கசப்பும் கல்கண்டாகும் வெந்தயக் கீரையால் விளையும் நன்மைகள்

Spread the love

Fenugreek எனும் ஆங்கிலத்திலும் மேதி என்று இந்தியிலும் அறியப்படுகின்ற மஞ்சள் நிறமும் இனிய மணமும் கொண்ட வெந்தயம் உடல் நலம் காப்பதற்குப் பெரிதும் உதவுகிறது. சமையலில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்ற மசாலாப் பொருள்களில் ஒன்று வெந்தயம். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்திருந்து காலையில் எழுந்ததும் அதைச் சாப்பிடுவது என்பது வட இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகின்ற ஒன்றாகும்.

அடிப்படையில் வெந்தயத்தை விட அதிகம் உடல் நலத்துக்கு உதவுவது வெந்தயக்கீரையே. இது இயற்கையான முறையில் உணவில் நார்ச்சத்து இருக்குமாறு செய்கிறது. சாப்பிடுகின்ற உணவில் நார்ச்சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவு கூடாமல் இருப்பதற்கும், நல்ல இதயப் பாதுகாப்பிற்கும் நார்ச்சத்து உதவுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் LDL  என்னும் தீய கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து HDL என்றும் நன்மை தரும் கொலஸ்ட்ராலைச் சரியான அளவில் வைக்கும் பணியை நார்ச்சத்து செய்கிறது. 

பெருங்குடலில் இருந்து வெளியேறுகின்ற மலத்தின் அளவையும் உருவையும் இது அதிகரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகத் தொல்லை தரும் வயிற்றுப் பொருமலைத் தவிர்க்கிறது. தேவைக்கு அதிகமாக உண்ணுவதையும், அதிகப் பசியையும் இது சீராக்குகிறது. அன்றியும் வெந்தயக்கீரையில் காணப்படும் நார்ச்சத்து கரையக் கூடிய தன்மையுடையது. (Soluble fibre) இதனால் இரத்தச் சர்க்கரை அளவு நிலை நிறுத்தப்படுகிறது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் குறையச் செய்வதுடன் ஒரே நிலையில் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

இது தவிர வெந்தயக்கீரை ஆஸ்த்மா மற்றும் மூச்சுக்குழல் நோய்களுக்கும், எலும்பு, மூட்டுவலி போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாகும். இயல்பாகவே வெந்தயம், இரத்தச் சர்க்கரை அளவை நெறிப்படுத்துவதுடன், Antioxidants எனப்படும் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருளினால் தனிம அணுக்களில் இருந்து பாதுகாக்கிறது. வட இந்தியாவில் பெரிய அளவில் பயிரிடப்படுகின்ற வெந்தயம் இரத்த சோகையை நீக்குகிறது. குறிப்பாக பூப்படையாத பெண் குழந்தைகள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் அதில் உள்ள கால்ஷியமும் அயச்சத்தும் சேர்ந்து இரத்த அளவை உயர்த்தி விரைவில் பூப்படையச் செய்கிறது.

காய்கறி உணவு – கவனம் 

முற்றிலுமாக அசைவ உணவுகளை நீக்கிவிடுவதால் சில நன்மைகள் ஏற்படுவது உண்மை தான். குறிப்பாக மரக்கறி உணவினால் இதய நோய்களும் சில வகைப் புற்றுநோய்களும் தவிர்க்கப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சில வகையான வயிற்று நோய்களும் பெருங்குடல் தொல்லைகளும் தவிர்க்கப்படுகின்றன என்பதும் உண்மை. என்றாலும் மரக்கறி உணவை உட்கொள்வதால் மட்டும் உடல் எடையைக் குறித்து மெலிவாக ஆகி விட முடியாது. உண்ணுகின்ற உணவின் கலோரிச்சத்து கவனிக்கப்பட வேண்டும். அத்துடன் மாவுப்பொருள், புரோட்டீன் மற்றும் கொழுப்பின் அளவுகள் கவனமுடன் பின்பற்றப்பட வேண்டும். 

சதி வலை – 1

அசைவ உணவு சாப்பிடாதவரை, மற்ற உணவுகளை வேண்டும் அளவு சாப்பிடலாம்! நல்ல காய்கறி உணவு முறையைப் பின்பற்றி உண்டாலும் வறுத்த நிலக்கடலை, பாதாம் மற்றும் முந்திரிப்பருப்பு, ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருள்களை Milk products) உண்ணும் போது தனித்தனியாகக் கலோரியைக் கணக்கிட்டு உண்ண வேண்டும். ஆயத்த உணவுகளை வாங்கும் போது லேபிளில் தரப்பட்டுள்ள கலோரி அளவுகளைக் கவனமுடன் படித்துப் பாருங்கள். குறிப்பாக சீஸ், பனீர் போன்றவற்றில் நிறை செறிவுற்ற (Saturated) கொழுப்புகள் மிகுந்தி ருக்கும். சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றில் அதிகமாக நெய்யை ஊற்றி உண்பதுவும் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவதற்கு இணையாகும் அளவிற்கு அதிகமாக உண்ணும் உருளைக்கிழங்கும் உடல் எடையைக் கூட்டும்.

சதி வலை – 2

நான் சாப்பிடுகின்ற காய்கறி உணவில் வேண்டிய அளவில் விட்டமின் சத்துக்கள் இருக்கின்றன. பல நேரங்களில் இது உண்மையாக இருப்பதில்லை. கலோரி அளவைக் கணக்கிட்டுக் கொண்டு சைவ உணவுகளை உண்ணும் போது போதிய அளவு புரோட்டீனும், விட்டமின்களும் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. புரோட்டீன் தேவையை சிறு தானியங் கள், பயறுகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் போன்றவற்றைக் கொண்டு பூர்த்தி செய்யுங்கள். கேரட், தக்காளி, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்க்கத் தவறாதீர்கள். தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் சில விட்டமின் மாத்திரைகளைத் தேவைக்கேற்ப உட்கொள்ளலாம்.

சதி வலை – 3

கெட்சப், சாஸ் போன்றவைகளை உணவின் ருசிக்காக வேண்டிய அளவு சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் ஒரு தவறான சிந்தனை, வாசனைக்காகவும், ருசிக்காகவும் மிளகு, சீரகம் மற்றும் சில பொடிகளையும் உணவின் மேல் தூவிக் கொள்ளலாம். தக்காளி சாஸ், கெட்சப் போன்றவற்றை மிதமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் மிகுந்த அளவு உப்பும், சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. வினிகர், கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love