புருவம் தரும் கர்வம்

Spread the love

வில் போன்ற புருவங்கள் வேண்டுமா?

பெண்களின் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் ஒளி படைத்த கண்களினை அவர்கள் பெற்றிருக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம். கண்களின் வடிவமும், அமைப்பும், கருவிழிகளின் ஒளியும், கூர்மையும் சிறப்பாக இருந்தால் தான் எளிதாக பிறரைக் கவர முடியும். முகத்தின் முழு அழகிற்கும் ஆதாரமான இந்தக் கண்களை நாம் கண்டும் காணாமல் இருந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் நம் கண்களுக்காகச் சிறிது நேரம் செலவழித்தாலே போதுமானது.

கண்களின் அழகையும், பளபளப்பையும் கூடுதலாகக் காட்டுபவை புருவங்கள் தான். மொத்த அழகினையும் உறுதிப்படுத்துவது புருவங்களே. கண் ஒப்பனை செய்வதற்கு முன்பு புருவங்களின் ஒப்பனையை செய்ய வேண்டும். புருவங்களின் வடிவமைப்பு ஒத்து இருந்தால் கண்களின் கட்டமைப்பு சிறப்பாக இருக்கும். புருவங்கள் மெலிந்து குச்சி போல் இருந்தால் அது இயல்பான தோற்றத்தை தராது. அது போல புருவங்கள் தடிமனாகவும், கொசகொசவென்றிருந்தாலும் பெண்மைத் தோற்றம் குறைந்து தெரிவதுடன் கண்களின் மொத்த அழகையும் பாழாக்கி விடும்.

புருவங்களை வடிவமைத்தல்:

புருவங்களின் இயற்கையான வடிவம், அவை எந்த இடத்தில் அமைந்துள்ளன. இவை இரண்டு விஷயங்கள் உங்கள் முகத்தின் இயற்கை அழகை நிச்சயிக்கக் கூடியவை ஆகும். எனவே இயன்ற வரை புருவங்களின் அடிப்படை வடிவத்தைப் பெரிய அளவில் மாற்றாமல் இருப்பது நல்லது.

புருவங்கள் எங்கே தொடங்கி எங்கே முடிய வேண்டும்?

புருவங்களின் வடிவமைப்பில் எந்த இடத்தில் ஆரம்பித்து எந்த இடத்தில் முடிய வேண்டும் என்பது மட்டுமல்ல, எந்த அளவிற்கு வளைய வேண்டும் என்பதை நாம் நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு பென்சில் அளவு முறையைப் பின்பற்றினால் போதும். உங்கள் புருவங்கள் சிறியதாகவும், செதுக்கியது போன்ற சிறிய உதடுகளும் கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் புருவங்களையும் மெல்லியதாக அமைத்துக் கொள்ளலாம். பரந்து, கனத்த முகமாக இருந்தால் உங்கள் புருவங்களை மேலும் அடர்த்தியாகவும், தெளிவாகவும் இருக்கும்படி அமைக்கலாம். இதன் மூலம் கண்களின் முழு அழகும் வெளிப்படும்.

புருவங்கள் அளக்கும் முறை:

ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு நிலைக் கண்ணாடியின் முன் அமர்ந்து கொள்ளுங்கள். வலது நாசியின் வெளிப்புறத்தை ஒட்டி, பென்சில் முனை மேல் நோக்கி இருக்கும் படி பென்சிலைப் பிடியுங்கள். பென்சில் கண்ணின் உள் மூலையைத் தாண்டி மேலே செல்லட்டும். எந்த இடத்தில் பென்சில் முனை உங்கள் புருவத்தைத் தொடுகிறதோ, அந்த இடத்தில் இருந்து உங்கள் புருவம் தொடங்க வேண்டும். அதே முறைப்படி, அளவு மாறாமல் பென்சிலை வலது புற கோணத்தில் சாய்த்து கண்ணின் கடைசிப் பகுதியில் படும்படி செய்யவும். பென்சில் முனை எந்த இடத்தில் முடிகிறதோ அந்த இடத்தில் புருவம் முடிய வேண்டும். இடது புறமும் இவ்வாறே உறுதி செய்யப்பட வேண்டும்.

புருவமுடி நீக்குதல்:

புருவங்களில் தாறுமாறாகவும், அடர்ந்து வளர்ந்திருக்கும் முடியை நீக்கும் பொழுது புருவங்கள் அழகு பெறும். ஆனால் தேவையின்றியோ, தேவைக்கு அதிகமாகவோ முடிகளை நீக்கி விட்டால் புருவங்கள் மொட்டையாகவும், இயல்புக்கு மாறான அழகற்றதாகவும் தோற்றம் தரக்கூடும் என்பதால் இதில் மிகுந்த கவனம் தேவை. நல்ல வெந்நீரில் குளித்த பிறகு புருவங்களின் முடியை நீக்குவது தான் சிறந்தது. ஏனெனில் அப்போது முடிக்கால்களின் வேர்ப்பகுதிச் சருமம் மென்மையாக இருப்பதால் முடி எளிதாக வந்து விடும். புருவ முடி நீக்குவதற்கு வட்ட முனைகள் அல்லது கூர்மையான முனைகள் இல்லாத குறுக்கு வெட்டான முனைகள் கொண்ட (Start – ended) ட்வீஸர்ஸ் (Tweezers) தான் ஏற்றவை. முடிகளை நீக்கியதும் ஐ புரோ பிரஷ்கொண்டு புருவத்தை நன்கு பிரஷ்செய்து விட்டு, அதன் பிறகு சிறு பஞ்சு ஒன்றில் டோனரைத் தொட்டுப் புருவத்தில் தடவித் துடைத்து விட வேண்டும்.

புருவமுடி நீக்கும் முறை:

புருவ முடியினை நீக்கும் முன்னர், ஐ புரோ பிரஷ்அல்லது பழைய டூத் பிரஷ்உதவியின் மூலம் புருவத்தைத் தேவையான வடிவில் வைத்துப் பிரஷ்விடுங்கள். பின்னர் ஒழுங்கின்றி இருக்கும் முடிகளை ஒவ்வொன்றாக ட்வீஸரால் நீக்கி விடுங்கள். இரண்டு புருவங்களின் மத்தியில் உள்ள முடிகளை முதலில் நீக்கி விட்டுப் பின்னர் புருவத்தின் வடிவத்திற்கேற்ப மற்ற முடிகளை நீக்குங்கள். ட்வெய்ன் பயன்படுத்தினால் சுத்தமான ட்வெய்னை உபயோகிக்க வேண்டும்.

புருவங்கள் எழுதுதல்:

புருவம் வரைவதற்கு நல்ல, கூரிய ஐ புரோ பென்சிலைத்தான் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கின்றனர். உங்கள் முடியின் நிறத்திற்கு ஏற்ற ஐ புரோ பென்சில்களையே தேர்ந்தெடுங்கள். உங்களது இயல்பான நிறத்திற்கு ஒத்து வராத கலரில் ஐ புரோ வரைந்தால் ஒரு வேடிக்கையான தோற்றத்தை அது தரக்கூடும். நல்ல கூர்மையான ஐ புரோ பென்சில்களைப் பயன்படுத்தினால் தான், நீங்கள் விரும்பிய வண்ணம் நுண்ணிய கோடுகளை வரைய முடியும். எப்போதும் புருவங்கள் உட்புறத்திலிருந்;து தொடங்கி சிறிய சிறிய கீற்றுகள் மூலம் ( சற்று மேல் நோக்கிய கீற்றுகள் ) புருவத்தின் நடுப்பகுதி வரை வரையவும். நடுப்பகுதியில் இருந்து அதே போன்று மெல்லிய கீற்றுக்களாக, கீழ்நோக்கி வரைந்து முடிக்கவும்.

கண் இமை முடிகள் (Eye Lashes) :

கண் இமை முடிகளை மேம்படுத்திக் காட்டும் பொழுது, கண்கள் மேலும் அழகு பெறுவதுடன், கண் மேக்அப்பும் எடுப்பான தோற்றம் பெறுகிறது. இமை முடிகளை வளைப்பதற்கு உருண்டை பிரஷ்கள் (Eye Lash Curlers) கிடைக்கின்றன. வரைந்த இமை முடிகள் அடர்த்தியாகத் தோற்றம் தரக்கூடியவை. இந்தப் பிரஷஜீனால் கவனமாக இமை முடிகளை மேல் நோக்கிச் சுழற்றிப் பலமுறை பிரஷ்செய்தால் முடிகளை வளைக்க இயலும். கண் இமை முடிகளில் கூட சிலர் சாயமிட்டுக் கொள்கின்றனர். ஆனால் இது சற்றுச் சிரமமானது. எனவே தொழில் முறையில் மேக் அப் செய்பவர்களிடம் சென்று இதனை செய்து கொள்வது நல்லது.

பொய் இமை முடிகள் (False Lashes) :

இமை முடிகள் வெளிப்படையாகத் தெரிய வேண்டுமென்பதற்காக சிலர் பொய் இமை முடிகளைப் பொருத்திக் கொள்கிறார்கள். இதை வெட்டியும், குறுக்கியும், தேவைக்கேற்பவும்,இயல்பாக தோற்றம் தருவது போலவும் செய்து கொள்ளலாம். இவற்றை ஒட்டுவதும் பின்னர் நீக்குவதும் சற்றுச் சிரமம் தரக்கூடியது என்பதால் இவ்வாறு அடிக்கடிச் செய்வதை தவிர்ப்பது நல்லது.


Spread the love