அகத்தின் அழகு முகத்தில்

Spread the love

பல சிறப்புடைய இந்த முகத்திற்கு உடலின் ஆரோக்கியத்தை வெளிப் படுத்திடவும் முடியும். அதனால் தானோ என்னவோ நம் முன்னோர்கள் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியைக் கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

முகத்திற்கு பல உடல் நலக் கோளாறுகளை வெளிப்படுத்தும் குணம் உள்ளது. அவை என்ன என பார்ப்போம்.

மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்து வதில் முதலாவது ஒரு மனிதனின் நெற்றி. இது சோர்வாகவும், பளபளப்பு குறைந்தும் காணப்பட்டால் அவனது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சரியாக செயல்படவில்லையென அர்த்தம். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை இந்த நெற்றி காட்டிக் கொடுத்து விடும். உடலில் நச்சுப் பொருட்கள் தேங்கியிருந்தாலும், தூக்கமின்மையாலும் கூட இந்த நெற்றி சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும். இதனைச் சரி செய்ய அதிக தண்ணீர் பருக வேண்டும். நல்ல ஓய்வு தேவை மற்றும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வருவது கண்களும், கண்புருவமும் இவை சோர்வடைவதால் கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்பதனைக் குறிக்கும். சீன மருத்துவ முறையில் கோபம் அதிகம் வருவதற்கு காரணம் கல்லீரல் சரியாக இயங்காதது தான் என்றும் அவ்வாறு கோபம் வரும் பொழுது கண் இமைகள், புருவம் ஆகியவை காட்டிக் கொடுத்துவிடும் என்றும் சொல்லப்படுகின்றது. கல்லீரலின் செயல்பாடு சீராக இருந்தால் கண்புருவம் சிறப்பாக இருக்கும்.

அடுத்து வருவது தாடை. இது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவற்றின் ஆரோக்கியத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. தாடை சோர்வாக பொலிவிழந்து காணப்பட்டால் சிறுநீர் கழிவதில் சிரமம் உள்ளது எனப் புரிந்து கொண்டு சிறுநீரை சீராக வெளியேற தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கடைசியாக வருவது வாய். வாய் சிறப்பாக இயங்கவில்லையெனில் வயிறு சரியில்லை என்று பொருள். உதடுகள் உலர்ந்து வெடித்துக் காணப்பட்டால் வயிற்றில் புண் உள்ளது. மலம் சரியாக வெளியேறவில்லை வாய்வுத் தொல்லை உள்ளது என்று அர்த்தம். பல் ஈறுகளில் இரத்தம் கசிந்தால் அமிலத்தன்மை அதிகமாக வயிற்றில் உள்ளது என்று அர்த்தம். வாயில் புண் வந்தால் வயிறு புண்ணாக உள்ளது என்று அர்த்தம். இவற்றை சரி செய்ய சரியான உணவும் பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும். எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சரியாக ஜீரணமாக முடியாத உணவுகளை தவிர்த்தல் அவசியம். அதிக தண்ணீர் பருக வேண்டும். போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டால் அதிகம் வியர்க்கும் இதனால் உடல் உஷ்ணம் தணியும் உடல் குளுமை அடையும். வயிற்றில் உள்ள புண்கள் ஆறும் வாய்வு பிரியும் எளிதாக மலம் கழிய உதவும். இத்தகைய ஒரு வாழ்க்கை முறையை பழக்கப்படுத்திக் கொண்டால் வாயும் வயிறும் சிறப்பாக இயங்கும். நன்மை தரும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது சரிதானே! அவ்வாறு இவற்றையெல்லாம் நாம் உடனே கண்டுபிடிப்பது என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இவற்றை அக்கறையுடன் கடைப்பிடியுங்கள். மாற்றங்களை உற்று நோக்குங்கள். உடலின் உபாதைகளை முகத்தின் மாற்றங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நாளடைவில் உங்களுக்கே புரியும் எதனால் எது ஏற்படுகின்றது என்று.


Spread the love