கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் தேவைப்படும் அமிலம் ஃபோலிக் அமிலம் எனப்படும் வைட்டமின் பி 9 மற்றும் கோபால்மின் எனப்படும் வைட்டமின் பி 12 ம் ஒன்றிணைந்து செயல்படும் வைட்டமின்கள். குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் மெகாலோபிளாஸ்டிக் சோகையை (Megaloblastic Anaemia) குணப்படுத்துவதில் இந்த இரண்டு வைட்டமின்களும் இணைந்து பணியாற்றுகின்றன. இவை இரண்டும் நீரில் கரைபவை ஃபோலிக் அமிலம் நிதானமாகத்தான் நீரில் கரையும்.
ஃபோலிக் அமிலம் (பி9)
முன்பெல்லாம் குழந்தைகளில் சில பிறக்கும் போதே சில குறைபாடுகளுடன் பிறப்பதின் காரணங்கள் சரிவர தெரியாமல் இருந்தது. இந்த மாதிரி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மூளை, தண்டுவடத்தின் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டாலும் ஏன் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை. வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் குறைபாடுகள் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்று தெரிந்த பின் கர்ப்பிணிகளுக்கு, ஃபோலிக் அமிலத்தை கொடுத்து பிரிட்டனில் நடத்திய ஆய்வில், இந்த வைட்டமின் சத்து குறைபாடே, குழந்தைகள் குறைகளுடன் பிறக்கக் காரணம் என்று தெரியவந்தது. தற்போது கர்ப்பிணிகளுக்கு தவறாமல் ஃபோலிக் அமில மாத்திரைகள் தரப்படுகின்றன. ஃபோலிக் அமிலம் ஃபோலேட் மற்றும் ஃபோலாசின் (Folacin) என்றும் சொல்லப்படுகிறது.
பணிகளும் பயன்களும்
மிக முக்கியமான செயல்பாடு – கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பிறக்கும் குழந்தை நரம்புத்தளர்ச்சியின்றி ஆரோக்கியமாக பிறக்க வழி செய்கிறது.
இரத்தத்தின் சிவப்பணுக்களை பெருகவும், முதிர்ச்சியடையவும் உதவுகிறது.
வைட்டமின் பி12 – டன் சேர்ந்து மரபணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
நரம்பு திசுக்களில் மரபணுக்கள் உற்பத்தியாகவும் அவற்றை பராமரிக்கவும் உதவுகிறது.
உண்ணும் உணவிலிருந்து புரதத்தை பிரித்தெடுத்து உட்கிரகிக்க உதவுகிறது.அமினோ அமிலங்கள் சுரக்க உதவுகிறது. சர்மத்திற்கு நல்லது.மனச்சோர்வின் சிகிச்சைக்கு உதவுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
ஃபோலிக் அமிலத்தின் தேவைகள்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் வயதைப் பொருத்து – 100 மைக்ரோ கிராம் – 400 மைக்ரோ கிராம்.
நாட்பட்ட சிகிச்சைக்கு – 100 மைக்ரோ கிராம்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் – 150 – 400 மைக்ரோ கிராம். 600 மைக்ரோ கிராம் கூட தேவைப்படலாம்.
ஃபோலிக் அமிலம் குறைந்தால் ஜீரண சக்தி பாதிக்கப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் குறைந்து, இரத்த சோகை, களைப்பு, ஆயாசம் முதலியன உண்டாகும்.பிறக்கும் குழந்தைகள் நரம்பு மண்டல கோளாறுகளுடன் பிறக்கும்.உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.மன அழுத்தம், சோர்வு, மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.அதிகம் உட்கொண்டால் பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. அதிகமானால் வைட்டமின் பி12 செயல்பாடுகளை குறைக்கலாம்.
எதனால் அழிகிறது
சூரிய வெளிச்சம், சூடு போன்றவற்றால் அழிகிறது.