அம்மை நோய் குணமடைந்த பின் வெள்ளரிப் பழத்துடன் நாட்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலவீனம் நீங்கும். லேசாக உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் சோர்வு தீரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு, வெங்காயம் இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிடலாம். அம்மை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் தணிய வேப்பிலை, நெய், தேன் மூன்றையும் சேர்த்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே குறையும்.
வேப்பிலை, நெல்லி முள்ளி இரண்டையும் அரைத்து வெண்ணெய் கலந்து உடலில் பூசிக் கொண்டால் அம்மை அரிப்பு குணமாகும். வேப்பமரப் பட்டை, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து பசும்பால் சேர்த்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். அம்மை நோய் குணமான பின்னர் ரோஜா, செம்பருத்தி, சிறுபருப்பு, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடலின் அழகு கூடும். முருங்கை வேரை பாலில் கொதிக்க வைத்துக் குடித்தால் இழந்த சக்தியை பெறலாம். மருதம் பட்டை, வேப்பம் பட்டை இரண்டையும் சம அளவில் அரைத்து சாப்பிட்டால் கிருமித் தொற்று ஏற்படாது.