முதல் மாதவிடாய் எல்லா பெண்களுக்கு 10 லிருந்து 16 வயதுக்குள் வரும். இந்த வயதில் தான் வரவேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது. உடல் எப்போது தயாராகிறதோ அப்போது தான் வரும்.
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும்.
சராசரி 28 நாட்களுக்கு ஒரு முறை – இது சிலருக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். எப்படியிருந்தாலும் 20-30 நாட்கள் சாதாரணம்.
பொதுவாக உதிரப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். நீங்கள் கர்ப்பமடைந்தால் மட்டுமே இந்த சுழற்சி (Cycle) மாறும். இல்லையெனில் மாதவிடாய் வற்றும் வரை (Menopause) ஒவ்வொரு மாதமும் இது நடைபெறும்.
மாதவிடாயின் சுழற்சி, பிட்யூடரி சுரப்பி சுரக்கும் இரு ஹார்மோன்களாலும், Ovaries சுரக்கும் பெண் பாலுணர்வு ஹார்மோன்களான Estrogen மற்றும் Progestrone இவைகளால் நடத்தப்படுகிறது.
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு கீழ்வயிற்றில் வலி ஏற்படலாம். வலியின் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
மாதவிடாய் அறிகுறிகள்:- மாதவிடாய் கால விளைவுகள்: (Pre Menstrual syndrome – PMS) இவை மாதவிடாய் துவங்குவதற்கு 1-14 நாட்களுக்கு முன் உடல்/மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள்
உடல் மாற்றங்கள்
தசை பிடிப்பு (Cramps), ஒப்புசம், மிருதுவான மார்புகள், தலைவலி, முதுகுவலி, தலைமரத்துப் போதல் போன்றவை.
மனோரீதியான பாதிப்புகள்
படபடப்பு, மனநிலையில் மாற்றங்கள் மனச்சோர்வு இவைகள் ஏற்படலாம். இந்த மாதவிடாய் கால விளைவுகள் (Pre Menstrual syndrome) Progestrone மற்றும் Estrogen ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உண்டாகும். தவிர கொழுப்பு சத்து உணவுகள், சர்க்கரை இவைகளாலும் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினசரி 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். உடற்பயிற்சி இந்த சமயத்தில் செய்யக்கூடாது என்று நினைக்கலாம். ஆனால் உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி ஆக்ஸிஜன், ரத்த ஓட்டங்களுக்கு உதவும். இதனால் தசைபிடிப்பு குறையும்.
பெண்களுக்கே உரிய பிரச்சனைகள் (ஸ்த்ரீ ரோகங்கள்)
1. அமினோரோஹியா (Amenorrhoea)
இந்த நோய், மாதவிடாயே வராமல் போவது, பெண்கள் பூப்படையாமல் இருப்பது அப்படி வந்தாலும் சரிவர உதிரப்போக்கு இல்லாதது இவற்றை குறிக்கும்.
காரணங்கள்
·பிறிவிக்கோளாறு – கர்பப்பை, Fallopian tube எனப்படும் உறுப்புகளின் வளர்ச்சியின்மை, குரோமோசான் (Chromosomal) குறைபாடுகள்.
சோகை
ஷயரோகம் (T.B), நாட்பட்ட மலேரியா போன்ற ஜுரங்கள்.
மூளையின் ஒரு பாகமான Hypothalamus குறைபாடுகள்
பிட்யூடரி, தைராய்டு, ஓவரியன் ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்காதது.
மனநோய்கள், மனச்சோர்வு
ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள் ஆரோக்கியம், உடல் சக்தி, குறைபாடுகள் Anorexia Nervosa (பசியின்மை – ஒரு வித மனக்கோளாறால் உணவு உண்ணாமை), குறைவாக உண்ணுதல்.
அதிக Stress, அதிகமான, தவறான உடற்பயிற்சிகள்.
இந்த வியாதியின் முதல் கட்டம், பூப்படைவது தடைப்பட்டு,
மாதவிடாய் தோன்றாது. இரண்டாம் கட்டத்தில், மாதவிடாய் தொடங்கி உடனே நின்றுவிடுவது.
2. டைஸ்மெனோரியா:-
இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில் (Spasmodic Dysmenorrhea), அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான Prostaglandin (கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன்) சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் Endometriosis (கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல்), Fibroids (கட்டிகள்), Adenomyosis (கர்பப்பை Lining சிதைவு) போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் (PMS) இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.
3. மெனோராகியா மற்றும் மெட்ரோஜியா Menorrhagia and Metrorrhagia இயல்புக்கு மாறாக அசாதாரணமான உதிரப்போக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது மேற்கண்ட வியாதிகளாகும். Menorrhagia – ஹார்மோன் கோளாறுகள், அடிவயிறு, இடுப்பு தொற்று நோய்கள், Fibroids (கட்டிகள்), சோகை போன்றவை காரணங்கள் Metrorrhagia மாதவிடாய் இல்லாத போது வரும் உதிரப்போக்கு, இது ஒரு ஆபத்தான விளைவு. உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
ஆயுர்வேதத்தின் படி, இந்த உதிரப்போக்குகள், ஹார்மோன் கோளாறுகளாலும் ‘பித்த’ அதிகரிப்பினாலும், கர்பப்பையில் இயல்புக்கு மாறான கட்டி போன்ற வளர்ச்சிகள் வருவன. அதிக உதிரப்போக்கு தலைவலி, கால் தசைகளில் வலி இவற்றை தோற்றுவிக்கும்.