பண்டிகைக் கால இனிப்பு வகைகள்-1

Spread the love

தித்திப்பு சேவு

தேவையான பொருட்கள்

கடலை மாவு        –100கி

அரிசி மாவு          –25கி

சர்க்கரை            –125கி

நெய்                –2டே.ஸ்பூன்

ரீபைன்ட் எண்ணெய்-1/4கிலோ

ஏலப்பொடி           –1/2ஸ்பூன்

தண்ணீர்             –1/4கரண்டி

செய்முறை

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சலித்துக் கொண்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும்.

நன்றாகப் பிசைந்த பின் மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யைச் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். நெய் அதிகமாகச் சேர்த்துப் பிசைவதால் தண்ணீரைப் பார்த்துச் சேர்த்துப் பிசையவும்.

பிசைந்த கலவை விண்என்று இருக்க வேண்டும். ரீபைன்ட் எண்ணெய்யை அடுப்பில் காய்ச்சவும். சூடு வந்த பிறகு எண்ணெய்க்கு நேரே சேவு கட்டையைப் பிடித்துக் கொண்டு, ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டையின் மேல் அழுத்தித் தேய்க்க வேண்டும். தேய்க்கும் பொழுது மேலிருந்து கீழாக ஒரே பக்கமாகத் தேய்க்க வேண்டும்.

வெந்த சேவுகுச்சிகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் தண்ணீரைக் கலந்து அடுப்பில் சூடாக்கவும். சர்க்கரை கொதித்து அழுக்கு மேலாக ஒதுங்கும். அரை டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றினால் அழுக்கு ஒரே பக்கமாகத் திரண்டு வரும். அதை எடுத்து விடவும். அப்பொழுது சேவுவெளுப்பாக இருக்கும்.

ஜீராவை நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொண்டு, ஏலப்பொடியைப் போட்டு, வெந்த சேவு குச்சிகளையும் போட்டுக் கலக்கவும்.

சேவுசர்க்கரைப் பாகை உறிஞ்சிக் கொண்டு சிறிது நேரத்தில் இறுகி, பூத்தாற் போல் இருக்கும். பிறகு தாம்பாளத்தில் கொட்டி உதிர்த்து விடவும்.

ஜாங்கிரி

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு     –1/4கிலோ

அரிசி (பச்சரிசி)       –25கி

சர்க்கரை             –11/4கிலோ

நெய்                 –1/2கிலோ

தண்ணீர்             –1/2லிட்டர்

ஏலப்பொடி           –1/4ஸ்பூன்

கேசரிப் பவுடர்       –1/4ஸ்பூன்

செய்முறை

உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சுமார் முக்கால் மணி நேரம் ஊற வைத்து, ‘கரகரவென்று அரைத்துக் கொண்டு, கேசரிப் பவுடரையும் சேர்த்துக் கொள்ளவும். இதை மொத்தமாக வைத்துக் கொள்ளவும். (ஜாங்கிரியை நெய்யில் பொரிப்பதாக இருந்தால் அரைக்க அரைக்க ஃபிரெஷ்ஷாகத்தான் பொரிக்க வேண்டும். அதனால் பொரிப்பதற்கு முன்னால் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நைசாக அரைக்க வேண்டும்).

சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, லேசான கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க விடவும். (பாகு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது கருப்பு நிறம் கலந்த நுரை வரும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை விட்டால் அழுக்கு மொத்தமாக ஒரு இடத்தில் சேரும். அதை நீக்கி விடவும்) கம்பிப் பதம் வரை கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். ஏலப்பொடி சேர்க்கவும்.

கரகரப்பாக அரைத்த உளுத்தம் பருப்பை சிறிது எடுத்துக் கொண்டு, தண்ணீரைத் தெளித்து மேலும் அரைக்கவும். அதே சமயத்தில் நெய்யை மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

பால் கவரை நன்றாக அலம்பித் துடைத்து ஒரு பக்கம் மாவு போடுவதற்காக, வெட்டிக் கொள்ளவும். கீழ்ப்பக்கம் ஒரு ஓரப் பகுதியில் கத்தரிக்கோலைக் கொண்டு சிறிய துவாரமாக வெட்டிக் கொள்ளவும். (சிலர் வீட்டில் ஜாங்கிரி பிழிவதற்காகவென்று ரைட்டுஎன்று சொல்லப்படும் துணியை ஏற்பாடாகத் தைத்து வைத்திருப்பார்கள்).

சிறிது மாவைக் கவரில் போட்டு, மேற்புறத்தை நன்கு முறுக்கிக் கொண்டு, (மாவு வெளியே வராமல்) அல்லது ரப்பர் பேண்டை இறுக்கிப் போட்டுக் கொண்டு, நெய்யில் முதலில் ஒரு வட்டமும், பிறகு அதன் மேலேயே எதிர்புறமாக (ரிவர்சில்) சிறிய சிறிய வளையங்கள் போன்ற அமைப்பைப் போன்று சுற்றிக் கொண்டு, தொடங்கிய இடத்தில் வந்து முடிக்கவும்.

நன்றாக நெய்யில் திருப்பி விட்டு, உடனேயே சூட்டுடன் ஜீராவில் நனைக்கவும். லேசாக அழுத்தியும் விடவும். பிறகு அடுத்த ஜாங்கிரியைப் போடும் பொழுது, முதல் ஜாங்கிரியை எடுத்துத் தட்டில் வைக்கவும்.

ஜீரா இறுகிவிட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து இறக்கலாம்.

பாதுஷா

தேவையான பொருட்கள்

மைதா மாவு         –1/2கிலோ

சர்க்கரை            –350கி

வெண்ணெய்         –150கி

நெய்                –150கி

சமையல் சோடா     –1/4ஸ்பூன்

ரீபைன் எண்ணெய்   –1/4கிலோ

தண்ணீர்             –1/4டம்ளர்

கேசரிப் பவுடர்       –2சிட்டிகை

ஏலப்பொடி           –1/2ஸ்பூன்

செய்முறை

மைதா மாவுடன், சமையல் சோடாவைச் சேர்த்து மூன்று தடவை சலிக்கவும். சலித்த மாவுடன் கேசரிப் பவுடரைப் போட்டு, வெண்ணெயையும் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். (சுமார் பத்து நிமிடங்களுக்கு).

இந்த மாவுடன் கொஞ்சமாகத் தண்ணீரைச் சேர்த்துப் புட்டுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். இந்த மாவைக் கொஞ்சமாக எடுத்து நன்கு தேய்த்து, உருட்டி, உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் வைத்து அழுத்தினால், வில்லைகளாக இருக்கும். இந்த வில்லைகளில் நடுவில் கட்டை விரலால் அழுத்தினால், நடுவில் லேசாகப் பள்ளமாகும். சுற்றிலும் மேடாகவும் இருக்கும்.

நெய்யுடன் எண்ணெய்யை அடுப்பில் காய வைத்து, (நிதானமாக அல்லது சிறிய தீயில்) வில்லைகளைப் போட்டுப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீருடன், சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும், பூத்து வரும் அழுக்கை அகற்றி விடவும்.

மீண்டும் சர்க்கரையைக் கொதிக்க விட்டு ஏலப்பொடி சேர்த்து, கம்பிப் பாகு பதத்தில் இருக்கும் படி அடுப்பிலேயே வைக்கவும்.

பொரித்த மைதா வில்லைகளை, சர்க்கரைப் பாகில் போட்டு, திருப்பி விட்டு, எடுத்துத் தட்டில் தனித்தனியாக வைக்கவும். அடுப்பிலேயே ஜீரா இருப்பதால் இறுகிக் கொண்டு விடும். ஆகையால் இறுகிவிட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

ரவை உருண்டை

தேவையான பொருட்கள்

ரவை           –1கப்

சர்க்கரை  –11/4கப்

நெய்      –3/4கப்

முந்திரி   –25கி

செய்முறை

ரவையை வெறும் வாணலியை அடுப்பில் வைத்து நன்றாக வறுக்கவும் வறுத்த ரவையை ஆற வைக்கவும். ரவையையும், சர்க்கரையும் நன்கு கலந்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.

முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில், வறுத்துக் கொள்ளவும். ரவை, சர்க்கரை கலந்த மாவுடன் வறுத்த முந்திரியைச் சேர்க்கவும்.

நெய்யை அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ந்ததும் கலவையில் ஊற்றி நன்றாகக் கலந்து வைக்கவும். சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

அதிசரம்

தேவையான பொருட்கள்

அரிசி                –1/2கிலோ

பாகு வெல்லம்  –1/2கிலோ

நெய்           –1டே.ஸ்பூன்

ரீபைன்ட் எண்ணெய்-1/2கிலோ

ஏலப்பொடி      –1டே.ஸ்பூன்

தண்ணீர்        –11/2கரண்டி

வாழை இலை ஏடு   –1அல்லது2

செய்முறை

அரிசியை நன்கு கரைத்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு மீண்டும் களைந்து, தண்ணீரை வடியவிடவும். பிறகு காய்ந்த துணியில் பரவலாக நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியைக் கையில் பிடித்து மூடிப் பார்த்தால், பிடித்து வைத்தது போலிருக்கும். விரல்களை விட்டால் உதிர்ந்து விடும்.

இந்தப் பக்குவத்தில் உலர்ந்த அரிசியை மிஷினில் திரிபோல் மாவு வராமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். அந்த மாவைச் சலித்து எடுக்கவும்.

வெல்லத்தில் தண்ணீரை ஊற்றி, கரைந்தவுடன் மண் இல்லாமல் வடிகட்டி, அடுப்பில் பாகு வைக்கவும். பாகு கொதித்து, வாசனை வரும் பொழுது, அதாவது தக்காளிப் பழப்பதம்என்று சொல்லுகின்ற, தொய்வான, பாகு பதத்தில் அடுப்பில் இருந்து எடுத்து விட வேண்டும்.

சலித்த மாவைத் தாம்பாளத்தில் பரவலாகக் கொட்டி, ஏலப்பொடியைப் போட்டு, சிறிது சிறிதாகப் பாகை விட்டுக் கரண்டிக் காம்பினால் கிளறிவிடவும். (அடுப்பில் வைக்கக் கூடாது).

கிளறிய மாவு சற்று நெகிழ்தலாக இருக்க வேண்டும். இதை அப்படியே பத்து மணி நேரம் ஊற விட வேண்டும். ஊறிய மாவு கெட்டியாக இருக்கும்.

அடுப்பில் எண்ணெய்யைக் காய வைத்து, வாழை இலையில் நெய்யைத் தடவி, உருண்டையாக மாவினை எடுத்துக் கொண்டு, தட்டி எண்ணெய்யில் போடவும். (ரொம்பவும் மெல்லியதாகத் தட்டினால் உதிர்ந்து விடும்).

வெந்த அதிரசத்தை, தட்டில் ஓரமாகத் தனித்தனியாக வைத்து வரவும். தட்டைக் கொஞ்சம் சாய்வாக வைத்தால், வடித்தும் அதிகமாக இருக்கும் எண்ணெய் தாழ்வான இடத்தில் போய்த் தங்கி விடும். (இதை மீண்டும் எண்ணெய்யில் ஊற்றலாம்.

போளி

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு –1கப்

வெல்லம்       –3/4கப்

மைதா மாவு    –11/2கப்

நெய்           –1/2கப்

ஏலக்காய்       –4பொடித்தது

மஞ்சள் தூள்    –1/2டீஸ்பூன்

தேங்காய்ப்பூ    –1/2கப்

செய்முறை

கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுத்து ஊற வைக்கவும். ஊறிய பருப்பை வேக வைத்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நெய்விட்டு, தேங்காய்ப் பூவை பொன்னிறமாக வறுக்கவும். அதிலே அரைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை சேர்த்து, நன்றாகக் கிளறி வெல்லத்தைத் பொடித்துச் சேர்க்கவும்.

வெல்லம் கரைந்து கடலைப்பருப்பு நன்கு வெந்ததும் ஏலக்காய்தூளைச் சேர்த்து இறக்கவும். நன்றாக ஆறிய பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு நெய் விட்டு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொண்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டவும். அதன் நடுவில் பூரண உருண்டைகளை வைத்து உருட்டி மீண்டும் வட்ட வடிவில் சமமாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் போளிகளை போட்டு, சிறிதளவு நெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.

மைசூர் பாகு

தேவையான பொருட்கள்

கடலை மாவு   –1கப்

சர்க்கரை       –2கப்

நெய்           –3கப்

தயிர்           –1/4ஸ்பூன்

சமையல் சோடா-1சிட்டிகை

தண்ணீர்        –1கரண்டி

செய்முறை

ஒரு கப் நெய்யைக் காய்ச்சி, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தண்ணீரில் போட்டு, அடுப்பில் ஏற்றி, நன்கு கெட்டியாகக் கம்பிப் பாகாக வரும் வரை கொதிக்க விடவும். (பாகு கொதிக்கும் பொழுது). அந்தப் பாகில் வறுத்த கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.

பாக்கி நெய்யைச் சுட வைத்து, இளக்கி, கொஞ்சம் கொஞ்சமாக வெந்து கொண்டிருக்கும் கடலை மாவுக் கலவையில் ஊற்றவும்.

ஒவ்வொரு முறை ஊற்றும் பொழுதும் புசுபுசுவென்று நுரைத்துக் கொண்டு வரும்.

மொத்த நெய்யையும் ஊற்றி முடித்துக் கிளறிக் கொண்டிருக்கும் பொழுது, ஊற்றப்பட்ட நெய் மீண்டும் வெளியே (மாவுக்கு மேல்) கக்கிக் கொண்டு வரும்.

பிறகு நாலாபுறத்திலிருந்தும், நுரைபோல் பொங்கி பொரபொரவென்று கூடு விட்டாற்போல் தெரியும். உடனேயே நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும். கொட்டியவுடன் பூரித்துக் கொண்டு வரும்.

தாம்பாளத்தை லேசாக அசைத்துக் கொட்டிய கலவையைச் சமனப்படுத்தி, சிறிது ஆறிய பின் வில்லைகளாகப் போடவும்.

ஜிலேபி

தேவையான பொருட்கள்

மைதா மாவு         –2கப்

புளித்த மோர்        –1/2கப்

சோடா உப்பு         –1சிட்டிகை

செய்முறை

மைதா மாவைக் கரைத்துக் கொண்டு அதில் மோர், சோடா உப்பு கலந்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிதளவு ஃபுட் கலர் கலந்து கொள்ள வேண்டும். ஜிலேபி பிழிவதற்கென்று கடைகளில் துணி கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது காட்டன் துணியில் பட்டன் ஹோல் ஸ்டிச் செய்து அதன் வழியாகவும் ஜிலேபி பிழியலாம்.

கலந்து வைத்திருக்கும் கரைசலை துணியில் இட்டு, அடுப்பில் காய வைத்திருக்கும் எண்ணெய் (அ) நெய்யில் 2 சுற்றுகள் வட்டமாகப் பிழிய வேண்டும். ஜிலேபி வெந்து பொன்னிறமாக வந்தவுடன், பிசுக்கு பதத்தில் சர்க்கரைப் பாகைச் செய்து, அதில் செய்து வைத்திருக்கும் ஜிலேபிகளைப் போட்டு, சிறிது நேரத்தில் எடுத்து விட வேண்டும். சுவையான ஜிலேபி ரெடி!

காஜு சாக்கோ ரோல்ஸ்

தேவையான பொருட்கள்

முந்திரி, சர்க்கரை          -தலா100கி

கோகோ                  -தேவையான அளவு

லிக்விட் குளுக்கோஸ்     -சிறிதளவு

செய்முறை

முதலில் முந்திரியை நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகை கம்பிப் பதத்தில் செய்து கொண்டு, அதில் பொடித்த முந்திரியைப் போட்டு, கை விடாமல் கிளறவும். பின்பு, அதில் லிக்விட் குளுக்கோஸைப் போட்டு கிளறி, அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கி வைக்கவும்.

இப்போது கலவை சப்பாத்தி மாவு போல் வரும். கலவையில் கோகோவை சேர்த்து நீள உருண்டையாக செய்து கொண்டு, அதன் மீது முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.

ட்ரை ஜாமூன்

தேவையான பொருட்கள்

பனீர், மைதா, பால்கோவா

(சர்க்கரை சேர்க்காதது)     -தலா1கப்

சர்க்கரை                  –4கப்

செய்முறை

பனீர், மைதா, பால்கோவா இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நன்கு அழுத்திப் பிசைய வேண்டும். 4:1 என்கிற விகிதத்தில் சர்க்கரை, தண்ணீர் எடுத்துக் கொண்டு, சர்க்கரைப் பாகைப் பிசுக்குப் பதத்தில் செய்து கொள்ள வேண்டும். பிறகு பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்து, தயாராக வைத்திருக்கும் பாகில் போட வேண்டும். பரிமாறு முன் பாகிலிருந்து எடுத்து விட வேண்டும்.

7 கப் தேவை

கடலைமாவு         –1கப்

பால்                 –1கப்

தேங்காய் பூ          –1கப்

டால்டா(அ) நெய்     –1கப்

சர்க்கரை            –3கப்

செய்முறை

கடலைமாவு, பால், தேங்காய் பூ, டால்டா அல்லது நெய், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைக்கவும். நன்றாக வெந்து சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டு போடவும். சீக்கிரமாக சுலபமாகக் செய்யக் கூடிய இனிப்பு வகை இது.

பாசிப்பருப்பு மாவு உருண்டை

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு –1கப்

சர்க்கரை       –11/4கப்

நெய்           –1கப்

செய்முறை

பயத்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து பருப்பை நன்றாக பச்சை வாசனை போக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பருப்பை நன்றாக ஆற வைத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

சர்க்கரையையும் நன்றாக நைசாக மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன், சலித்த சர்க்கரைப் பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

நெய்யை அடுப்பில் வைத்து நன்றாக சூடு பண்ணவும். அதே நேரத்தில் நெய் முறிந்து விடக்கூடாது. நெய்யை எடுத்து மாவில் ஊற்றினால் மாவு நுரையாக வரும். அது தான் சரியான பதம்.

சுட வைத்த நெய்யை மாவில் ஊற்றி நன்றாகக் கிளறி சேர்த்து வைக்கவும். அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகமாக செய்வதாக இருந்தால் வறுத்த பருப்பையும், சர்க்கரையையும், மிஷினில் கொடுத்து அரைக்கவும். கலந்த மாவு அதிகமாக இருந்தால் 2, 3 பகுதிகளாகப் பிரித்து நெய் சுட வைத்து ஊற்றிச் சேர்க்கவும். நெய் கலந்த மாவு ஆறிவிட்டால் உருண்டைகள் பிடிக்க வராது.

மனகோலம்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு    –5ஆழாக்கு

உளுத்தம்பருப்பு –2ஆழாக்கு

பச்சரிசி         –1ஆழாக்கு

அச்சுவெல்லம்  –1கிலோ

பொட்டுக்கடலை     –2ஆழாக்கு

சர்க்கரை       –1/2ஆழாக்கு

தேங்காய்       –1

எண்ணெய்      -தேவைக்கேற்ப

செய்முறை

பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பைத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். பச்சரிசியை பொரிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைக்கவும். மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

மாவைத் தண்ணீர் விட்டு பிசையவும். அடுப்பில் வாணலியில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். மாவை தேன் குழல் அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுக்கவும். பொரித்த தேன்குழல், பொட்டுக்கடலையை நன்றாக சேர்த்து வைக்கவும். அதனுடன் தேங்காயைத் கீறி பல் பல்லாக நறுக்கி வறுத்துச் சேர்க்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லத்தைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு வைக்கவும்.

பாகை சேர்த்து வைத்துள்ள தேன்குழல் மீது ஊற்றிக் கிளறவும். உதிர்ந்து எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விடும் சர்க்கரைப் பொடியைத் தூவி கலந்து விடவும்.

தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய்   –1கப்

சர்க்கரை       –1கப்

முந்திரிப் பருப்பு –25கிராம்

ஏலக்காய்த்தூள் –4பொடித்தது

நெய்           –4ஸ்பூன்

செய்முறை

தேங்காயை ஓடு இல்லாமல் நன்றாகத் துருவி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, கம்பிப் பாகு வைக்கவும்.

பாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். நன்றாகச் சுருண்டு வரும் போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

பாதி ஆறியதும் துண்டு போட்டு வைக்கவும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.

உணவு நலம் அக்டோபர் 2011

பண்டிகைக் கால, இனிப்பு வகைகள், தித்திப்பு சேவு, தித்திப்பு சேவு செய்முறை,

ஜாங்கிரி, ஜாங்கிரி செய்முறை, பாதுஷா, பாதுஷா செய்முறை, ரவை உருண்டை,

ரவை உருண்டை செய்முறை, அதிசரம், அதிசரம் செய்முறை, போளி, போளி செய்முறை, மைசூர் பாகு, மைசூர் பாகு செய்முறை, ஜிலேபி, ஜிலேபி செய்முறை,

காஜு சாக்கோ ரோல்ஸ், காஜு சாக்கோ ரோல்ஸ் செய்முறை, ட்ரை ஜாமூன்,

ட்ரை ஜாமூன் செய்முறை, 7 கப், 7 கப் செய்முறை, பாசிப்பருப்பு மாவு உருண்டை, பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை, மனகோலம், மனகோலம் செய்முறை, தேங்காய் பர்பி, தேங்காய் பர்பி செய்முறை,


Spread the love