கண் சோர்வு

Spread the love

கண்களுக்கு இயற்கை அளிக்கின்ற பாதுகாப்பு மிக மிகக் குறைவு. நாளெல்லாம் அவை பல தொல்லைகளுக்கு ஆட்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் கணிப்பொறி போன்றவற்றின் திரைகளை ஊன்றியும், உற்றும் பார்ப்பது கண் சோர்வுக்கு முக்கிய காரணமாகும்.

கண்கள் தான் ஒருவரது முகத்தின் அழகையும், உணர்வையும் மேம்படுத்திக் காட்டுபவை. மிகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையில் அமைந்திருக்கும் கண்களை நாம் கருத்துடன் பேணிக் காக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக கண்களுக்கு ஊறு விளைவிக்கத்தக்க செயற்கை ஒளியை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது. கணிப்பொறியில் பணி செய்வதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதுவுமே நம் கண்களைப் பெரிதும் சோர்வடையச் செய்கின்றன.

“இந்தியர்களில் பெரும்பான்மையினருக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு எளிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பதுதான். ஆனால் பலமணி நேரங்களுக்குத் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதால் குவிநிலைக் குறைபாடு ஏற்படுகிறது.” என்கிறார் டாக்டர் பிரதீப் சர்மா. தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தொலைக்காட்சி திரையின் மூலை விட்ட அளவைப் போல் ஏழு மடங்கிற்குக் குறைவில்லாத தொலைவிலிருங்து பார்ப்பதுடன் தொலைக்காட்சி பெட்டியின் மேற்புறமோ அல்லது பார்ப்பவரின் பின்புறமோ மெலிதான ஒளியைத் தரக்கூடிய விளக்கு ஒள்றிருப்பது நல்லது.

ஒளிவீச்சின் தாக்கத்தைக் குறைக்கின்ற வகையில் கூசொளி எதிர்ப்புக் கண்ணாடித் திரை ஒன்றை தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளி அளவை மட்டுப்டுத்தலாம்.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது பற்றிக் குறிப்பிடும் போது “தொலைக்காட்சியின் முன்பு குழந்தைகள் நெடுநேரம் அமர்ந்திருப்பது விரும்பத் தக்கதல்ல. குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையாகிலும் அவர்கள் அந்த இடத்தை விட்டெழுந்து சிறிது நேரம் பிற வேலைகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் கண் சோர்வடைவதை ஓரளவு தவிர்க்கலாம்.” தொலைக்காட்சியைவிட கணிப்பொறித் திரையும் அதன் மின் முனையும் கண்களுக்கு அதிக கேடு செய்யக் கூடியவை. கணிப்பொறிகளின் திரை சிறியதாக இருப்பதால் இம்மின்முனைகள் கண்களுக்கு மிக அருகாமையில் அமைய நேரிடுகிறது. இதன் விளைவாக கண்கள் சோர்வடைவதுடன் பிம்பங்கள் உரிய தொலைவில் குவிவடைவதில்லை. இன்றையளவில் கணிப்பொறியில் பணிபுரிகின்றவர்களில் 80,85 சதவிகிதத்தினர் தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கண் குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள நிறுவனம் சுமார் 654 கணிப்பொறிப் பணியாளர்களையும் 532 பிற பணியாளர்களையும் கொண்டு நடத்திய ஆய்வு ஒன்றில் பணிப்பொறி பணியாளர்களிடையே கண் தொடர்பான குறைபாடுகள் பெரிதும் இருந்தது தெரியவந்துள்ளது. கணிப்பொறி இயக்குபவர்கள் 2101 பேரைக் கொண்டு நிக்கி கம்ப்யூட்டர்ஸ் (ஜப்பான்) நடத்திய ஆய்வில் 69.2 சதவிகிதம் பேர்களிடையே கண்சோர்வும், 39.6 சதவிகிதம் பேர்களிடையே கழுத்துப் பிடிப்பும், 25.3 சதவிகிதம் பேர்களிடையே அடிக்கடி கண் இமைகள் துடிப்பதுவும், 22 சதவிகிதம் பேர்களிடையே திரையில் வரும் பிம்பங்கள் மசமசவென்றும் தெரிந்ததுவும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து கண் சோர்வினால் கண் பார்வை பாதிக்கப்படுவதுடன் தலைவலி, தெளிவின்மை, இரட்டைப்பிம்பங்கள் தோன்றல் மற்றும் கிறுகிறுப்பு, குமட்டல் போன்ற தொல்லைகள் ஏற்படக்கூடும். அது மட்டுமன்றி கணிப்பொறிகளில் பணியாற்றுவோர் கணிப்பொறிதிரையையும், கையெழுத்துப் பிரிதியையும் மாற்றி மாற்றிப் பார்த்துச் செயல்பட வேண்டியிருப்பதால் அவர்களது கண்களின் பாவை அல்லது கருவிழித்துளை (றிuஜீவீறீ) அடிக்கடி விரிந்து சுருங்க நேரிடுகிறது. இதனால் கண்கள் விரைந்து சோர்வடைகின்றன.

கண்களுக்குப் பயிற்சி தருவதன் மூலம் கண்சோர்வை ஓரளவு தவிர்க்கலாம். இதை கண் மருத்துவமனைகளில் உள்ள ஸைனாப்டோபோர்அல்லது பிரிசம் பார்ஸ் என்ற கருவிகளின் உதவியினால் செய்யல்£ம். பெரும்பான்மையோர் தங்கள் இல்லங்களிலேயே தினமும் 10 நிமிடங்கள் கண் பயிற்சி செய்யலாம்.

சில பயிற்சிகள்   

ஒரு பென்சில் அல்லது பேனாவை வலது கையினால் எழுதுமுனை மேல் நோக்கியவாறு கைக்கெட்டிய தூரத்தில் பிடியுங்கள். மெல்ல மெல்ல அதைக் கண்களருகே எழுதுமுனை இரண்டாகத் தெரியும் வரை கொண்டு வாருங்கள் அந்த அளவில் நிறுத்திச் சிறிது நேரம் பென்சிலின் முனையை உற்று நோக்குங்கள். பின்னர் பென்சிலை கண்களருகில் இருந்து அகற்றிப் பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். இது போல் நான்கைந்து முறை செய்யுங்கள்.

கண்சோர்வை நீக்க மற்றுமொரு பயிற்சி. ஒரு மேஜையின் முன்பு உட்கார்ந்து கொண்டு முழங்கைகள் இரண்டையும் மேஜையில் ஊன்றிக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் இறுகப் பொத்திக் கொள்ளுங்கள். தலையைத் தொய்வாக வைத்து இரண்டு கைகளாலும் தாங்கிக் கொள்ளுங்கள். இதே போல் பத்து நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களிலிருந்து கைகளை விலக்குங்கள். இதுபோல் தினமும் பல முறை செய்யலாம்.


Spread the love