நமது உடலை பாதுகாக்கும் தோலானது சூரியனாலும், மாசு மற்றும் கிருமிகளாலும், ரசாயன கலவைகளால் கழுவுவதாலும் பாதிக்கப்பட்டு வயது முதிர்வை காட்டத் தொடங்குகிறது.
ஆனால், மிருதுவான, அழகான தோலினைப் பெற வழிவகைகள் உள்ளன. அதற்கு முன் நாம் தோலின் ஆற்றலையும், தேவைகளையும் பற்றி சிந்திக்க வேண்டும்.
நம் தோல், உடல் உள்ளுறுப்புகளை உள்ளே பாதுகாக்கவும், வெளியுலக தாக்கத்தை உள்ளே கொண்டு செல்லாமலும் ஓர் அரண் போல் செயல்படுகிறது. நம் சருமமானது அதிக கடுமையானதாகவும், உணர்ச்சிகளுடையதாகவும் உள்ளது. காயங்களை தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றலும் பெற்றுள்ளது எனலாம்.
உங்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்தே சருமத்தின் ஆரோக்கியம் அமைகிறது. நம் சருமம் மிகவும் அத்தியாவசியமானதும், உடல் புத்துணர்ச்சியை தர வல்லதாகவும் விளங்குகிறது. நம்மை எவ்வித நோயும் தாக்காதவரை, நம் தோல் பொலிவு குறையாது. இளமையாகவே இருக்க வேண்டுமெனில் தோல் பராமரிப்பு மிக அவசியமாகும்.
மிகச்சிறந்த சருமத்தின் (Ideal Skin) பண்புகள்
மிருதுவாக, எண்ணெய் பசையுடைய, மெல்லிய, இலேசான மற்றும் பளபளப்பான சருமமே மிகச்சிறந்ததாக கூறப்படுகிறது.
இந்த வகை சருமம் கொண்டவர் நல்ல கண்பார்வை உடையவராய் இருப்பார். கருவிழிகள் மற்றும் வெண்விழிகளும் சிறப்பாய் இருக்கும்.
அவர்கள் தோல் நோய்கள் இல்லாதவராகவும், காயங்கள் விரைவில் ஆறிடும் தன்மையுள்ளவராகவும் இருப்பார்கள்.
அவர்கள் ஓர் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை பெற்றிருப்பர்.
ஆயுர்வேதம் இவ்வுலகில் தோன்றிய அனைத்தும் மற்றும் மனித உடலும் பஞ்சபூதங்களால் உருவானது என்கிறது. இவை “பஞ்ச மகா பூதங்கள்” என சமஸ்கிருதத்தில் கூறப்படுகின்றன. அவை: விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் என வகைப்படுத்தப்படுகின்றன.
பஞ்ச பூதங்கள் எங்கும் நிறைந்துள்ளன
மனித உடலை பொருத்த வரை விண் என்பது உடலிலுள்ள காலி இடங்களிலும் ; (வாய், சுவாசப்பாதை, வயிறு, …) காற்று அசைவுகளிலும் (தசைகளின் அசைவுகள்) ; நெருப்பு, என்சைம்களின் செயல்பாட்டிலும் (புத்திக்கூர்மை, ஜீரண மண்டலம், வளர்சிதை மாற்றம்); நீரானது உடல் திரவங்களிலும் (பிளாஸ்மா, எச்சில், ஜீரண நீர்கள்); மற்றும் நிலம் என்பது திடமான உடல் வடிவத்திலும் (எலும்புகள், பற்கள், தசை, முடி) விளங்கி வருகிறது.
ஆயுர்வேதத்தில் நோயினை கண்டறியவும், சிகிச்சைகளுக்கும் பஞ்ச மகா பூதங்களே அடிப்படையாய் உள்ளன.
இந்த ஐந்து பௌதீக பொருட்களும், உடலின் பல்வேறு பகுதிகளின் வடிவத்திற்கும், இயக்கங்களுக்கும் மூலக்கூறுகளாய் அமைந்துள்ளன. நம் உடலின் வளர்ச்சியும், திடத்தன்மையும் சத்துகளை பொருத்தே உள்ளன.
ஒவ்வொரு பௌதீக சக்திகளும் நம் தோலின் வடிவம் மற்றும் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.
விண், (ஆகாயம்) வெளிப்புற அதிர்வுகளின் ஊடுருவலை பிரதிபலிக்க உதவுகிறது.
காற்று, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
நெருப்பு, நம் தோலின் பளபளப்பு, வெப்பத்திற்கும் அடிப்படையாய் உள்ளது.
நீர் எனும் பருப்பொருள், ஈரப்பதத்தினை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
மண், தோலின் வடிவத்திற்கும், தடிமனுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது எனலாம்.
ஆயுர்வேதத்தில் தோலின் பராமரிப்பு என்பது, மேற்கண்ட பருப்பொருள்கள் சீர் கெடாமல் சமநிலையில் வைப்பதே குறிப்பாய் கொண்டுள்ளது.
சருமத்தின் ‘பிரகிருதி’ (இயற்கை குணம்) மீட்கப்பட்டால் ஒருவர் தன் சரும அழகினை மகிழ்வோடு உணர வழிவகைக்கும்.
விண் ஆதிக்கம் கொண்ட சருமத்தின் பராமரிப்பு
விண் ஆதிக்கங்கொண்ட சருமம், மற்ற சரும வகைளை விட மிகவும் மெல்லியதாக இருக்கும். ஆனால் பளபளப்பு இன்றி எளிதில் காயப்படக்கூடியதாகவும் இருக்கும். சருமத்தின் துளைகளும் மிகச்சிறியதாய் இருக்கும்.
மேலும் இச்சருமம் வயது அதிகமாகும் போது அதிக மென்மையையே அடையும்.
மிருதுவான மசாஜ் மற்றும் தொடுதல் மட்டுமே இச்சருமத்திற்கு ஏற்றது.
எப்படி பராமரிப்பது
டயட்
விண் ஆதிக்கங்கொண்ட சருமம் உடையவராக இருந்தால், நீங்கள் சிறிது கடுமையான மற்றும் இனிப்பு சுவையுடைய உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் நலனுக்காக சில உணவுகளையும், குளிர்பானங்களையும் கீழே தருகிறோம்.
தினசரி சீசனில் வரும் பழங்களின் சாறுகளை பருகுவது நலம் தரும். மாம்பழங்கள் உங்களுக்கு அதிக பலன் தர வல்லது.
ஓட்ஸ் மற்றும் முழுதானியங்கள் சரும பலம் தருவன. சூப்களும் தங்கள் உணவுகளை எளிமையாக்க உதவுகின்றன.
நீர்ச்சத்து குறையாதிருக்க அதிகளவு தூய்மையான தண்ணீர் மற்றும் பாலினை பருகலாம். பாதாம், வால்நட் மற்றும் உலர்ந்த திராட்சைகளை ஸ்னாக்ஸ்களாக சாப்பிடலாம்.
பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், ஜீரணத்தை மேம்படுத்தி சருமத்தை பாதுகாக்கிறது.
பாதுகாப்பு
நீங்கள் விண் ஆதிக்கங்கொண்ட சருமம் பெற்றிருந்தால், சுற்றுப்புற மற்றும் உணர்ச்சிகளால் எளிதில் சரும பாதிப்பை அடைய முடியும்.
அதனால் கடுமையான வானிலை, சுற்றுப்புற மாசுகள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும்.
மேலும், அதிக ரசாயனங்கள் கொண்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளையும், அதிக நறுமணப்பொருள்களையும் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் கடுமையான நச்சு நீக்கும் மருந்துகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
நெருப்பு ஆதிக்கங்கொண்ட சருமத்தின் பராமரிப்பு முறைகள்
நம் சருமத்தின் இயற்கை பொலிவையும், பளபளப்பையும் நெருப்பாகிய பருப்பொருளே தருகிறது. நெருப்பினால் ஆதிக்கங்கொண்ட சருமம் அதிர்ச்சி தரும் உணர்வுகளால் எளிதில் பாதிக்கப்படும்.
மேலும், அவர்களால் சூரியனின் வெப்பத்தை சிறிது கூட தாங்க முடியாது. உணவில் வால் மிளகு, சிறு மிளகு போன்றவற்றையும் சேர்க்க முடியாது. சில நேரங்களில் கருமிளகும் உடலில் எரிச்சல் தரும்.
எப்படி பராமரிப்பது
டயட்
இவ்வகை சருமம் உடையவர்கள் இனிப்பு, குளிர்ச்சி மற்றும் ஓஜஸை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சேர்க்கலாம்.
காரமான வறுவல் உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக உணவை நேரம் கடந்தோ அல்லது எடுக்காமலிருத்தல் கூடாது.
இதோ உங்கள் சரும நலனுக்காக சில டிப்ஸ்
தினசரி 8 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். கனிந்த மாம்பழச்சாறு மற்றும் பிற பழச்சாறுகளையும் பருகலாம்.
கீரைகள் மற்றும் முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய் மற்றும் தேங்காய் பாலினை உணவில் சேர்ப்பது பயன் தரும்.
துருவிய தேங்காயினை சமைத்த காய்களின் மேல் தூவி உண்ணலாம்.
அரிசி மற்றும் பார்லி ஆகிய தானியங்களையும் சாப்பிடலாம்.
தினசரி ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் பால் அருந்துவது நல்லது. காய்ச்சி ஆற வைத்த பால் பருகுவது மேலும் பலன் தரும்.
பாதுகாப்பு
நீங்கள் நெருப்பின் ஆதிக்கங்கொண்ட சருமம் உடையவரானால், சூரியனின் வெப்பத்தை உங்களால் தாங்க முடியாது.
அதனால் வெளியில் செல்லும் போது, தக்க முன்னெச்சரிக்கை செய்வது நல்லது. மதிய வெயிலில் வெளியில் செல்லாமல் இருப்பது சருமத்தை பாதுகாக்கும். ரோஸ்வாட்டர் மற்றும் பால் சேர்த்து தினமும் முகம் மற்றும் உடலினை துடைப்பது நல்ல பலன் தரும்.
நீரின் ஆதிக்கங்கொண்ட சருமத்தின் பராமரிப்பு
பஞ்சபூதங்களுள் ஒன்றான நீர், நம் உடலினை வளைத்து வேலைகள் புரியவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
நீங்கள் வெளுத்த சற்று தடிமனான தோலினை உடையவரானால், அது நீரினால் ஆனது எனலாம்.
இந்த சருமம் நச்சுகளை தங்க வைக்கும் ஆற்றலுடையது. சில சமயம் எக்சீமா (eczema) போன்ற தீவிர பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.
எப்படி பராமரிப்பது?
டயட்
கருமிளகு மற்றும் சில வால்மிளகுகளும் நல்ல பலனளிப்பவை.
நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அரிசி மற்றும் பார்லி போன்ற முழுதானிங்களை பயன்படுத்தி சமைக்கலாம்.
வெள்ளை முள்ளங்கியை பயன்படுத்தினால், சரும துளைகளில் உள்ள நச்சுகள் நீங்கும்.
சீசனில் கிடைக்கும் பழங்களின் சாறுகள் அருமையான பலன் தரும்.
தினசரி, சிறிது நீரில் 1/4 டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறும், 1 டீஸ்பூன் தேனும் கலந்து குடிக்கலாம். சரும துவாரத்தின் அடைப்புகள் நீங்கி விடும்.
பாதுகாப்பு
உங்கள் சருமத்தில் சேரும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதே இவ்வகை சருமம் உடையவர்களின் முக்கியப் பிரச்சனை ஆகும்.
மூலிகை நீராவிக் குளியல், உங்கள் தோலிலுள்ள அழுக்குகளை எளிதில் வெளியேற்ற உதவும்.
மசாஜ் சிகிச்சை, இரத்த ஓட்டத்தை தூண்டி சருமப் பொலிவை அதிகரிக்கும்.
ஆழ்திசு மசாஜ் (Deep tissue massage) மிகவும் அவசியமான ஒன்றாகும். இது நாள்பட்ட உடல் அழுத்தத்தைப் போக்கி வாதம் வராமல் காக்கும்.
நிலத்தின் ஆதிக்கங்கொண்ட சருமத்தினை பராமரித்தல்
நிலம் எனும் அடிப்படைப் பருப்பொருளானது, சருமத்தின் திடத்தன்மை மற்றும் பருமனை தந்து வடிவத்தைக் கொடுக்கிறது. இயற்கை உங்களுக்கு சிறந்த சருமத்தினை பரிசளித்துள்ளது எனலாம்.
நீங்கள் அதன் மேல் கவனம் செலுத்தினால், ஆயுள் முழுவதும் இளமையோடு இருக்க முடியும்.
எப்படி பராமரிப்பது?
டயட்
நீங்கள் மிருதுவான மற்றும் வெப்பமான உணவு வகைகளை உண்ணலாம்.
பார்லி, வாடாமல்லி ஆகியவை இந்த சருமத்திற்கு ஏற்ற உணவு தானியங்கள் ஆகும்.
முட்டைக்கோசை உணவில் நிறைய சேர்க்க வேண்டும்.
பாகற்காயை சாப்பிட்டு வர கல்லீரல் மாசு நீக்கப்பட்டு சருமப் பொலிவு ஏற்படும்.
மதிய உணவின் போது லஸ்ஸி சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
அதிகளவில் இளஞ்சூடான நீரைக் குடித்தால் அகச்சுத்தம் வெகுவாய் நடக்கும்.
சிட்ரஸ் உள்ள பழங்கள் மிகவும் ஏற்றது.
பாதுகாப்பு
நிலத்தின் ஆதிக்க சருமமாக இருப்பதால் மிக எளிதாக காந்தம் போல் நீங்கள் நச்சுகளை கவர்ந்திழுப்பீர்கள். சரியான சுத்தம் செய்யும் முறையே தக்க பலன் தரும்.
உங்களுக்காக சில டிப்ஸ் தருகிறோம்
குளிப்பதற்கு முன்னர் மசாஜ் செய்து கொள்ளலாம்.
சில்க் கையுறைகளால் மசாஜ் செய்யும் போது தோலின் துவாரங்கள் திறந்து நச்சுகளை வெளியேற்றும்.
வெயில் காலங்களில் தினசரி இரு வேளைகள் குளிக்க வேண்டும்.
மூலிகை நீராவி சிகிச்சைகள் தினந்தோறும் வீட்டிலேயே செய்து வரலாம்.
காற்று ஆதிக்கங்கொண்ட சருமத்தின் பராமரிப்பு வழிகள்
காற்று இவ்வகை சருமத்திற்கு மென்மையையும், ஒளியையும் தருகிறது.
இச்சருமம் வெயில் காலங்களில் எளிதில் வறண்டு விடுகிறது.
மேலும், குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிக பாதிப்புக்குள்ளாகிறது.
எப்படி பாதுகாப்பது?
டயட்
வறண்டு விடும் சருமமாக உள்ளதால், உலர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உணவை தவிர்க்கவோ, ஒதுக்கவோ கூடாது.
சிறிதளவு நெய் அல்லது ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்க்கலாம்.
அரிசி, நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைத்த ஓட்ஸ் மிகச் சிறந்தது.
சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுதல் நல்ல பலன் தரும்.
சுத்தமான குடிநீரை நாள் முழுவதும் அதிகம் குடிக்க வேண்டும்.
சூடாக்கப்பட்ட பாலினை குடித்தல் நலம்.
ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட்டுகளை சாப்பிடுவது சருமத்திற்கு அழகை தரும்.
இவற்றை பால் மற்றும் ஓட்ஸ் உணவுகளிலும் சேர்த்து உண்ணலாம்.
பாதுகாப்பு
உங்கள் சருமத்தினை பாதிக்கும் தன்மை குளிர் மற்றும் வறட்சி போலவே, நீர்ப்பற்றாக்குறைக்கும் உண்டு.
அதனால், அதிகமான அளவு நீர் குடிக்கும் போது, சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும்.
முன்பு கூறியது போல, கடுமையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட சரும அழகு பொருட்கள் உபயோகிக்க வேண்டாம்.
கைலாஷ்