ஏறத்தாழ 1980களில் உயிரியல் துறையில் ஏற்பட்ட ஒரு எண்ணப் புரட்சி கடந்த முப்பது ஆண்டுகளில் பலவிதமான உடலியல் மறுமலர்ச்சி சிந்தனைகளுக்கு வித்திட்டுள்ளது. நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் என அருள்கடல் வடலூர் வள்ளலாரின் கருத்தோடு உடன்படுவது போல நோய் வராமுன் காத்துக் கொள்வதே சரியான வாழ்க்கை முறை என்ற எண்ணம் உலகெங்கிலும், ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. அதே போன்று உணவே மருந்து என்ற நிலையிலிருந்து சிறிது விலகி சிறுக உண்பதே மூப்பும் நோயும் தவிர்க்கும் வழிமுறை என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
குன்றாத உடல் நலமும் குறையாத வாழ்நாளும் பெறுவது என்பது அவரவர்களது செயல்பாட்டில்தான் உள்ளது. மருத்துவரோ மற்றவரோ இதற்கு உதவ மாட்டார்கள். மருத்துவர்கள் மருந்துகள் தான் தருவார்களே தவிர வாழ்நாளை நீட்டிக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருவார்களா என்பது சந்தேகமே.
தற்போது eat less live longer என்று ஒரு இயக்கமே அமெரிக்க நாட்டில் தொடங்கப் பட்டிருக்கிறது. இவர்கள் தங்களது தீவிரமான பிரச்சாரத்தால் அமெரிக்கர்களின் உணவு முறையையே மாற்ற முயன்று கொண்டிருக்கின்றனர்.
NCTR எனப்படும் (National Centre for Toxicological Research) எனும் அமைப்பு மூப்பையும் பிணியையும் உருவாக்குகின்ற நஞ்சு உணவு என்று நிரூபிக்கின்ற ஆய்வு ஒன்றில் அறிவியலார் பலரை ஈடுபடுத்தி உள்ளது. இவர்களது ஆய்வுகளில் இருந்து பல அற்புதக் கருத்துக்கள் தெரிய வந்துள்ளன.
விஞ்சிக் குறைந்த (Less) குறையளவு கலோரித் திறன் கொண்ட உணவு முறையைப் பின்பற்றுகின்ற போது அதன் தாக்கம் திசுக்கள், செல்கள் மற்றும் ஜீன்கள் வரை சென்றடைகிறது. மனித உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் மரபுவழிப் பண்பு கொண்ட அனைத்து ஜீன்களும் உள்ளன. இயல்பான உணவு கொள்ளும்போது பெரும்பாலான நேரங்களில் இந்த ஜீன்களில் பல, தமக்கு உரிய பணிகளை செய்து தம்மைத் தேரியப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக குறையளவு கலோரி கொண்ட உணவை உட்கொள்ளும் போது இந்த ஜீன்கள் அத்தனையும் செயல்படுகின்றன. என்று கூறுகிறார் (NCTR) ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் நாகமுரா.
மனிதர்களை முதுமையுறச் செய்து நோய்க்கும் பிணிக்கும் ஆளாக்கி, காலத்திற்கு முந்தியே மரணமுறச் செய்வது உணவே என்கின்றனர். (NCTR) ஆய்வாளர்கள். விலங்குகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றில் குறையளவு கலோரி உணவு உட்கொண்ட விலங்குகள் நீண்டநாட்கள் செயல்திறத்தோடும், மகிழ்வோடும் இருந்தன என்றும் மிக மெதுவாகவே மூப்படைந்தன என்றும் முதுமை நோய்களான இதய நோயும், புற்று நோயும் இவ்விலங்குகளைப் பாதிக்காது ஒழிந்தன என்றும் உறுதி செய்யப்பட்டது.
மனநிறைவு தரும் வகையில் உண்ணப்படுகின்ற உணவில் உடல் செயல்பாடுகளுக்கு செலவானது போக எஞ்சியது கொழுப்பாக மாற்றமடைந்து வைப்பாக வைக்கப்படுகிறது. ஆனால் குறையளவு கலோரி உணவு உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. குறையளவு உட்கொள்ளப்படும் உணவு தினசரி நடைமுறைத் தேவையை மட்டுமே ஈடு செய்கிறது. இங்கு கொழுப்பு மாற்றம் எதுவும் இல்லை.
கொழுப்பு சேமிக்கப்படுவதில்லை என்று வருகின்ற போது அதன் வளர்சிதை மாற்றத்தினால் வருகின்ற போது அதன் வளர்சிதை மாற்றத்தினால் உருவாகும் பிறதீய வேதிகளும் இல்லை. அதிலும் குறிப்பாக செல்களைச் சேதமடையச் செய்யும் Free Radicals எனப்படும் தனிம அணுக்கள் தோன்றுவது தடை செய்யப்படுகிறது. இத்துடன் நில்லாது இயல்பான நிலையில் தனிம அணுக்களை எதிர்ப்பதற்கென்றே உடலில் சுரக்கப்படும் SOD எனப்படும் (Superoxide Dismutase) எனும் நொதிப்பொருளின் சுரப்பு குறையளவு உண்ணும்போது அதிகரிக்கிறது. இது ஒரு இருபுறத்தாக்குதலாக அமைந்து உடலுக்கு நன்மை பயக்கிறது. இதனால் குறையளவு உணவில் வாழும் விலங்குகள் தங்கள் முதுமைக்காலத்திலும் சருமப் பளபளப்புடனும், மாறாத இளமைத் தோற்றத்துடனும் இருந்தன. அவைகளது தடுப்பாற்றல் சக்தியும் தொய்வுராது இருந்தது.
இது பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது. எதிர்வரும் நாட்களில் என்னென்ன வகை உணவுகள் எத்தனை எத்தனை கிராம் எந்தெந்த வேளைகளில் உண்ணவேண்டுமன்று கட்டம் போட்டு எழுதி தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால், அதுவே சக்தி மிக்க நோய் தவிர்க்கும் வழியாக அமைந்தால் அதைப் பின்பற்றுவதில் தவறில்லை.
ஆயுர்வேதம்.காம்