காதலனின் முன்னே அமர்ந்து தொடைக்கறியை கடைவாய்ப் பல்லில் கடித்து, இழுத்து கண்ணிலிருந்து ரத்தமும், கண்ணீரும் கலந்து வரும்படி காரசாரமாக சுவைப்பது பலன் தராது. பயம் தான் தரும்.  நீடித்த காதலுக்கு குறைவாக உப்பும், காரமும் நல்லது.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கு இல் காமத்திற்குண்டு.    ——-

என்றார் வள்ளுவர்.

 மது தராத போதையும், இன்பமும் மகிழ்வும் காதலுக்கு உண்டு.  ஆதலால் காதலைப் பெற, அல்லது காமத்தில் விஞ்ச மதுவை நாடுவது அபத்தம். மது வெறியைத் தரும்.  காதலின் மென்மையைப் போக்கும்.  காமத்தின் ஆளுமையை முற்றிலும் சிதைக்கும், உடனடியாகவும், நிரந்தரமாகவும் கூட.

காதல் பானம் என்றால் காஃபி என்கிறார்கள்.  மருத்துவரீதியாக தேனீர், காஃபியை விட சிறந்ததாயினும் உணர்ச்சிகளைக் கூட்டும் காஃபின் சத்து கூடுதலாக உள்ள காஃபி காதலர்களின் தேர்வு.  காதல் மருந்து என்று ஒன்று உண்டு.  அது சாக்லெட் ! சாக்லெட்டின் காதல் மகத்துவம் குறித்து பேசாத உணவியலாளர்களே இல்லை எனலாம்.  கோகோவின் அந்த நரம்பு தூண்டும் சக்திதான் காதல் போதை தரும் சாக்லெட்டுக்குக் காரணம்.

கருத்தரிப்பை தன்னுள் பொதிந்துள்ள பெரும்பாலான தாவர விதைகள் காதலும், காமமும் தரும் மூலிகைகள்.  அதிலும் குறிப்பாக முந்திரி, பாதாம், பிஸ்தா அக்ரூட் விதைகள் ஆண்களின் விந்தணுக்களைப் பெருக்கவும், பெண்ணுக்கு அதில் ஈர்ப்பை அதிகரிக்கவும் பெரிதும் பயன் தருவன.  சாதிக்காய், சாதிபத்ரி இரண்டுமே காதலுக்கான முதல் சித்த மருந்து என்றால் தவறாகாது.  மனதைக் களிப்புடன் வைத்திருக்க உதவும் உணவென்றால் சாதிக்காய் தான்.  மிகக் குறைந்த அளவே வீட்டுப் பெரியவரின், மருத்துவரின் ஆலோசனைப்படி சிட்டிகை அளவில் சாப்பிடவேண்டிய இந்த சாதிக்காய் சாதிப்பது பலவற்றை.

காதலுக்கு மெனு கார்டோ, பிரிஸ்கிரிப்ஷனோ தருவது சரியாகாது. “ மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு” என்று காதலாய்ப் பாடியோ,” இதோ இருக்கு பார் நீ அன்று வாங்கித் தந்த சாக்லெட்டின் தாள்” என்று அன்பைக் காட்டியோ” அதெல்லாம் ஒன்றும் ஆகாது.  “நானிருக்கேன்ல” என்று தோள் சாய்ந்து ஊக்குவிப்பதோ, தான் சாக்ஸபோன் இசையை விட, ஸ்ட்ராபெர்ரி பழத்தைவிட ஹாட் சாக்லெட் காஃபியை விட கூடுதல் காதல் தரும்.  ஆதலினால் காதல் செய்வீர்.

ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்


Spread the love