முதுமையும் உணவும்

Spread the love

1940 களில் 32 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி வாழ்நாள் இன்று அறுபத்தெட்டை அடுத்து நிற்கிறது. நம் முன்னோர்களை விட நாம் இன்று நீண்ட நாட்கள் வாழ்கிறோம். அவர்களை வாட்டி வதைத்த பல கொடிய நோய்களினின்றும் இன்று நாம் விடுபட்டிருக்கிறோம்.

இருப்பினும் வயது முதிர்கின்ற போது இயற்கையாகவே ஏற்படுகின்ற நோய்களான மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு, கண்புரை நோய், சருமத் தொய்வு போன்றவைகள் தொல்லை தரவே செய்கின்றன. இவைகளை நோய் என்று கருதாமல் உடல் நிலையில் நிகழ்கின்ற மாற்றங்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

மனித நாகரீகம் தோன்றிய நாள் தொட்டே முதுமையின் வரவைத் தாழ்த்தவும், தள்ளிப் போடவும், இளமையை என்றென்றைக்கும் இருத்திக் கொள்ளவும் மனித இனம் முயன்று வந்திருக்கிறது. மூப்படைவதும், முதுமையுறுவதும் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு அங்கம் தான் என்றாலும் மருத்துவ அறிவியலின் மாபெரும் வளர்ச்சியாலும், உணவியலில் ஏற்பட்டிருக்கின்ற பல உன்னதக் கருத்துக்களாலும் நீண்ட நெடுங்காலம் மனிதர்கள் வாழத் தலைப்பட்டிருக்கின்றனர். இந்த நீண்ட வாழ்க்கை ஒரு சுமையாக மாறாமல் நிறைவான மகிழ்வோடும் துடிப்பான உடலோடும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் இன்று ஒவ்வொருவரிடமும் தோன்றத் தொடங்கியுள்ளது.

மூப்பு எதனால் வருகிறது?

இந்த வினாவுக்கு ஏற்றதொரு விடையை இன்று வரை மனிதரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மூப்பு எப்படி வருகிறது என்று சொல்லக் கூடிய அளவு அறிவியல் இன்று வளர்ந்திருக்கிறது. நாம் வாழுகின்ற சுற்றுச் சூழலின் விளைவாகவும் நம் பெற்றோரிடமிருந்து நாம் பெறுகின்ற ஜீன்களின் தன்மையாலும், அவற்றில் ஏற்படுகின்ற (Free Radicals) எனப்படும் தனிம அணுக்களின் தோற்றத்தினாலும் நமது உடல் மூப்படைகிறது.

ஆண்டுகள் செல்லச் செல்ல உடல் உள்ளுறுப்புகளில் சில அடிப்படை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எலும்புகள் தம் கனிமச் சத்தை மெல்ல, மெல்ல இழக்கின்றன. வலுவான தசைக் கோளங்கள் குறைந்து கொழுப்புத் திசுக்களும் (Free tissuse) இணைப்புத் திசுக்களும் கூடுகின்றன. இதயத்தின் உந்து சக்தி குறையத் தொடங்குகிறது. சிறுநீரகங்கள் செய்து வந்த தூய்மைப் பணிகளில் தேக்கம் தலைகாட்டுகிறது. நரம்புகள் செயல் திறன் குன்றுகின்றன. அருகிலுள்ள எழுத்துக்கள் கண்களின் பார்வையில் உருவிழந்து தெரியத் தொடங்குகின்றன. செவிப் புலனினும் சிறுகச் சிறுகத் தாழ்ச்சி ஏற்படுகிறது. செரிவுறுப்புத் தசைகளின் செவ்வி (Tone) குறைவதினால் செரிமானத்தில் குறை உண்டாகிறது. மலங்கழிவதிலே சிக்கல் ஏற்படுகிறது.

மேலே விரித்துக் கூறப்பட்டிருக்கும் அனைத்து மாற்றங்களும் வயதோடு தொடர்புடையவை தாம் என்றாலும் எல்லா மனிதரிடத்தும் இந்த மாற்றங்கள் ஒன்று போல் நிகழ்வதில்லை. இதற்குத் தலையாய காரணம் (Genetic factors) எனப்படும் மனிதர்களின் மரபியல் கூறுகள் தான் என்று அறிவியலார் கருதுகின்றனர்.

 இது தவிர சுற்றுச் சூழல் தொடர்பினாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களை ஒட்டியும் உடலில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். மரபணுப் பண்புக் கூறுகளால் ஏற்படும் மாற்றங்களைத் தற்போது நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் உடல் நலத்துக்கு உகந்த சுற்றுச் சூழலையும், உணவு முறைகளையும், வாழ்க்கை நெறிகளையும் உண்டாக்கிக் கொள்வோமானால் நம் வயதை மறக்க முடியும். மறைக்க முடியும். வருகின்ற முதுமையைக் காலந் தாழ்த்தி வரச் செய்ய இயலும்.

உடல் மூப்படைவதைத் தடுத்து இளமை நலத்துடன் இருக்கச் செய்வதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது என்று அண்மைய உணவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. குழந்தை கருவில் இருக்கின்ற காலத்தில் தாய் உண்ணுகின்ற உணவிலிருந்தே இதன் தாக்கம் தொடங்கி விடுகிறது.

உணவினால் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களினால் உந்தப்பட்டுப் பல தனிம அணுக்கள் (Free Radicals) தோன்றிச் செயல்படத் தொடங்குகின்றன. சங்கிலித் தொடர் போல் உடல் உறுப்புக்களில் தேய்வும் தளர்ச்சியும் தோன்ற இந்தத் தனிம அணுக்களே காரணம் என்பது பல ஆய்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறைச்சி, புகையிலை, அணுக்கதிர் வீச்சு, புற ஊதாக் கதிர்கள் போன்றவைகளும் தனிம அணுக்களின் தோற்றத்தை அதிகரிக்கின்றன. இவைகளை எதிர்க்க வல்ல திறங்கொண்ட ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளைப் (Antioxidants) பெருமளவில் கொண்ட உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டுமென்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். விட்டமின் ‘சி’ விட்டமின் ‘ஈ’ மற்றும் விட்டமின் ‘ஏ’ யின் முன்னோடியாக பீட்டா கரோட்டின் போன்றவை ஐயமின்றி நிரூபிக்கப்பட்ட ஆக்ஸினேற்ற எதிர்ப்பிகளாகும்.

எலுமிச்சை நாரத்தை வகைப் பழங்களிலும் நெல்லிக்காயிலும், பச்சைக் கீரைகளிலும், முளைவிட்ட தானிய வகைகளிலும், தக்காளி, உருளைக் கிழங்கு போன்றவற்றிலும் விட்டமின் ‘சி’ மிகுந்து காணப்படுகிறது. விதைகளிலும், கொட்டைகளிலும் பருத்தி விதை, கோதுமை முளை எண்ணெய் போன்றவற்றிலும் காய்கறி, கீரை, மஞ்சள் நிறக் காய்கள் கிழங்குகள் போன்றவற்றில் பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கிறது.


Spread the love
error: Content is protected !!