கொல்லும் சர்க்கரையைவெல்லஉணவே மருந்து

Spread the love

‘ஏன்தான் வந்துச்சோ.. எப்படி வந்துச்சோ’ என்று காரணங்களை துல்லியமாக, சொல்ல முடியாத வியாதிகளில் ஒன்று சர்க்கரை வியாதி. காலை சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது என்பார்கள். அதுபோல்தான் சர்க்கரை வியாதியும். அதனால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். இவை தான் காரணங்களாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

பரம்பரை- (Heredity)

சர்க்கரை வியாதிகளின் (டைப் 1 மற்றும் டைப் 2) காரணம், பரம்பரை என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்லலாம். பெற்றோர்களில் இருவருக்கும் இருந்தால், உங்களுக்கும் கண்டிப்பாக வரும்.

நீங்கள் உஷாராக இருந்து தேவையான வருமுன் காக்கும் செயல்களை மேற்கொண்டால் தப்பிக்கலாம். கள்ளனை வீட்டில் வைத்திருப்பது போல் உங்கள் உடலில் பரம்பரை கோளாறு படுத்திருக்கும்.

அதுவும் டைப் 1 வியாதியில், வைரஸ், ஸ்ட்ரெஸ் (Stress), சுற்றுப்புற சூழ்நிலை மாசு (மருந்துகளுக்கும், இராசாயன பொருட்களுக்கும் ஆளாவது) இவைகளால் உடலின் உள் இருக்கும் ‘கள்ளன்’ உசுப்பிவிடப்பட்டு சர்க்கரை வியாதி தலைதூக்கும்.

பரம்பரை டைப் – 1 ல் தான் இந்த ‘உசுப்பல்’ தேவைப்படுகிறது, துப்பாக்கியால் சுட அதன் குதிரை (trigger) யை அழுத்துவது போல. பரம்பரை தாக்கம் இருந்தாலும் மிகச்சிலருக்கு மாறுபட்ட மரபணு (mutated gene), இளவயதிலேயே முதிர்ந்த டயாபடீஸை தோற்றுவிக்கும்.

டைப் 2 ல் பரம்பரை காரணம் வலுவானது. தவிர மையோடோனிக் டிஸ்ட்ரோபி (Myotonic dystrophy/steinert disease) என்ற தீவிரமான தசை அழிவு நோய், நடமாட்டங்களை முடக்கும் ப்ரெடரிச் அடாக்ஸியா (Fried reich’s Ataxia) என்கிற பரம்பரை நோய்களின் அம்சம் டயாபடீஸ். கட்டுப்படுத்த முடியாத ஆட்டோஇம்யூன் (Auto immune) குறைகள் கணையத்தின் பீடா செல்களை அழித்துவிடும். சில ஆராய்ச்சிகளில் தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்த தன்னிச்சை எதிர்ப்பு சக்தி நோயை குறைக்கலாம். குழந்தைகளுக்கு அதன் வாழ்க்கையின் முதல் வருடத்தில் 2000 யூனிட் விட்டமின் “டி” கொடுத்து வந்தால் டைப் 1 டயாபடீஸ் வருவதை தடுக்கலாம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள்.

பெற்றோர் இருவரும் சர்க்கரை நோயாளிகளென்றால், பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக வரும். பெற்றோர் ஒருவருக்கு மட்டும் இருந்தால் பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 40 சதவீதம். பெற்றோரில் ஒருவருக்கும், நெருங்கிய உறவினரில் யாருக்காவது இருந்தாலும், பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 70 சதவிகிதம்.

உடல் பருமன் அதிகமாதல் (Obesity)

டயாபடீஸ் மட்டுமல்ல. ஏனைய பல வியாதிகளுக்கு அதிக உடல் எடையே காரணம். சொல்லப்போனால் அதிக உடல்பருமனும் பரம்பரையாக வரலாம். டைப் – 2 நீரிழிவு நோய் அதிக உடல் எடையால் வரும். தைராய்டு ஹார்மோன் கோளாறுகள், உடற்பயிற்சி / உடலுழைப்பு இல்லாதவர்கள், பெருந்தீனி ஆசாமிகள் இவைகளும் காரணம். ஒரு கிலோ எடை கூடினால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 5 சதவிகிதம் அதிகமாகிறது. டைப் – 2 நீரிழிவு நோயாளிகளில் 80 லிருந்து 90% குண்டாக இருப்பவர்கள். அதிகமாக சாப்பிட்டால் உடல் செல்கள் விரிவடைந்து பெரிதாகுகின்றன. தவிர உடற்பருமனால் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகும். எனவே குண்டானவர்களுக்கு அதிக இன்சுலின் தேவை. இது கிடைக்காமல் போனால் டயாபடீஸ் உருவாகும்.

கணைய தொற்று

குழந்தைகளை பொருத்த வரையில், கணையம் தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் இன்சுலீன் சுரப்பிகளை பீடா செல்கள் அழித்து போனால், இன்சுலீனே கிடைக்காமல் போய் டைப் 1 ஏற்படும்.

வயது

டயாபடீஸ் டைப் 1 பிறந்த குழந்தைகளையும் தாக்கும். டயாபடீஸ் டைப் – 2 நடுவயதில் ஆரம்பிக்கும். நாற்பது வயதில் வரும் சர்க்கரை வியாதி இப்போது 25 வயதிலேயே வரும் சாத்ய கூறுகள் அதிகம்.

உடற் உழைப்பு இல்லாதமை

தினம் உடற்பயிற்சி செய்பவர்கள், எடையை குறைப்பவர்கள், ஆரோக்கிய உணவை உண்பவர்கள் இவர்களால் டயாபடீஸ் நோயை ஓரம் கட்ட முடியும். ஆனால் சோம்பேறிகளாக, உல்லாச வாழ்க்கை வாழ்பவர்கள் ஒன்றின் பின் ஒன்றாக பல பிணிகளுக்கு ஆளாகின்றனர். சாப்பிடும் உணவு கொழுப்புகள் செரிமானமாகாமல் உடல் எடையை அதிகரிக்கின்றன. பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பை தேங்கவிடும். இரத்த அழுத்தமும் அதிகமாகும். கெடுதலான கொலஸ்ட்ரால் கூடி நன்மை செய்யும் எச்.டி.எல் (பிஞிலி) குறையும். புகைபிடிக்கும் பழக்கம், மதுவுக்கு அடிமையாகுவது இவை இருந்தால், “நீரிழிவு” தேடி வரும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் PCOD

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனும் கோளாறுகளால் பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளால், டயாபடீஸ்   வரும் ஆபத்துள்ளது. உடல் உழைப்பு இல்லாத, மூன்று கிலோவுக்கு மேல் அதிக எடையுள்ள குழந்தையை பெற்ற, கர்ப்ப காலத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்மணிகளுக்கு சர்க்கரை நோய் வரும். சில கருத்தடை மாத்திரைகளும் சர்க்கரை நோயை உண்டாக்கும். குடும்பத்தில் டயாபடீஸ் இருந்தால், கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் முன் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதுவும் குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் அடிக்கடி கருக்கலைப்பு (abortion) செய்து கொள்ளும் பெண்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம்.

நீண்ட நாள் மன வியாதிகள்

மனநோய்களுக்கான மருந்துகள் சாப்பிடுவர்கள், stress, அடிக்கடி  கவலைப்படுபவர்கள், சத்துக்குறைவால் பலவீனமானவர்கள், ஸ்டிராய்டு மருந்துகளை நீண்டகாலம் உட்கொள்பவர்கள். இவர்களெல்லாம் டயாபடீஸ் வரும் வாய்ப்புகள் உள்ளவர்கள்.

உயர் இரத்த அழுத்தம்

ஒரு ஆராய்ச்சி, உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்மணிகளுக்கு, சர்க்கரை வியாதி வரும் அபாயம், மற்றவர்களை விட 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கிறது.

நீரிழிவின் அறிகுறிகள்

திரிசூலத்தை போல் டயாபடிஸீக்கு மூன்று முக்கிய அறிகுறிகள் உண்டு. அவை அடிக்கடி அதிக சிறுநீர் கழித்தல் (Polyuria), அடங்கா தாகம் (Polydipsia) மற்றும் அகோரப் பசி (Polyphagia).

சிறுநீர் பெருக்கு

சாதாரணமாக சிறு நீர் 1 1.25 லிட்டர்  போகும். நீரிழிவு நோயாளிகள் 3 – 10 லிட்டர் சிறுநீரை கழிப்பார்கள். ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் குளுக்கோஸ் இருக்கக் கூடாது. சிறுநீரகம் வடிகட்டிகளால் (filters) குளுக்கோஸை எடுத்து விடும். இரத்தத்தில் குளுக்கோஸ் ஏற, ஏற சிறுநீரக வடிகட்டிகள் சமாளிக்க முடியாமல் திணரும்.

இரத்த சர்க்கரையின் அளவு 160 – 180 மி.கி / டெ.லி. தாண்டினால் பளுவை தாங்க முடியாமல், சிறுநீரகம் சரியாக வடிகட்டாமல் சர்க்கரையை சிறுநீரில் சேர்த்து விடும்.  இந்த சிறுநீர் கரைசலின் அளவை குறைக்க மேலும் மேலும் சிறுநீரகம் தண்ணீரை அனுப்பும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

சிறுநீர் வழியே சர்க்கரை வெளியே செல்வதால் தன்னுடன் நிறைய தண்ணீரையை சேர்த்துக் கொண்டு செல்கிறது. கிட்டதட்ட எப்போதும் சிறுநீர் கழிக்கும் உந்துதல் உண்டாகும். உடல் செல்களிலிருந்து Osmosis முறையில் தண்ணீர் வெளியேறி விடும்.

செல்கள் வற்றி விடும். உடல் தண்ணீர் சிறுநீரகம் வெளியேற, தண்ணீர் தேவை ஏற்பட்டு, அடங்கா தாகம் உண்டாகும். இந்த தொல்லை ஒரு சுழற்சியாக நடக்கும். குறிப்பாக இரவில் தொண்டை வரண்டு போய் தாகம் ஏற்படும். சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டி வரும். உடலுக்கு அவசியமான சர்க்கரை சத்து டயாபடீஸால் உயிரணுக்களுக்கு, திசுக்களுக்கு சேரமுடியாததால், மூளை இந்த பற்றாக்குறையை தீர்க்க, பசியை தூண்டிவிடும். சாப்பிட்டாலும், உணவு கலோரிகள் சிறுநீரில் வெளியேறி விடும். வேண்டுமென்கிற அளவு குளுக்கோஸ் இருந்தாலும், அது உடலில் சேரமுடியாத துர்பாக்கிய நிலையினால், ஒரு பக்கம் சிறுநீர் போக, மறுபக்கம் பசியும் தாகமும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.

எடை குறைதல்

குளுக்கோஸ் இல்லாமல் பட்டினி கிடக்கும் செல்கள் மூளையிடம் முறையிட, அது வயிற்றுக்கு உத்தரவிட்டு பசியை தூண்டுகிறது. அதிகமாக சாப்பிட நேர்ந்து அதனால் சிலருக்கு எடை ஏறலாம். இதற்கு எதிர்மாறாக சிலருக்கு என்ன அதிகமாக சாப்பிட்டாலும் எடை குறையும். இந்த திடீர் எடை குறைவு, டைப் – 1 நோயாளிகளிடம் பரவலாக ஏற்படும்.

குறைக்க முடியாத அளவு களைப்பு, உடல் சோர்வு இவை இதர அறிகுறிகள். பல முறை சொன்னபடி உடலில் சக்திப் பொருளான குளுக்கோஸ் சேரமுடியாததால் உடல் சக்தி பற்றாக்குறையால் உடல் அசதியடையும். எப்போதும் சோர்வாக, தூக்க உணர்வாக பலவீனமாக இருக்கும்.

வேலையில் சுணக்கம்

சர்க்கரை சக்தி குறைவினால் மூளையின் திறன் குறையும். மறதி ஏற்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஆறாத காயங்கள், புண்கள், தோல் பாதிப்பு, உடல் அரிப்பு அதிக இரத்த சர்க்கரையால் காயங்களை ஆற்றும் திறனை உடல் இழந்து விடுகிறது. சர்க்கரை இரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது, வெள்ளை இரத்த அணுக்கள், கிருமிகள், நோய் தொற்றுகள் இவற்றுடன் அதிகமாக போராட முடியாது.

உடலின் செல்கள் சர்க்கரை நோயால், மென்மையாக மாறி விடும். நோய் தொற்று அதிகரிக்கும். எனவே காயங்கள் எளிதில் ஆறாது. அதுவும் கால்களில் காயங்கள் புண்கள் ஏற்படுவது சகஜம். தோலில் இரத்த ஒட்டம் குறைந்து போவதால், வறட்சியடைந்து, மெல்லியதாகி விடும். டயாபடீஸ் நரம்புகளை வலுவிழக்க செய்வதால் வலியும் தெரியாமல் போகலாம். பிறப்புறுக்களில் அரிப்பு ஏற்படும். சர்க்கரை நிறைந்த இரத்தம் நரம்பு முனைகளை தாக்கி, நலிய வைத்து அரிப்பை ஏற்படுத்தும். கை, கால், தொடை இடுக்கில் படை வரும். புண் ஏற்படும், நமைச்சல் உண்டாகும். குளுக்கோஸ் நிறைந்த இரத்தத்தில் நோய்க் கிருமிகள் எளிதாக இடம் பிடித்து வளர்கின்றன. இவை புண், காயம் போன்றவைகளை எளிதில் ஆறவிடாமல் செய்வதுடன் கட்டி, கொப்புளம், பிளவை எனப்படும் கார்பங்கிள் போன்ற சரும நோய்களை உண்டு பண்ணுகின்றன.

சிறுநீர் பாதை தொற்று

அடிக்கடி சிறுநீர் போக வேண்டியிருப்பதால், சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கண்கோளாறு, தெளிவற்ற பார்வை: கண்களில் உள்ள மெல்லிய சிறு நரம்புகளை, இரத்த சர்க்கரை தாக்கும். சர்க்கரையால் கண் திரவங்களின் அடர்த்தி மாறுபடும். கண் லென்சுகள் அளவுக்கு அதிகமான சர்க்கரை திரவத்தில் அமிழ்வதால் தெளிவான தன்மையை இழந்து மாவு படிந்தாற் போல் ஆகிவிடும்.

பாதங்களில் எரிச்சல், உடல்வலி பாத கட்டை விரலில் திடீரென்று நெருப்பு இட்டாற்போல் எரிச்சல் தோன்றும். கை, கால் பாதங்களில் எரிச்சல் உணர்வு, இவை தோன்றும்.

பற்கள் விழுந்துவிடுதல்     “ஜிஞ்ஜி வைட்டிஸ்” என்ற பல், ஈறுகளை பாதிக்கும் நோய் வர வாய்ப்புகள் அதிகம். வாயில் புண் ஏற்பட்டால், ஆற நாளாகும். பற்சிதைவு, ஈறுகளில் இரத்தக்கசிவு, சீழ்பிடித்தல், வாயில் துர்நாற்றம் இவை அறிகுறிகள்.

உடலுறவில் ஆர்வம் குறைதல்,        களைப்பு, சோர்வு, இயலாமை போன்றவற்றை டயாபடீஸ் உண்டாக்குவதால் உடலுறவில் நாட்டம் குறையும். மனக்கிளர்ச்சி மேலோங்கி நிற்கும், ஆனால் இயலாமை வெறுப்பைத் தரும். இதானலேயே மனச்சோர்வு உண்டாகி வாழ்வில் விரக்தி தான் மிஞ்சும்.

இவ்வளவு அறிகுறிகளா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். சர்க்கரை வியாதியின் தீமையே அதன் ஆரம்பகால அறிகுறிகள் என்ன என்று குறிப்பிட்டு கூற முடியாது. இந்த நோய் உடலின் எல்லா பாகத்தையும் தாக்குவதால், அந்தந்த உறுப்புகளின் கோளாறு தான் புலப்படும். அதனால் வருடத்திற்கு ஒருமுறையாவது ‘சுகர் டெஸ்ட்’ அவசியம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love