மனிதர்களைப் பற்றிய ஒரு சில உண்மைகள்

Spread the love

பெண்களுக்குரிய வேறுபாடுகள்

1.            உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் தான் ஆண், பெண்களுக்குரிய வேறுபாடு தெரிய வருகிறது. உடல் பலம், சக்தி ஆகியவற்றில் ஆணின் மூளை சுறுசுறுப்பாக உள்ளது. தகவல் தொடர்பு, சைகை போன்றவற்றில் பெண்ணின் மூளை சிறப்பாக உள்ளது. இதை விட ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? ஆண் தனது மூளையின் ஒரு பகுதியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறான். ஆனால், பெண்ணோ இரு பகுதிகளையும் பயன்படுத்துகிறாள். இதன் காரணமாகத் தான் ஆண், பெண் சிந்திப்பதில் கூட வேறுபடுகிறார்கள். இதனை பென்சில்வேனியா பல்கலைக் கழகம் மருத்துவக் கல்லூரியில் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

2.            ஐந்து வயது ஆவதற்கு முன்பே குழந்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகமாக பார்க்க ஆரம்பித்தால் குழந்தைகளை இரு வகைகளில் பாதிக்கிறது. பெற்றோருடன் அக்குழந்தைப் பேசிப் பழகும் நேரமும், அதன் விளையாட்டு நேரமும் குறைந்து விடுகிறது. குழந்தைகளின் அறிவுத் திறனும் கற்பனைத் திறனும் வளர மூளையின் சில பகுதிகளின் வளர்ச்சி அப்போது தான் மிக அதிகமாக இருக்கும். ஆனால், தொலைக்காட்சி இதனை தடை செய்து விடுகிறது. எனவே, குழந்தைகள் உள்ள வீட்டில் தொலைக்காட்சியை அதிக நேரம் இயக்குவதைக் குறைப்பது நல்லது என குழந்தைகள் நல நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தினமும் ஒரு மணி நேரமோ, அதற்குக் குறைவாகவோ டி.வி. பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெரியவர்கள் ஆன பின்பு வன்முறைகளில் ஈடுபடுவது மிகவும் அரிதாக இருக்கிறது என்று அமெரிக்காவின் தேசிய இயக்கம் ஒன்று புள்ளி விவரம் தருகிறது.

3.            மயக்கம்

மூளைக்குக் குறைவான இரத்தம் போகும் பொழுது தான் மயக்க உண்டாகிறது. அளவுக்கு அதிகமான வெப்பம் காணப்பட்டாலும் மயக்கம் நேரிடலாம். திடீரென மயக்கம் கொந்தளிக்கும் பொழுதும் நேரலாம்.

அருவருப்பான காட்சியைக் காணும் போதும், சோகச் செய்தியைக் கேள்விப் படும் பொழுதும் மயக்கம் வரலாம். மயக்கம் வருவதற்கு முன்பு  ஒருவருக்கு மிக அதிகமாக வேர்க்கும். அவர் தோலில் மாறுதல் தோன்றலாம். முகம் வெளுக்கும். அடிக்கடி கொட்டாவி வரும். ஆக்ஸிஜன் உடலில் போதுமான அளவு இல்லை என்பதற்கான அறிகுறி இது.

இவ்வாறு மயக்க நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

1.            அவரைக் கீழே படுக்க வைக்க வேண்டும்.

2.            அவரைச் சுற்றி காற்றோட்டம் ஏற்படுவதற்கு வழி செய்ய வேண்டும்.

3.            பெரும்பாலும் சில நிமிடங்களில் மூளைக்கு போதிய அளவு இரத்தம் பாய்ந்து மயக்க நிலை தெளிந்து விடும். அவ்வாறில்லை எனில், மருத்துவரை அழைத்து விட வேண்டும்.

4.            இதற்கிடைப்பட்ட நேரத்தில் அவர் தண்ணீர் கேட்டால் தரலாம். ஆனால், மது வகைகள், மென்பானங்கள் தரக் கூடாது.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி மூளையில் உள்ள நரம்புப் பகுதிகள் தூண்டப்படுவதால் தான் ஏற்படுகிறது. இந்த நரம்புப் பகுதிகள் தூண்டப்படும் பொழுது சில இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவற்றில் ஒன்று செரோடொனின் ஆகும். இந்த வேதிப் பொருளில் உண்டாகும் மாறுபாடுகள் தான் ஒற்றைத் தலைவலி உருவாக முக்கியக் காரணமாக அமைகிறது.

ஒற்றைத் தலைவலியைத் தவிர்க்க, அதிகமாக வெயிலில் அலையக் கூடாது போதிய அளவு தூங்க வேண்டும். சாப்பிடும் வேளைகளை தவிர்க்க கூடாது. மாற்றக் கூடாது. சைனீஸ் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். அவ்வகை உணவுகளை  சுவைக்காக சேர்க்கப்படும் மோனோ சோடியம் க்ளூட்டோமெட் என்னும் பொருள் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமையலாம்.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வரும் போதெல்லாம் ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஒற்றைத் தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் விழுங்கிப் பழக்கப்படுத்தக் கூடாது. மீறினால் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

அல்ஸெய்மர்

அதிக அளவு நினைவுத் திறன் குறைகிறது என்றால் அல்ஸெயமர் நோயாக இருக்க வேண்டும் என்பதில்லை. கீழே குறிப்பிட்டு உள்ள காரணங்களை கூட அமையலாம்.

1.            பதற்றம் மற்றும் மன இறுக்கம்

2.            டென்ஷன்

3.            தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட கோளாறு

4.            நீரிழிவு

5.            குடல், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்

6.            மதுவின் பாதிப்பில் இருத்தல்

7.            வைட்டமின் பி12 குறைபாடு

8.            மூளையில் உள்ள நரம்புகளை பாதிக்கக் கூடிய மூளைக் காய்ச்சல் அல்லது வலிப்பு நோய்

9.            உட்கொள்ளும் வீரியம் மிக்க மருந்துகள்.

இதனால் ஒருவரின் ஞாபகச் சக்தி பெரிதும் குறையலாம். ஆனால், இது தற்காலிகமானதே! நினைவாற்றல் குறைவதற்கு மூன்றில் ஒரு பங்கு காரணம் பரம்பரை தான். ஆனால், மூன்றில் இரு பங்கு நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள இயலும்.

அவை என்ன?

மூளை மூப்படைவதை நான்கு விதங்களில் தடை செய்ய முடியும். அவற்றில் ஒன்று மூளைக்கு வேலை கொடுப்பது. இரண்டாவது, மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்வது. மூன்றாவது, உடலில் ஊளைச் சதை, உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்வது. நான்காவது, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது.

மிக அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிக இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். மூளை பாதிப்பு மற்றும் அதனால் பக்கவாதம் போன்றவை கூட இதனால் ஏற்படலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கிய உணவுகளை அதிக அளவு உட்கொள்வது மூளைச் செல்களுக்கு நல்லது. உங்கள் மூளைக்கு வேலை தருவதற்கு குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்ற எழுத்துப் பயிற்சிகளை முயற்சியுங்கள். பிடித்தமான பொழுது போக்குகளில் கவனம் செலுத்துங்கள். மூளை திறமையுடன் இயங்கும்.

அன்றைக்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன, யாரை நாம் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம் என்பவற்றை குறித்துக் கொள்ளுங்கள். தினசரி 6 மணி நேரமாவது உறங்குங்கள். போதிய தூக்கமில்லை எனில், நினைவாற்றலை அது குறைத்து விடும்.


Spread the love