குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது. குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அரை மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்வது நல்லது. தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.
சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.