முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா?

Spread the love

முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள்  வெள்ளை நிறத்தில் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவர். 

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இதனை சரிசெய்ய சிலர் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இது பக்க விளைவுகளை தான் அதிகளவில் ஏற்படுத்துகின்றது. காலப்போக்கில் முகச்சுருக்கம் ஏற்பட்டு முகம் வயதான தோற்றம் போல் காணப்படும்.

இன்றைய காலத்தில் அநேக பெண்கள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்ததும், வீட்டு வேலையும் செய்து அதிகப்படியான பணிச்சுமையால் தங்கள் அழகை பராமரிக்க நேரமின்றி, முக அழகை கெடுத்து வேதனைப்படுவர்.

தினமும் முக அழகை பாதுகாப்பது சிறந்ததாகும். சிறிது நாட்கள் பராமரிக்காமல் விடுவதினால் கருவளையங்கள், கருந்திட்டுகள், பருக்கள் ஏற்பட்டு முக அழகை இழக்க நேரிடும். இயற்கையாக நம்  வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிதான முறையில் முக அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைய

சாதம் வடித்த கஞ்சி இரண்டு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் அரை டீஸ்பூன், வெண்ணெய் அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒன்றாக கலந்து கருமை படர்ந்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின் முகத்தை கழுவவும். இவ்வாறாக வாரத்தில் 3 முறை செய்து வர கருமை மறைந்து சருமம் பொலிவு பெறும்.

தயிர் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், அரிசி ஒரு டீஸ்பூன், கடலை மாவு சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனை கருமை படர்ந்த பகுதியில் தடவி வர நாளடைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முகத்தில் வைட்டமின் இ எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து வர முகம் நிறம் மாறும்.

நெற்றி மற்றும் வாய் பகுதியை சுற்றி உள்ள கருமை நீங்க உருளைக்கிழங்கு சாறு 2 டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு நான்கு சொட்டு ஆகியவற்றை  ஒன்றாக சேர்த்து பேஸ்டாக செய்து சருமத்தில் கருந்திட்டுகள் உள்ள பகுதியில் தடவவும். இதனை  15 நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறாக செய்து  வர நாளடைவில்  கருமை நீங்குவதைக் காணலாம்.

பாசிப்பயறு

பாசிப்பயிற்றை மையாக  அரைத்து சேகரித்து வைக்கவும். இதனை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, சிறிதளவு தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் சென்ற பின் சுத்தமான நீரில் கழுவவும். இவ்வாறாக இரவு தூங்கும் முன் தொடர்ந்து செய்து வர நாளடைவில் கருந்திட்டுக்கள் நீங்கும்.

பால்

ரோஸ் வாட்டரில் பால் சேர்த்து தினமும் இரவு படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவவும். இது முகத்தில் உள்ள கருமை மற்றும்  தழும்புகள் மறைய உதவுகிறது.

தக்காளி பழம்

எண்ணெய் தன்மை அதிகம் உள்ள சருமத்திற்கு தக்காளிப்பழம் சிறந்த அழகு சாதனப் பொருளாகும். நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி பிசைந்து சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும்.

இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை,  பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி முகத்தை நல்ல நிறத்துடன், பொலிவாக வைக்க உதவுகிறது.

மாம்பழ தோல்

சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நீங்க மாம்பழத்தின் தோல் பகுதியை நீக்கி, பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் சென்றதும் கழுவவும். இது வெயிலில் அலைவதால் ஏற்படும் நிற மாற்றத்திற்கு நல்ல பலனைத் தரும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதையை இரவு தூங்கும் முன் பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் சிறிதளவு குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மையாக  அரைக்கவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் சென்ற பின் கழுவவும். இவ்வாறாக தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வர சருமம் நிறம் மாறி இருப்பதை காணலாம்.

இறந்த செல்கள் நீங்க

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்க சர்க்கரை பெரிதும் உதவுகிறது. சர்க்கரையில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சருமத்தை பொலிவுடன் வைக்கிறது.

முகம் பொலிவு பெற

கெமிக்கல் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே ஃபேஸ் பேக் செய்து வாரம் ஒரு முறை தடவி வரலாம்.

பழங்கள், உலர் பருப்புகள், காய்கறிகள், அழகு தரும் பொடிகள் குறிப்பாக மஞ்சள்தூள், பாசிப்பயிறு, அரிசி மாவு, சந்தனம், முல்தானிமட்டி கற்றாழை, தயிர், பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம்.

முகம் நல்ல நிறத்துடன் பொலிவாக மாற வெயிலில் செல்லும் முன்  சன் ஸ்கிரீன் லோஷன் உபயோகிக்கலாம்.

குளிப்பதற்கு முன் கற்றாழை கொண்டு மசாஜ் செய்யலாம்.

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து கசகசா சேர்த்து நன்கு அரைத்து அதனை முகத்தில் தடவி வரலாம்.

கருமை நீங்குவதற்கான ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

காபி பவுடர்           –     ஒரு டீஸ்பூன்

பால்            –     1 ½ டீஸ்பூன்

செய்முறை

காபி பவுடர், பால் இவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் மிதமான குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

இந்த ஃபேஸ் மாஸ்க் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம். இதனை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி சுத்தம் செய்யவும்.

குறிப்பு

எந்த ஒரு அழகு முறைகளையும் பின்பற்றும்போது முகத்தில் மட்டுமின்றி கழுத்திற்கும் சேர்த்து பயன்படுத்துவது சிறந்ததாகும்.

நம் சருமம் வறண்ட சருமமா அல்லது எண்ணெய் தன்மை கொண்ட சருமமா என்பதை அறிந்து அதற்கேற்றவாறு அழகு பொருட்களை பயன்படுத்தலாம்.

முகத்தில் லேசான நிறமாற்றம் காணப்படின் உடனடியாக அதை சரி செய்வது நன்மை பயக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!