வெந்தயக்கீரை சமையல்

Spread the love

வெந்தயக்கீரை என்பது முளைத்து வளர்ந்துள்ள சுமார் 3 அங்குலம் உயரமுள்ள வெந்தயத்தையே குறிக்கும். வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது. வெந்தயக்கீரை மேலும் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது.

வெந்தயக்கீரை எளிதாக மல ஜலம் கழிய வழி செய்திடும். சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது. நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.

வெந்தயக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை தாராளாமாக உள்ளது. வெந்தயக்கீரையை எவரும் எளிமையாகத் தாங்கள் வீடுகளிலேயே தேவைக்கு ஏற்ப வளர்த்துக் கொள்ளலாம். வீடுகளில் இருக்கக் கூடிய பயனற்ற டப்பாக்கள் மற்றும் தகரங்கள் அல்லது தொட்டிகளில் சிறிது குப்பை மண்ணை போட்டு வைத்துக் கொண்டு அதில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வர வெந்தயக்கீரை வீட்டிலேயே நினைத்த மாத்திரத்திலேயே கிடைக்கும்.

நன்கு கீரையாக வளர்ந்த வெந்தயம் பயன்தர சுமார் 7 – 10 நாட்கள் ஆகும். எனவே 3 – 4 தொட்டிகளில் மண் நிரப்பி 10 நாள் இடைவெளியில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வந்தால் வாரம் ஒரு நாள் வெந்தயக்கீரை தொடர்ச்சியாக கிடைத்து விடும்.

வெந்தயக்கீரை உணவுகள்

வெந்தயக்கீரை சூப்

தேவை

வெந்தயக்கீரை         1 கைபிடி (பொடியாக நறுக்கியது)

தக்காளி                 1 (நறுக்கியது)

வெங்காயம் (பெரியது) – 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய்         – 2

பால்                      1 கப்

சோளமாவு               1 டே.ஸ்பூன்

மிளகு                     – 1 டீஸ்பூன்

நெய் (அ) எண்ணெய்     1 டே.ஸ்பூன்

கறிவேப்பிலை             – சிறிது

உப்பு                         – தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தை அடுப்பலிட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்டு வதக்கவும்.

பின்னர் சோளமாவைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.கீரையை அதனுடன் சேர்த்து வேக விடவும்.

எல்லாம் வெந்தவுடன் அதில் பாலை சேர்த்து பின்னர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவை

கோதுமை மாவு       2 கப்

வெந்தயக்கீரை         2 கட்டு

மிளகாய்த்தூள்         1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள்    1 டீஸ்பூன்

மஞ்சள்தூள்             – சிறிது

சீரகம்                    1 டீஸ்பூன்

தயிர்                      – 1 கப்

எண்ணெய்                – தேவையான அளவு

உப்பு                       – தேவைக்கேற்ப

செய்முறை

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் போடவும். அதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து தயிர் சேர்த்து பிசைந்து மாவில் சப்பாத்தி இட்டு தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

வெந்தயக்கீரை குழம்பு

தேவை

புளி – எலுமிச்சை அளவு

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

சிறிய வெங்காயம் – 200 கிராம்

வெந்தயக்கீரை – 2 கட்டு

தக்காளி – 2 பெரியது

தேங்காய்துருவல் – 3 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ளவும்.தேங்காய் துருவலும் சீரகம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதித்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.

உணவு நலம் டிசம்பர் 2010

வெந்தயக்கீரை, சமையல், வெந்தயக்கீரை, சிறுநீர்ப் பெருக்கி, வயிற்றுப்பொருமல், இருமல், சளி, நீரிழிவு நோய், வெந்தயக்கீரை, உணவுகள், வெந்தயக்கீரை, சூப்,

செய்முறை, வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, உப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, சப்பாத்தி, செய்முறை, கோதுமை மாவுவெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயக்கீரை, குழம்பு, செய்முறை, கீரை, வெங்காயம், தக்காளி,


Spread the love