விரும்பிய உணவை ஒரு கட்டு கட்டுபவர்களும், உணவில் வகை வகையாக மற்றும் காரசாரமான நவீன உணவுகள் பக்கம் கவனம் செலுத்துபவர்களும் அதிகமாக பயப்படுவது ஃபுட் பாய்ஸனுக்கு தான். பிடித்த உணவு என்று ஒரு பிடி பிடித்தவர்களில் பலருக்கு ஃபுட் பாய்ஸன் அவஸ்தை கிடைத்திருக்கிறது. இதன் காரணமாகத்தான், சிலர் உணவு விஷயத்தில் அடக்கி வாசிக்கிறார்கள். ஃபுட் பாய்ஸன் தானே என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைத்து விட முடியாது. ஃபுட் பாய்ஸனால் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன.
மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்ஸன் ஏற்படுகிறது என்றாலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுதோ அல்லது பரிமாறும் பொழுதோ உணவானது தூய்மைக்கேடு அடைகின்றது.
இதனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகி விடுகிறது. மேலும், சிலருக்கு முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவுப் பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாத காரணத்தால் ஃபுட் பாய்ஸன் ஏற்படுகிறது.
ஃபுட் பாய்ஸனில் இருந்து தப்பிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
உணவு தயாரிக்கும் போது கைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். டி.வி. பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம் அல்லது குழந்தைகளோடு விளையாடி முடித்திருக்கலாம். அப்படியே உணவு தயாரிக்க களமிறங்கி விடக் கூடாது. எப்பொழுதும் உணவு தயாரிக்கும் முன்னர் வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பைக் கொண்டு நன்கு கைகளை கழுவி விட வேண்டும்.
சமையலறை என்றாலே காய் நறுக்கிய குப்பைகள், முந்தைய நாள் சமைத்த உணவில் மிச்சமிருக்கும் சாதம், குழம்பு ஆங்காங்கே சிந்திய கடுகு, உப்பு என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும் சுத்தத்திற்கு எதிராக. போனோமா சமைத்தோமா என்று மட்டும் இல்லாமல், சமையலறையை வெகு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மிச்சம் மீதிகளை உடனடியாக அப்புறப்படுத்துவதும் சாலச் சிறந்தது.
சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவிற்கு என்று தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சமைக்கப்படாத உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள், சமைத்த உணவுப் பொருளைத் தாக்கி, பாக்டீரியாவை பரவச் செய்யும். எனவே, இதில் அதிக கவனம் தேவை.
சமையலுக்குப் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, அப்படியே பச்சையாக சாப்பிடுவதாக இருந்தாலும் சரி காய்கறிகளை நன்கு கழுவிட வேண்டும். பழங்கள் விஷயத்திலும் இதை தவறாமல் கடைபிடிப்பது நல்லது. காய்கறிகளை தண்ணீரில் நன்கு கழுவும் போது அதில், ஒட்டிக் கொண்ட சிறு சிறு பூச்சிகள் நீங்கும்.
இப்போது சமைக்கிற பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது. சமைத்த உணவாக இருந்தாலும், சமைக்காத பொருளாக இருந்தாலும் ஃபிரிட்ஜில் வரிசையாக அணி வகுத்திருக்கும். இதில், கவனிக்க வேண்டியது ஒன்று. சமைப்பதற்கு முன்னர் உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அவற்றின் உறை நிலையை முழுமையாக குறைக்க வேண்டும்.
சிலர் வீட்டில் செல்லப் பிராணிகள் மிக முக்கிய அங்கம் வகிப்பதாக இருக்கும். அப்படி இருப்பதில் ஒன்றும் தவறில்லை. குறைந்த பட்சம் உணவு உண்ணும் போதாவது உங்கள் செல்லப் பிராணிகள் விலகி இருக்க வேண்டும். எல்லாம் உங்கள் நன்மைக்குதான்.
சமையலறையில் அதிகமாக நடக்கும் நிகழ்வு. அடுப்பில் இருக்கிற உணவுப் பொருள் சரியாக வேகும் முன்பாக இறக்கி விடுவது. இது கவனக் குறைவால் அல்லது அவசரக் குடுக்கை புத்தியால் நிகழ்ந்து விடுகின்றன. அதற்காக, பாதி வெந்தும் வேகாமலும் இருக்கிற உணவை எக்காலமும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உணவுகள் முற்றிலும் சமைக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்த பின்னர், உணவை சாப்பிட ஆரம்பிப்பது தான் ஆரோக்கியம் காக்கும் வழி.
ஃபிரிட்ஜில் இடப்பற்றாக்குறை காரணமாக சமைத்த உணவு, சமைக்காத உணவுப் பொருட்கள் ஆகியவை மிக நெருக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். இது சரியான விஷயம் இல்லை. சமைத்த உணவிற்கும், சமைக்கப்படாத உணவிற்கும் இடையில் தொடர்பை தவிர்க்கவும். அதாவது, பச்சை இறைச்சி, கோழி மற்றும் மீனை குளிர்சாதன பெட்டியின் கீழ் பகுதியிலும், சமைத்த உணவை மேல் பகுதியிலும் வைக்கவும். சுத்தமான பாத்திரத்தில், சுத்தமான சமையலைறயில் தயாரிக்கப்படும் உணவை சுத்தமான இடத்தில் வைப்பது தான் நல்லது. உணவுப் பொருட்களை மூடி கொண்டு மூடி விடவும்.