வெந்தயம்

Spread the love

நீரிழிவு நோய்க்கு நிரூபிக்கப்பட்ட நார்ச்சத்து

உணவில் நார்ச்சத்தின் அவசியம் தற்போது பிரபலமாகிவிட்டது. குறிப்பாக நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. காரணம் அது உணவிலுள்ள சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி ஜீரணமாவதை தாமதிக்கிறது. நிதானமாக ஜீரணமாவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது. தவிர நார்கள், கொலஸ்ட்ரால் ஜீரணமாவதையும் தடுக்கிறது. மேலும் நார்சத்து தண்ணீரை   உறிஞ்சி உப்புவதால் மலம் இளகி எளிதில் வெளியேறும். மலச்சிக்கல் குறையும். இந்த காரணங்களால் நீரிழிவு நோயாளிகளின் உணவில் நார்சத்து, ஒரு நாளைக்கு 20 லிருந்து 30 கிராம் வரை அவசியப்படுகிறது. அதிக அளவு நார்சத்து, வயிற்றில் வாயுவை பெருக்கி, வேறு பல கோளாறுகளை உண்டாக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். நார்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் வெகுவாக பரிந்துரைக்கப்படுகிறது. வெந்தயம் நார்சத்து நிறைந்த இயற்கை உணவு. இதன் நன்மைகள் பல பரிசோதனைகளில் நிரூபணமாக்குகின்றது.

வெந்தயத்தின் தாவரவியல் பெயர் – Trigonella foenum – ஆங்கிலத்தில் – Fenugreek, இந்தியில் – மேதி, சமஸ்கிருதத்தில் – மெதினீ, மேதி, மேதிகா, பகுபத்ரிகா, பஹிபீஜா முதலியன.

கன்னடம் – தெந்தியா, மோந்தி சப்பு (வெந்தயக்கீரை), மென்தேபன்னி, தெலுங்கு – மெந்தி கூறா (வெந்தயக்கீரை), மெந்துலு, மலையாளம் – உளூவா, மெந்தியம்,

பயன்படும் பாகங்கள் – விதை, இலைகள்.

இலைகள் 5 செ.மீ. நீளமுள்ளவை. பூக்கள் வெள்ளை (அ) எலுமிச்சம் பழ நிறமுடையவை.

ஆயுர்வேதத்தில் ‘கசப்பு’ சுவையுள்ள உணவுப்பொருட்கள் உஷ்ணத்தை குறைக்கும் தனிமையுள்ளவை, ஜுரத்தை குறைப்பவை, உடலின் நச்சுத்தன்மையை குறைக்க வல்லவை என்று கூறப்படுகிறது. இந்த கசப்பு உணவுப்பொருட்களின் பிரிவை சேர்ந்தது வெந்தயம். விட்டமின் ‘பி’ உள்ள வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் தொன்று தொட்டு தெரிந்தவை. இந்தியாவிலும் எகிப்திலும் பழங்காலத்திலிருந்தே பயிரிடப்பட்டது. வெந்தயம் பயிரிடுவதின் மற்றொரு நன்மை. அதை பயிரிட்ட மண்ணின் நைட்ரஜன் உரத்தை பாதுகாத்து வைக்கும். இரண்டடி உயரம் வளரும் இளம் பச்சை நிற செடி. ஒரு ஆண்டில் 2 லிருந்து 3 முறை பயிரிடலாம். தற்போது ஆப்ரிக்காவும், இந்தியாவும் வெந்தய உற்பத்தியில் முதன்மையில் உள்ளன. இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் முக்கியமாக பயிரிடப்பட்டாலும், இதர இடங்களிலும் பயிரிடப்படுகிறது.

வெந்தய விதைகளும், இலைகளும் ஆயுர்வேத நூல்களில் சிறந்த மருந்தாக குறிப்பிடப்படுகின்றன. விதைகள் வாசனை உடையவை. இதமான ஈர நார்கள் நிறைந்தவை. சிறுநீரை பெருக்குபவை. மாதவிடாய் போக்கை சீர் செய்பவை. வாயுத்தொல்லையை குறைப்பவை. ஆண்மையை பெருக்குபவை. கர்பப்பை சுருங்கி விரிவதை ஊக்குவிப்பவை.

100 கிராம் வெந்தயத்தில் உள்ளவை (விதை வெந்தயம்)

ஈரப்பசை                            – 13.7 கி (86.1 கி)

புரதம்                               – 26.2 கி (4.4 கி)

கொழுப்பு                            – 5.8 கி (0.9 கி)

தாதுப்பொருட்கள்                     – 3.0 கி (1.5 கி)

நார்ச்சத்து                           – 7.2 கி (1.1 கி)

கார்போஹைடிரேட்ஸ்                 – 44.1 கி (6.0 கி)

கால்சியம்                            – 160 மி.கி. (395 மி.கி)

பாஸ்பரஸ்                           – 370 மி.கி (51 மி.கி)

அயச்சத்து                           – 6.5 மி.கி (1.93 மி.கி)

கரோடின்                            – 96 மைக்ரோ (2340 ம்யூசி)

தியாமின் (விட்டமின் ‘பி’2)             – 0.34 மி.கி. (0.04 மி.கி)

ரிபோஃப்ளேவின் (விட்டமின் ‘பி’ 3)     – 2.6 மி.கி. (0.8 மி.கி)

ஃபோலிக் அமிலம்

தனியாக                          – 14.5 ம்யூசி

மொத்தம்                         – 84.0 ம்யூசி

கோலின்                           – 1161 மி.கி.

கலோரி                             – 333 கி.கலோரி (49 கி.கலோரி)

விட்டமின் ‘கி’                  – 52 மி.கி.

வெந்தயமும் வெந்தய கீரையும் நமது தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். முதலில் நீரிழிவு நோய்க்கு வெந்தயத்தின் பலன்களை பார்ப்போம்.

வெந்தயம், வெந்தயக்கீரையின் இதர பயன்கள்

வெந்தயம் – வாத நோய்களை கண்டிக்கும். மூட்டு மற்றும் இதர உடல் வலிகளுக்கு பொடித்த வெந்தயம் கொடுக்கப்படுகிறது.

பொதுவாக வெந்தயம் நரம்புகளுக்கும் உடலுக்கும் பலமளிக்கக் கூடியது. வெந்தய கஷாயம் நரம்புத்தளர்ச்சியை போக்கி ஆண்மையை பெருக்கும்.

வெந்தயம் மலத்தை இறுக்கும். எனவே வயிற்றுப் போக்குக்கு (பேதி, சீதபேதி) நல்ல கை மருந்து. வெந்தயத்தை வறுத்து கஷாயம் தயாரித்து, தேனுடன் கொடுக்கலாம். இரவில் தயிரில் ஊற வைத்து மறுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

பசியை உண்டாக்கும்.

தாய்ப்பால் பெருக உதவும். கோதுமை, அரிசி இவற்றுடன் வெந்தயம் சேர்த்து கஞ்சி தயாரித்து பாலுடன் சாப்பிட வேண்டும்.

வெந்தய கஷாயம் மாதவிடாய் கோளாறுகளை சீர் செய்யும். உடல் இளைக்கவும் வெந்தயம் உதவும்.

வெந்தய பொடியை களிம்பாக செய்து மூட்டுக்களில் (அ) வலி உள்ள இடங்களில் தடவலாம்.

வெந்தயக் கீரை

கீரையை வேக வைத்து துவரம் பருப்புடன் சேர்த்து தாளித்து உபயோகிக்கலாம். குழம்பு, கூட்டுகளில் சேர்க்கலாம்.

வேக வைத்து எண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட பித்த தலைசுற்றல், பசியின்மை, வயிற்று உப்புசம் முதலியவை நீங்கும்.

கீரையை வதக்க அதனுடன் பாதாம் பருப்பு, கோதுமை, கசகசா இவற்றை பாலில் அரைத்து கீரையுடன் கலந்து, நெய்விட்டு கிண்டி உட்கொள்ள உடல் பலமடையும்.

கீரை குடற்புண்களை ஆற்றும்.

கீரையை அரைத்து மேல்பூச்சாக கட்டிகள், புண்கள் மேல தடவ அவை சீக்கிரம் ஆறும்.

பல ஆயுர்வேத, சித்த மருந்துகள், லேஹியங்களில் வெந்தயம் இடம் பெறுகிறது. பாலியல் ஹார்மோன்கள், வாய்வழி கரு தடுக்கும் மருந்துகள் – இவற்றில் உள்ள என்ற ஸ்டிராய்ட் வெந்தயத்தில் உள்ளது.

பயிரிடும் முறை

நமது தேசத்தில் வெந்தயம் குளிர்காலப் பயிராக நடப்படுகிறது. பஞ்சாபில் ஒரு கூடுதல் பயிராகவும், உத்தர பிரதேசத்தில் குளிர்காலப் பயிராகவும் அஸ்ஸாமில் தோட்டப் பயிராகவும் வெந்தயம் பயிரிடப்படுகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்திலும் பரவலாக பயிரிடப்படுகின்றது.

வெந்தயம் எல்லாவித மண்களில் விளைந்தாலும், மணல், களிமண் மற்றும் மக்கிப் போன தாவரங்கள் நிறைந்த மண்ணில் நன்கு வளரும். பயிரிடும் முன்பு நிலத்தை 3-4 முறை உழ வேண்டும். விதைகளால் வெந்தயம் பயிரிடப்படுகிறது. இரண்டு வகை வெந்தயமும் (தேசி மேதி மற்றும் கஸ்தூரி மேதி) செப்டம்பர் – நவம்பர் மாதங்களிலும், மலைச்சாரல்களில் ஏப்ரலிலும், மறுபடியும் அக்டோபரிலும் பயிரிடப்படுகிறது. கரிசல் மண்களில் ஜுன் – ஜுலை மாதங்கள் வெந்தயம் விதைக்க ஏற்றவை விதைகள் 20 – 30 செ.மீ. இடைவெளிகளில் விதைக்கப்படுகின்றன. விதையின் வகையைப் பொறுத்து, ஒரு ஹெக்டேருக்கு 23 லிருந்து 35 கிலோ வரை தேவைப்படும். விதைத்த பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு ஒரு வாரம் கழித்தும், பிறகு 8-10 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வெந்தய விதைகள் விரைவாக முளைக்கும். 3 நாட்களில் முளைத்து விடும்.

தேசிமேதி வகை 20 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். கஸ்தூரி வெந்தயம் 25-30 நாட்களாகும். வெந்தய பூமியிலிருந்து 2-3 செ.மீ. விட்டு வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட செடிகள் மறுபடியும் துளிர் விடும். மறுபடியும் செடிகள் 12 (அ) 15 நாட்கள் கழித்து வெட்டப்படும். இந்த மாதிரி 2-3 தடவை வெட்டப்பட்டு பிறகு செடிகள் விதைக்காக விடப்படுகின்றன. ஆறு வாரத்தில் செடிகள் பூக்கத் தொடங்கும். பூத்து 30-35 நாட்களான பிறகு வெந்தய விதைகள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு சித்தமாயிருக்கும், விதைகளின், நெல்லை போரடிப்பது போல் அடித்து, பதர் நீக்கி சுத்தம் செய்யப்படுகின்றன. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 15-19 குவிண்டால் தேசிமேதியும், 15-19 குவிண்டால் கஸ்தூரி மேதியும் கிடைக்கும்.

இந்தியாவை பொருத்தவரை உள்நாட்டிலேயே முக்கால்வாசி வெந்தயம் உபயோகமாகி விடுகிறது – இருந்தும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

வெந்தயத்தின் இதர பயன்கள்

உணவுப் பொருட்களுக்கு கூட்டவும், பக்குவப்படுத்தவும் வெந்தயம் உதவுகிறது.

வெந்தயக்கீரை சமையலிலும் உபயோகமாகிறது.

வெந்தயத்திலிருந்து இரு வகை எண்ணைகள எடுக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்களிலும், சோப்பு, வாசனை பொருட்கள் தயாரிப்புகளிலும் இவை பயனாகின்றன.

தினமும் 5 கிராம் பொடித்த வெந்தயத்தை தண்ணீரில் கரைத்து, தினமும் இரு வேளை குடித்து வர மூட்டு வலிகள் மறையும்.

உடலின் எந்த பாகத்திலிருந்தாவது ரத்தப்போக்கு ஏற்பட்டால், பாலில் காய்ச்சி, வடிகட்டி, கல்கண்டு சேர்த்து உட்கொண்டால் ஏன் உடலின் இதர பாகங்களில் நின்று விடும்.

கொலஸ்ட்ரால் குறைய – இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் இரு வேளை உட்கொள்ளவும்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பட – வெந்தயம், சதகுப்பை இவை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடிக்கவும். இந்த பொடியை தண்ணீரில் கலந்து காலை, மாலை இரு வேளை உட்கொள்ளவும்.

ஆஸ்துமாவிற்கு – வெந்தயத்தை நீரில் வேக வைத்து, களிம்பு போல் பிசைந்து கொள்ளவும். தேன் சேர்த்து இந்த களிம்பை, தினமும் இரு வேளை, ஒரு மாதம் உட்கொள்ளவும்.

இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நபர்களுக்கு வெந்தயக்கீரை நல்ல மருந்து. கீரையை தண்ணீர் விட்டு அரைத்து சாறாக எடுத்துக் வைக்கவும். இந்த சாற்றில் 2 தேக்கரண்டி எடுத்து, அதே அளவு தேன் சேர்த்து படுக்கும் போது குடித்து வரவும். 1 மாதமாவது இதைச் செய்யவும்.

வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் 1/2 – 2 தேக்கரண்டி பெருங்காயத்தை அதே அளவு வெந்தயத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டையில் கீச்-கீச் ஏற்பட்டால் ‘வெந்தய டீ’ யை வாயிலிட்டு கொப்பளித்தால் இதமாக இருக்கும். வெந்தய டீ தயாரிக்க – 1/2 லிட்டர் தண்ணீரில் 2 மேஜைக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைக்கவம். கொதித்தவுடன் வடிகட்டி மிதமான சூட்டில் பருகலாம்.


Spread the love