துரித உணவுகள் விரைவான நோய்கள்

Spread the love

இன்றைய உலகம் கம்ப்யூட்டர் மயமாகி விட்டது. காற்றில்லாமல் கூட ஜீவிக்கலாம். கம்ப்யூட்டர் இல்லாமல் ஜீவிக்க முடியாது என்ற நிலைமை ஆகிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையின் புரட்சியால் உலகம் எங்கேயோ போய்விட்டது. எதிலும் வேகம்.. வேகம்.. சுவாசிக்க கூட நேரமிருப்பதில்லை.

ஐ.டி. கம்பெனிகள் அதிக சம்பளத்தை அள்ளித் தருகின்றனவாம். ஐ.டி. கம்பெனியில் சேர, கடும் போட்டி நிலவுகிறது. அடித்துக் கொள்ளாத குறைதான். முன்னுக்கு வர துடிக்கும் இளைஞர்கள், அதிகம் சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள், முண்டியடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஜெட் வேகம், ராக்கெட் வேகம் அல்ல மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு விரைவான வாழ்க்கை, வேகம் சிக்கலில்தான் முடியும். அதீத வேகம் எப்போதும் ஆபத்துதான். உணவு, வாழ்க்கை, தூக்கம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. காரணம் ஐ.டி. துறையின் அசுர வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் கோளாறுதான் தீங்கான உணவு முறைகள். ‘ஜங்க் ஃபுட்’ (குப்பை உணவு) சாப்பிடுவதுதான் இன்றைய ஃபேஷன். அமெரிக்க வழி உணவுமுறைதான் எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது.

நமது வழக்கமான உணவுகளை தவிர்த்து பீஸா, ப்ரெட், ஆம்லெட், ‘ஹாட் டாக்ஸ்’ (Hot dogs) இவைகளை கோக்/பெப்ஸியுடன் உள்ளே தள்ளுவதுதான் இன்றைய உணவு முறை. ஐ.டி. துறையில் அசுரத்தனமாக உழைப்பவர்களுக்கு உணவு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஐ.டி. அலுவலக கேன்டீன்களில் தரப்படுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) என்ற பெயரில் ஜங்க் ஃபுட் (Junk Food)தான். இது தவிர ‘ஷிப்ட்’ முறையும் கொஞ்ச நஞ்சம் உள்ள பசியுணர்வையும் கெடுக்கிறது.

நாம் எல்லோரும் இரவில் தூங்க வேண்டும் என்ற நியதியை இயற்கை உண்டாக்கி இருக்கிறது. எப்போதும் நைட் ஷிப்டிலேயே பணியாற்றும் ஐ.டி. துறை ஊழியர்கள், நள்ளிரவு 12 மணிக்கு ப்ரெட், பீஸா இவற்றை ஆர்வமில்லாமல் உண்கிறார்கள். நாம் எதற்காக உழைக்கிறோம்? எதற்காக சாப்பிடுகிறோம்? உணவில் இருந்து சக்தி பெற, ஜீரண மண்டலம், இதயம் இவை சரிவர இயங்க சுவரை வைத்துதான் சித்திரம் எழுத முடியும்.

சுமைதாங்கியான நம் வயிறு, குடல் ஆகியவை ஜங்க் ஃபுட்டின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நோய்வாய்ப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டது. எண்ணெய் செறிந்த வறுத்த மசாலா சேர்ந்த உணவுகள், சிப்ஸ் இவைகளை கண்ட நேரங்களில் உண்பதால் அஜீரணம், நெஞ்செரிச்சல், அதிக அமில சுரப்பு, பித்த ஏப்பம், வாய்வு தொல்லைகள், வயிறு உப்புசம், மலச்சிக்கல், எடை கூடுதல் ஏற்படுகிறது. இவை தவிர இன்னும் பல பாதிப்புகளும் சேர்ந்து வரும். மனபாதிப்பு உடல் எடையை ஏற்றும். ‘ஃபுட் பாய்சன்’ அடிக்கடி ஏற்படும்.

மலச்சிக்கலால், பசி உணர்வு குறைந்த, உடலில் நச்சுப் பொருட்கள் தேங்கிவிடும். ஜங்க் ஃபுட்டின் குடைச்சல் தாள முடியாமல் உடல், ‘குய்யோ முறையோ’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது. யாரும் காது கொடுத்த கேட்க தயாராக இல்லை.

உடல் ஆரோக்கியத்திற்கு முதலில் தேவை, சீராக இயங்கும் ஜீரண மண்டலம். வேறு காரணங்கள் இருந்தாலும் நெஞ்செரிச்சல், அதிக அமில சுரப்பு இவற்றை எல்லாம் ‘ஸ்பான்சர்’ செய்வது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் வகையறாக்கள் தான். அதிக அமிலம் சுரந்தால் புளிச்ச ஏப்பம், அஜீரணம், தலைசுற்றல், வாந்தி, பேதி, தூக்கமின்மை, அதிகப்படி வாய்வு சேருதல், வாய்ப்புண்கள், வயிற்று வலி, மலச்சிக்கல், பசியின்மை ஏற்படும். போதாக்குறைக்கு மூலம், அல்சர், உடல் பலவீனம் ஆகியவையும் உண்டாகும். உடலில் சேரும் நச்சுப் பொருட்களால் மூட்டுவலி, உடல் பருமன், மூலம் தவிர ஆண்மை குறைவு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

உணவு முறைகள் சீராக…

1. ஓய்வெடுங்கள். எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துக் கொள்ளுங்கள். வேகம் விவேகம் அல்ல என்பதால் விரைவு பாதையில் இருந்து, கொஞ்சம் மாறி, வேறு பாதையில் செல்லுங்கள். அலுவலக டென்ஷன் எதுவானாலும், உங்கள் உணவில் கவனம் செலுத்த மறக்க வேண்டாம். மன பாதிப்புகள் உடலையும் பாதிக்கும். உடல் பாதிப்புகள் மனதையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  ஜீரண மண்டல உறுப்புகள் உங்கள் ‘மூட்’&ஐ பொறுத்து இயங்கும். நீங்கள் கோபமுற்று முகம் சிவந்தால், வயிறும் சிகப்பாக மாறும்.  நீங்கள் பரபரப்பானால் வயிறும் அதற்கேற்றபடி சுருங்கி விரியும். அவசரமாக உணவு உண்பதை தவிர்க்கவும்.

2. உடல் ஊட்டச்சத்திற்காக உண்ணுங்கள். பசியை தீர்க்க, வயிறை அடைத்தால் போதும் என்று நினைக்காமல் சத்துள்ள சுத்தமான சுவையான நம் நாட்டு உணவுகளை சாப்பிடுங்கள். இவைதான் உங்கள் உடலுக்கு ஒத்துவரும். நார்ச்சாத்த உள்ள உணவுகள் நல்லது.

3. ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்துங்கள். உங்கள் உணவுகளை காபி அல்லது கோக், பெப்ஸியுடன் உள்ளே தள்ள வேண்டாம். சாப்பிடுவதற்கு 20 –  30 நிமிடங்கள் முன்னதாகவோ அல்லது பிறகோ தண்ணீர் குடிக்கவும்.

4. உணவை ஒரே தடவை அதிகமாக உண்பதை தவிர்த்து குறைவான உணவை பல தடவை எடுத்துக் கொள்ளலாம்.

5. வார விடுமுறையை மகிழ்ச்சியாக, ஜாலியாக அனுபவியுங்கள். ஆனால், அளவுக்கு மீறி உணபது, குடிப்பது இவற்றை தவிர்த்து விடுங்கள். உணவு முறையில் கட்டுப்பாடாக இருங்கள். உணவில் காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய தானியங்கள், கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த ஆகாரங்கள் அடங்கியிருக்க வேண்டும். வறுத்த பொரித்த உணவுகள் வேண்டாம். திடீர் என்று பசித்தால் உடலுக்கு நலம் பயக்கும் உலர்ந்த பழங்கள், பாதாம், வாதாம் பருப்புகள், வேஃபர் பிஸ்கட்கள், ஆப்பிள், பால் போன்றவற்றை சாப்பிடுங்கள். சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை எப்போதும் குடிக்கவும்.

6. வேலை செய்யும்போது வேலை, உண்ணும் போது உணவு என்பதை கடைபிடியுங்கள்.

7. சத்துள்ள உணவு, ஜீரண சக்தி இவைகளை பற்றிய ஆயுர்வேத அணுகுமுறை பழமையானது என கருத வேண்டாம். ஆயுர்வேத முறைகள் நவீனமானவை. எல்லா கால கட்டத்திலும் எல்லோருக்கும் ஏற்றவை. உபயோகிக்க தகுந்தவை. உங்கள் நோயை போக்குவது மட்டுமில்லாமல், திரும்பி வராமல் இருக்க உங்கள் உடலின் நோய் தடுப்பு சக்தியை ஆயுர்வேத மருந்துகள் பலப்படுத்தும். உன்னதமான வல்லமை மிகுந்த பல மூலிகை மருந்துகள், உங்கள் நோய்க்கேற்ப, ஆயுர்வேதத்தில் கிடைக்கும். இவை அலோபதி மருந்துகள் போல பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர நிவாரணம் அளிக்கும் மருந்துகள். உணவு முறைகளும் பரிந்துரைக்கப்படும். நம்பிக்கையுடன் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love