உலகில் மனித வாழ்க்கை தொடங்கிய காலத்தில் இருந்தே இயற்கை மனிதனுக்கு அளித்த எளிய மருத்துவம் உண்ணாவிரதம். இயற்கை மருத்துவத்தின் அடிப்படை உண்ணாவிரதத்தில்தான் தொடங்குகிறது. “இயற்கை தந்த மிகச்சிறந்த மருத்துவமான உண்ணாவிரதத்தை ஒட்டியே இயற்கை மருத்துவ நியதிகள் எழுப்பப்பட்டுள்ளன” என்கிறார் புகழ்மிக்க இயற்கை மருத்துவரான டாக்டர் அர்னால்டு எனெரெட்.
உண்ணாவிரதம் பற்றிக் கூற வந்த செல்ஸஸ் என்னும் கிரேக்க அறிஞன் கூறினான்.
“Abstinenece is one of the best of all remedies and alone cures without danger” நோய் தீர்த்தலுக்கான ஒரு சிறந்த மருத்துவமாக உண்ணாவிரதத்தை பரிந்துரைத்திருக்கிறார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அஸ்கிளெபீடெஸ் என்னும் அறிஞன். அது மட்டுமல்ல தொடர்ந்து வந்த மருத்துவ அறிஞர்கள் ஹிப்போகிரெட்டிஸ், கேலன், பாரா செல்ஸஸ் என்ற பலரும் உண்ணாவிரதத்தை பற்றிய உயர்ந்த கருத்துக்களை கூறியுள்ளனர். உண்ணாவிரதத்தை ஒரு நோன்பாக, தவமாக உலகத்திலுள்ள பல சமயத்தினரும் பின்பற்றி வந்திருக்கின்றனர்.
பனி மிகுந்த துருவப் பகுதிகளில் வாழ்கின்ற பனிக்கரடிகள் (Polar Bear) குளிர்காலத்தின் தொடக்கத்தில் தம் இருப்பிடம் சென்று நீண்ட தூக்கம் (Hibernation) கொள்ளத் தொடங்கிக் கோடை காலத்தில் புத்துணர்வுடனும் புதுத் திறனுடனும் வெளிவருகின்றன என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவை இரை எடுப்பதில்லை என்பதும் தெரிந்ததே. மேலும் கடலில் வாழ்கின்ற சால்மோன் என்னும் மீன் இனம் முட்டையிடுவது ஆற்று நீரில் தான். இவ்வகை மீன்கள் தம் இணைகளோடு கடலில் இருந்து பிரிந்து காயல் பகுதிகள் வழியாக ஆற்று நீரைத் தேடி அடைய நெடும் பயணம் செய்வதுண்டு. பல இன்னல்களை கடந்து ஆற்று நீரையடைந்து இனப்பெருக்கம் செய்கின்ற வரை இம்மீன்கள் எதையும் உண்ணுவதில்லை என்றாலும் இந்த நெடும் பயணத்தின்போதும் பின்னர் நிகழ்கின்ற இனப்பெருக்கத்தின் போதும் இவை சோர்வென்பதே இல்லாமல் திடமாக இருக்கின்றன என்று விலங்கியல் ஆய்வர்கள் கூறுகின்றனர்.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் உணவை மறுத்தால் உடல் வலுவிழந்துபோகும் என்ற கூற்றில் சிறிதளவும் உண்மையில்லை என்பதுதான். மாறாக உணவை விலக்கியிருக்கின்றபோது உடலும் மனமும் மிகுந்த உற்சாகத்தோடு இருப்பதைக் காண முடியும். உணவு மறுத்தலின் உட்கருத்து உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் அவைகளை மீண்டும் வலிமையடையச் செய்வது தான்.
உண்ணாவிரதமர் என்ற சொல்லைக் கேட்பதற்கே பலர் அஞ்சுவதற்குக் காரணம் உண்ணாமையையும் பட்டினியையும் இணைத்துக் குழப்பமடைவதுதான். இது ஒரு பொருளற்ற அச்சம். உண்ணாமை வேறு. பட்டினி வேறு. இவை இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு. உண்ணாமை உடலுக்கு நன்மை தருவது. பட்டினி உடலுக்குத் தீமையளிப்பது. உண்ணாமை புத்தணர்ச்சியும் புது வலிவும் அளிப்பது. பட்டினி உடலை வலுவிழக்கச் செய்து உயிரை மாய்ப்பது.
உண்ணாமை என்பது நாமே விரும்பி ஏற்பது. பட்டினி என்பது உணவு இன்மையால், பஞ்சத்தால் நிகழ்வது. இவை இரண்டின் போதும் மனிதர்களது மனநிலைகளில் எவ்வளவு மாறுபாடுகள். நோய் நீங்க உதவுகின்ற உண்ணாவிரதம் அல்லது உணவு மறுத்தல் மருத்துவம் சார்ந்தது. அதற்கெனச் சில வரைமுறைகள் உள்ளன. பட்டினிக்கு வரை முறைகளும் இல்லை.
பட்டினி கிடக்க நேர்ந்தவர்களுக்கு அது தேவையானதும் இல்லை. இதுதான் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. நல்ல உடலில் இயற்கையாக எழுகின்ற பசி உணர்வு உணவுகளால் ஈடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படாமல்போவதுதான் பட்டினி. நோயுற்ற உடலில் இருந்து நோய் நீங்க ஏற்றுக் கொள்ளப்படுவது உண்ணாவிரதம்.
உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உண்ணாமை மருத்துவத்தைச் சிற்சில மாற்றங்களோடு இன்றைய மருத்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
பொதுவாக அளவுக்கு மீறி உண்பதாலும், உடற்கழிவுகள் வெளியேறாததாலும், உடலில் நச்சுப் பொருள்கள் தேங்கத் தொடங்குவதாலும் நோய்கள் உண்டாகின்றன என்பதுதான் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. நம்மில் பெரும்பாலோர் தேவைக்கு அதிகமாக உண்பதுடன் அவ்வுணவு செரிப்பதற்கான வேலைகள் எதுவும் செய்யாமல் இருக்கின்றனர். தேவைக்கு மிஞ்சிய உணவும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் செரிமான உறுப்புகளுக்கு அளவில் மிகுந்த வேலைப் பளுவை ஏற்படுத்துவதுடன், சத்தை உள்ளுக்குள் உறிஞ்சும் உறுப்புகளைச் சீர் கெடவும் செய்கின்றன. இதன் விளைவாக நச்சுக் கழிவுகள் உடலுக்குள் குவியத் தொடங்குகின்றன.
உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதில் கழிவுறுப்புகளுக்கு உதவுவது தான் இயற்கை மருத்துவத்தின் முதல் குறிக்கோள். ஒரு நோய்க்கு காரணம் எதுவோ அதை நீக்குவதுதான் நோய் அகற்றும் வழியாகும். உணவைக் குறைத்தல் அல்லது உண்ணாவிரதம். மேலும் மேலும் அதிகப்படியான உணவு வந்து சேராமல் இருக்கின்றபோது, குடல், சிறுநீரகம், சருமம், நுரையீரல் போன்ற உறுப்புக்கள் தங்களது பணிகளை இடையூறு இல்லாமல் திறம்படச் செய்கின்றன.
எனவே உண்ணாவிரதம் என்பது இல்லத்தைத் தூய்மையாக்குவதுபோல உடலைத் தூய்மையாக்குவதாகும். உடலிலுள்ள கழிவுகளை இயல்பாகவே இயற்கை வெளியேற்றுகிறது என்பதை அறிவோம். அதற்கு உதவுவதே உண்ணாவிரதம். இம்முறையினால் உடலுறுப்புகள் தூய்மையடைவதுடன் புத்துணர்ச்சியும், புது வலுவும் அடைகின்றன.
ஆஸ்டின் என்னும் மருத்துவர் எழுதுகிறார், “உண்ணாவிரதம் என்னும் மருத்துவ முறையைக் கையாண்டு பல நோயாளிகளையும், துயருற்றவர்களையும் குணமாக்கிய இந்தப் பதினாறு ஆண்டு அனுபவத்தில் எனக்கொரு உண்மை தெளிவானது. சிக்கல் மிகுந்த நோய் என்றும், கடுமையான பல நோய்களின் கலப்பு என்றும் கூறுவதெல்லாம் உணவு தேவையில்லாதிருந்த ஒருவன் மென்மேலும் உட்கொண்டதால் வந்த விளைவுகளே” என்று. எவ்வளவு பெரிய உண்மை. “இயற்கையான பசியுணர்வு வரும் வரை உணவே வேண்டாம் என்று அதை ஒதுக்கி வையுங்கள். அதுவரை உடல் திசுக்களைக் கொண்டே வாழ்வேன்” என்று சொல்லும் நிலையே உண்ணாவிரதம்.
இயற்கையான பசியுணர்வோடு எங்கே உணவு, எங்கே உணவு என்று தேடியலைந்து கதறுகின்ற கூட்டத்துக்கு உணவு கிடைக்காமல் உலகம் செய்கின்ற கொடுமைக்குப் பெயர்தான் பட்டினி. நோயால் வாடுபவன் நோயினின்றும் நீங்கி உடல்நலம் பெற உளமாற ஏற்றுக் கொள்வது தான் உண்ணாவிரதம். அப்படியானால் உண்ணாவிரதத்துக்கான இலக்கணம் அல்லது வரைமுறைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பலாம். இதோ அதற்கான இலக்கணம்.
உண்ணாவிரதம் என்பது கொஞ்சமாகவோ, முழுதாகவோ ஓரிரு நாட்களுக்கோ, பல நாட்களுக்கோ உணவு மட்டும் உட்கொள்ளாதிருப்பதாகும். அதாவது நீரைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளாதிருத்தல். தானாக மனம் விரும்பி முழுதாக உண்ணாதிருத்தல். தாக உணர்வு ஏற்படும்போது மட்டும் கொஞ்சமாக நீர் அருந்தி ஒய்வு பெறுதலே உண்ணாவிரதம் என்னும் உணவு மறுத்தல்.
ஓர் உயிர் உணவு கொள்ளாதிருப்பதை மூன்று விதமாகப் பிரிக்கிறார் டாக்டர் மார்க்குலிஸ்
உடலியல் முறையில் இயற்கையோடு இணைந்து பருவத்திற்கு ஏற்ப உணவிலிருந்து நீங்குதல். குளிர்காலம் அல்லது சில குறிப்பிட்ட காலம் முழுவதும் உணவின்றி உறங்கிக் கழிக்கும் சில விலங்குகளின் வாழ்க்கையில் இதைக் காணலாம்.
நோயின் விளைவால் உணவு உட்கொள்ள முடியாதிருத்தல். உணவு மண்டலத்தில் அடைப்பு, இரைப்பையில் வேதனை, வாந்தி எடுத்தல், பசியுணர்வு இன்மையாலோ அல்லது மனநிலை அல்லது மனநோய் காரணமாகவோ உண்ணாதிருத்தல் இதனுள் அடங்கும்.
நோய் நீங்குவதற்காக தாமாக முன் வந்து உணவினை மறுத்தல், நோயுற்ற விலங்குகளுக்கு உணவளித்தால் அவற்றை நஞ்சென வெறுத்து ஒதுக்குவதே இதற்குச் சான்று.
காலமும், அளவும்
நோயாளியின் வயது, நோயின் தன்மை, அவர் உண்டு வந்த, உண்ணுகின்ற மருந்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவசியமானால் ஒரு மருத்துவரது ஆலோசனையுடன் உண்ணாவிரதத்தை தொடங்கலாம். இதற்கு மாறாக குறுகிய காலங்களுக்கு அதாவது அரை நாள், ஒரு நாள், இரண்டு நாள் என்று சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்திப் பின்னர் ஒரு வார காலம் வரை உயர்த்தலாம். பொதுவாக ஏழு நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் தேவையில்லை என்பது பலரது கருத்தாகும். மேலும் இந்த ஒரு வார காலத்தில் உடலில் குறைந்திருந்த நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதுடன் உடலுறுப்புகளும் புத்துணர்ச்சியும், புதுத் திறனும் பெற்றிருக்கும். உணவு மறுத்தல் முடிந்த பிறகும் அளவான, சரிவிகித, உணவுகளை உண்டு வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டு அதற்கொப்ப வாழ முயற்சிக்க வேண்டும்.
யார் இதை தவிர்க்க வேண்டும்?
எல்லாவிதமான செரிமான உறுப்புக் குறைபாடுகளுக்கும், ஈரல், சிறுநீரகங்கள், நுரையீரல் தொடர்புடைய நோய்களுக்கும் எக்ஸிமா போன்ற சரும நோய்களுக்கும் உணவு மறுத்தல் ஒரு உயர்ந்த மருத்துவமாகும் என்றாலும், குடற்புண், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே இதை பின்பற்ற முயல வேண்டும்.
உண்ணாவிரத முறைகள்
தண்ணீர் மட்டும் அருந்திப் பிற உணவுகள் அனைத்தையும் மறுத்தலே சிறப்பான உண்ணாவிரத முறை என்று பன்னெடுங்காலமாக கருதப்பட்டு வந்தது என்றாலும், அண்மைக் காலமாக பல இயற்கை மருத்துவர்களும், உணவியல் அறிஞர்களும் தண்ணீர் மட்டும் அருந்தி உணவு மறுத்திருப்பதைக் காட்டிலும் பழச்சாறு மட்டும் அருந்தி, உண்ணாவிரதம் இருத்தல் சிறந்தது என கருதுகின்றனர்.
உண்ணாவிரதம் இருக்கின்றபோது உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள்களும் கழிவுகளும் எரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. இந்நிலையில் தண்ணீரை அருந்துவதை விடக் காரச்சத்துக் கொண்ட (Alkaline) பழச்சாறுகள் குடித்தால் இந்தத் தூய்மைப்படுத்தும் பணிக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும்.
இதனால் யூரிக் அமிலமும் பிற கனிம வேதி அமிலங்களும் எளிதாக வெளியேற்றப்படுகின்றன. பழங்களிலுள்ள பழச்சர்க்கரை இதயத்தை வலுப்படுத்த வல்லது. காய்கறி மற்றும் பழச்சாறுகளில் உள்ள உயிர்ச்சத்துக்களும், கனிமப் பொருள்களும் உடற்செயற்பாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மிகவும் ஏற்றவையாகும். இதில் பயன்படுத்தப்படும் பழச்சாறுகள் அனைத்தும் புதிதாகப் பிழியப்பட்டதாக இருக்க வேண்டும். சர்க்கரை சேர்க்கக் கூடாது. குப்பிகளில் அடைத்தவைகளோ, குளிரூட்டப்பட்டவைகளோ இருக்கக்கூடாது.
உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன் கட்டாயமாக எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பெருங்குடலில் தங்கியுள்ள கழிவுகளினால் வாயு, பொருமல் போன்ற தொல்லைகள் ஏற்படாதிருக்கும். உண்ணாவிரதம் இரண்டு நாட்களுக்கு மிகுமானால் 2 நாட்களுக்கு ஒரு முறை எனிமா எடுக்க வேண்டும். தூய காற்றும் வெளிச்சமும் உள்ள இடத்தில் இருக்க வேண்டும். தாகம் எடுக்குமானால் தண்ணீர் அருந்தலாம். ஒரு நாளைக்கு எட்டு குவளைக்கு குறையாமல் பழச்சாறும் தண்ணீரும் அருந்த வேண்டும். தேவைப்பட்டால் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பவர்கள் உடலாலும், மனதாலும் ஒய்வாக இருக்க வேண்டும்.
உடல் பருமன் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தை எளிதாக கைக் கொள்ளலாம். எடைக் குறைவு பற்றி எவ்வித அச்சமும் தேவையில்லை. உணவு சிறிதும் உண்ணாமல் நீரை மட்டும் அருந்திக் கொண்டு 20 நாட்கள் வரை மனிதரால் உயிரோடு இருக்க முடியும். இருந்திருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருப்பவர்கள் எந்நேரமும் படுத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. காலையும், மாலையும் சிறிது தொலைவு நடந்து வரலாம். சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். இயலுமானால் சிறிது நேரம் புத்தகங்கள், பத்திரிக்கைகள் படிக்கலாம். வெதுவெதுப்பான வெந்நீர் அல்லது அதிகம் குளிர்ச்சி இல்லாத தண்ணீரில் தினமும் குளிக்கலாம். உண்ணாவிரதத்தின்போது சிலருக்கு இரவில் உறக்கம் வராது போகக் கூடும். வெதுவெதுப்பான நீர் நிறைந்த தொட்டிக்குளியல் (Warm water tub bath) எடுக்கலாம் அல்லது வெந்நீரால் பாதங்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
உண்ணாவிரதத்தை முடிக்கும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். சிறுகச் சிறுகத்தான் திட உணவுக்கு மாற வேண்டும். மாறிய பிறகு அளவோடு உண்ண வேண்டும். இந்திய மக்களாகிய நாம் அனைவரும் சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். நம் முன்னோர்கள் சமயம் சார்ந்த வாழ்க்கை முறைகளை, மருத்துவ முறைகளைக் கைக் கொண்டிருந்தனர். உணவு மறுத்தலையும் சமய சார்புடையதாக்கி நோன்பு, உபவாசம், என்றார்கள். நோன்பு என்பது எவ்வளவு சிறப்பான சொல், நோற்றல் என்பது தவம் இருத்தல் அல்லவா. நோன்போ, தவமோ எதுவானாலும் ஆகட்டும். உணவை மறுப்பதால் உடலுக்கு எத்தனையோ நன்மைகள். “எல்லா மருந்துகளையும் விட வலிமையானது உண்ணாமை என்னும் மருந்தே” என்பார் டாக்டர் ஹால்புரூக். இந்த உண்மையைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டு அதனைக் கைக் கொண்டு உடல்நலமிக்கவர்களாய் வாழ்ந்த நம் முன்னோர்களின் வழியையே நாமும் பின்பற்றுவதில் தவறில்லை.
உண்ணாவிரதம் முடித்த பிறகு உங்களது நுகரும் திறனும், சுவையுணர்வும் பன்மடங்கு அதிகமாகும். இதனால் உமிழ்நீர் சுரப்பும் அதிகரிக்கும். உணவுகள் சுவை மிகுந்து காணப்படும். கண்களும், காதுகளும் கூர்மையாகும். உடல் செயல்பாடும் சுறுசுறுப்பும் கூடும். செய்கின்ற பணியில் ஆர்வமும், திறனும் ஏற்படும். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்குத் தொந்தியும், தொப்பையும் குறைவதோடு வாழ்நாளும் அதிகரிக்கும்.
உண்ணாவிரதத்தால் தீமைகள் எதுவும் நேர வாய்ப்பில்லை. கண்டவற்றைக் கூறி உங்கள் மனோதிடத்தைக் குலைக்க முயல்பவர்களை கண்டு திகைக்காதீர்கள். ஒரு நாள் உணவின்றி இருந்தால் பெருங்கேடு எதுவும் விளையாது என்று திடமாக நம்பிச் செயல்படுங்கள்.