- விக்கல் – விக்கல் எடுப்பவரை உட்கார வைத்து குடிக்க தண்ணீர் கொடுக்கவும். மூச்சை நன்றாக இழுத்து வெளிவிடச் செய்யவும். ஒரு ஏலக்காய் பொடியை தேனுடன் குழைத்து உறிஞ்சலாம். பழைய கயிற்றை எரித்து அதன் புகை அல்லது உளுத்தம் பருப்பை எரித்து அதன் புகை நுகரச் செய்யலாம். விக்கல் நீடித்தால் மருத்துவரிடம் செல்லவும்.
- காயங்களில் உதிரப்போக்கு – சிறு காயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு தானாகவே நின்றுவிடும். நிற்காவிட்டால் ஐஸ் கட்டிகளை சுத்தமான துணியில் சுற்றி வைக்கவும். மஞ்சள் களிம்மை பூசலாம். காயத்தில் மஞ்சள் களிம்பை பூசி, பாண்டேஜ் துணியால் கட்டவும். காயம்பட்டவரை படுக்க வைக்கவும். அவர் தலை, உடலை விட சற்று தாழ, கீழே இருக்கட்டும். இல்லை கால்களை சிறிது உயர்த்தி வைக்கவும். வெளிக்காயங்களுக்கு சந்தனப்பொடியை களிம்பாக்கி போடலாம். ஒரு கப் சூடான பாலில் 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி, குங்குமப்பூ (கிடைத்தால்) கலந்து கொடுக்கலாம்.
- பேதி – அரை கப் நீரில், ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சி ஒரு கிராம் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலக்கவும். இந்த கலவையை தினம் 2,3 வேளை கொடுக்கவும். மோர் கொடுக்கலாம். அரோரூட் கஞ்சி பேதியை நிறுத்தும்.
- காதுவலி – 2 அல்லது 3 ‘பற்கள்‘ பூண்டை எடுத்து தோலுரிக்கவும். சிறு துண்டுகளாக நறுக்கி, 100 I.L, நல்லெண்ணை (அ) கடுகெண்ணையுடன் சேர்த்து 5 நிமிடம் சூடு செய்யவும். இறக்கி வடிகட்டி, எண்ணை குளிர்ந்தவுடன் இரண்டு (அ) மூன்று சொட்டுகள் காதில் விடவும். வெங்காய சாறு (1 ஸ்பூன்) தேன் (அரை ஸ்பூன்) கலந்தும் காதில் விடலாம்.
- கட்டிகள் – வெற்றிலையை அனலில் காட்டி சூடு செய்து, சுத்தமான விளக்கெண்ணையை தடவி, கட்டிமேல் போடவும். இதை 2,3 தடவை மாற்றவும். கட்டி பழுத்து உடைந்து விடும். தவிர ஒரு டீஸ்பூன் இஞ்சிப்பொடியுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள பொடியை சேர்த்து கட்டியின் மேல் பூசலாம். இஞ்சிப்பொடியுடன் பெருங்காயத்தையும் சேர்க்கலாம். மஞ்சள் பொடியை துளசி சாற்றில் குழைத்தும் பூசலாம். கடுகை அரைத்து செய்த களிம்பையும் பூசலாம்.
- முதுகுவலி – இஞ்சியை அரைத்து, விழுதை வலிக்கும் இடத்தில் தடவலாம். வீட்டில் யூகலிப்டஸ் தைலம் இருந்தால் அதை தடவலாம். பூண்டுத் தைலமும் வலியை குறைக்கும். 5 பூண்டு “பற்களை” தோலுரித்து 50 மி.லி. எள் எண்ணையில் (அல்லது கடுகெண்ணையில்) காய்ச்சவும். 20 நிமிடம் காய்ச்சிய பின், இறக்கி ஆற வைத்து வடிகட்டி உபயோகிக்கவும்.
- ஜலதோஷம் – சுக்குப்பொடி, கருமிளகுப் பொடி, துளசி இலைகள் இவை கலந்து கஷாயம் செய்து கொள்ளவும். இதை 3 (அ) 4 தடவை எடுத்துக் கொள்ளவும். இஞ்சி (துருவியது) ஒரு மேஜைக்கரண்டி, இலவங்கப்பட்டை பொடி ஒரு தேக்கரண்டி அதிமதுரம் ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து ஒரு லிட்டர் நீரில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். நீர் கால் பாகமாக சுண்டி விடும். இத்துடன் தேனை சேர்த்து குடித்து வரவும். தினமும் நெல்லிக்காய் ஒன்றை சாப்பிட்டு வரவும். இதிலுள்ள விட்டமின் ‘C’ உடலுக்கு உரமூட்டும்.
- தலைவலி – நல்லெண்ணை கற்பூரம் கலந்த எண்ணையை தடவி, பின் சூடாக ஒத்தடம் கொடுக்கலாம். இது சைனஸ் தலைவலியை போக்கும். பொட்டில் வலிக்கும் தலைவலிக்கு சந்தனப் பொடி களிம்பை பொட்டில் தடவலாம். மருதாணி இலைகளின் விழுது, அல்லது இலவங்கப்பட்டை விழுதையும் தடவலாம். ‘ஜிலேபி‘ கிடைத்தால் 2-3 ஜிலேபியை ஒரு கப் சூடான பாலில் போட்டு பிறகு அதை குடிக்கவும்.
- சுளுக்கு – கற்பூரம் கலந்த நல்லெண்ணையை தடவலாம்.
- அதிகம் சாப்பிட்டு விட்டால் – விருந்து சாப்பாடு அதிகமாகி விட்டால் ஏற்படும் அவஸ்தைக்கு – தனியா பொடி, இஞ்சிப்பொடி ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி எடுத்து 2 கோப்பை நீரில் காய்ச்சி கஷாயமாக்கவும். இதை ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு மேஜைக்கரண்டி குடித்து வரவும்.
