கண்களை பாதுகாப்போம்

Spread the love

கண்கள் இந்த உறுப்பைத்தான் நாம் பேச்சு வழக்கில் சிலவற்றிற்கு உதாரணமாகக் கூறுகிறோம். எடுத்துக்காட்டாக. “கண்ணைப் போல பார்த்துக்கொள்ள வேண்டும்” “எப்பொழுதும் ஒரு கண் இருக்க வேண்டும்”. இப்படி இதற்கும் மேலாக கவிஞர்களின் உவமைகளில் கண்ணே, விழியே என்றும் கூறுவார்கள்.

கண்கள்-இதற்கு விலை என்பது கிடையாது.   காரணம் உடலின் மற்ற உறுப்புக்கள் நலக்குறைவு அடைந்தாலும் அவற்றை ஓரளவிற்கு ஈடுசெய்யலாம், கண்களைப் பொறுத்தவரை எத்தனை நவீனமாக, எப்படி பாதுகாத்தாலும் மேலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய உறுப்பாகும்.

ஒரு குழந்தை பிறந்ததும் நாம் செய்யும் முதல் சோதனை அதற்குக் கண்கள் சரியாகத் தெரிகிறதா!  காதுகள் சரியாக கேட்கின்றனவா என்பதேயாகும். அதற்குக் காரணம் பார்வை குறைபாடற்ற குழந்தைதான் பின்நாளில் சமூகத்தில் ஒர் அங்கமாகும். அப்பொழுது கவலையற்ற வாழ்வை அது மேற்கொள்ளும். கண்களில் குறைபாடுகள் ஏற்படக்கூடிய காரணங்களில் ஒன்று வைட்டமின் ஏ குறைபாடு. உடலில் வைட்டமின் ஏ குறைந்தால் உயிர்ச்சத்து குறைகிறது. என்று பொருள் இதனால் மாலைக்கண் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் கண்பார்வை மங்குவது இதன் முதல் அறிகுறி இதனைத் தொடர்ந்து விழியின் வெண்படலம் வறண்டு பழுப்புநிறம் அல்லது மண்ணின் நிறத்தை அடையும். அதில் வெள்ளைப்புள்ளிகள் தோன்றும் இதனுடன் விழியின் முன்படலத்தில் புண்கள் தோன்றும் மஞ்சள் நிறத்தில் தூள் போன்ற பொருளாகி பின் கண்பார்வை முழுவதும் பாதிக்கப்படும்.

அதைப்போல குழந்தைகள் படிப்பதற்குத் தனிஅறை தரப்பட்டிருந்தால் அவ்விடத்தில் வெளிச்சம் சீராக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே போல் நல்ல காற்றோட்ட வசதியும் அவசியம். படுத்துக்கொண்டோ, சோபாக்களில் சாய்ந்து கொண்டோ தொலைக்காட்சி பார்ப்பதை தடுப்பது நல்லது. காரணம் சரியான வகையில் அமையாத பார்வைக் கோணங்களினால் கண்கள் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோலவே குழந்தைகளுக்கு வீடியோகேம்ஸ் போன்ற விளையாட்டுக்களை தவிர்த்து இயற்கையாக மைதானங்களில் விளையாடுவதற்கு ஏற்படுகளைச் செய்துத் தரவேண்டும். ஓய்வுநாட்களில் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள மைதானங்கள், பூங்காக்கள் இவற்றிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று நடத்தல், ஓடுதல், விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம்.  மேலும், தொடுதிரை தொலைபேசிகளில் விளையாடும் விளையாட்டிற்கு அனுமதிதரக்கூடாது.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதைத் தவிர்க்க விலையுயர்ந்த தொலைபேசிகளை வாங்கி அவர்களே விளையாடத் தருகின்றனர்.  இதனால் குழந்தைகளின் கண்கள் கெட்டுப்போவதுடன் மற்ற உடலுறுப்புகள் சரியாக இயங்காமல் கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலே சொன்னவற்றைப் படிக்கும் போதோ, நினைக்கும் போதோ பயம் ஏற்படும். காரணம்  பார்வை என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி, பிற உயிரினங்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதன் பலன்களை இங்கு பட்டியலிட முடியாது. அதனால் தான் கண்கள் விலை மதிப்பில்லாதது என்கிறோம். மேலும், கண்பார்வைக் குறைபாடுகள் இன்று அதிகமாக ஆட்கொள்ளப்படுவது குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் ஆவர்.

குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது, கணினி இனையதளம் என பல மணி நேரங்களை செலவழிப்பது. தொடுதிரை அலைபேசிகளில் அதிக நேரம் விளையாடுவது இவைகளெல்லாம் ஒரு காரணமாகிறது என்றாலும் சத்தான உணவு வகைகளை உட்கொள்ளாமல், துரித உணவுகளாலும், நொறுக்குத் தீனிகளாலும் உடலைக்கெடுத்து கொள்கின்றனர்.  குழந்தைகளின் உணவு முறைகளைப் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுகளான, பொன்னாங்கண்ணிக்கீரை, பப்பாளி, கேரட் கொய்யா, பூசணி, முருங்கை, முட்டை, தயிர் போன்ற உணவு வகைகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பாக்கெட்டுகள் மற்றும், டின்களில் அடைத்து வைத்த உணவுப்பொருள்களைக் கூடுமான வரையில் தவிர்ப்பது மிகமிக நல்லது. குழந்தைகளை கண்பார்வைக் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பது போல சர்க்கரை நோய் உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பின் ஒரு பகுதியாக கண்பார்வை பிரச்சனை பார்க்கப்படுகிறது. சாதாரணமாக பொருட்களைப் பார்க்கும் நமது கண்களின் லென்சுகளில் தெரியும் பிம்பங்கள் விழித்திரையில் பதிகின்றன. இந்தப் பதிவிடம் “மகுளா” எனப்படும். இந்த மகுளாவிலிருந்து பார்வை நரம்புகள் மூலம் பார்க்கும் பொருள் குறித்து மூளைக்குத் தகவல் செல்லும். இந்தத் தகவலால் தான் நாம் பொருட்களைப்பார்க்க முடியும்.  இவை அனைத்திற்கும் நொடிப்பொழுது நேரமே செலவாகும்.

இதுவே சர்க்கரைநோயின் பாதிப்பிற்குள்ளாகும் போது விழித்திரையில் உள்ள சிறு, சிறு இரத்தக்குழாய்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். ஆக்ஸிஜன் செல்வதற்கு பாதிப்பு ஏற்படும். இதனால் “மகுளா” பாதிப்படையும். இத்தகைய நிலையில் பார்வையில் பாதிப்பு அதிகமாகும். இதனை டயபடிக்ரெடினோபதி என்கின்றனர். இதற்குத் தீர்வு இரத்ததில் சர்க்கரையின் அளவைக் கண்டறிதல், அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுதல் இவைகள் தான்.

கண்களில் ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகள், பெரியவர்கள் என்று எவருக்கும் ஏற்படாத வண்ணம் கவனித்துக்கொள்வது மிக மிக அவசியம். காரணம் பார்வைத்திறன் குறைவு உடலளவிலும் மனதளவிலும் தளர்ச்சியையும், வெறுப்பையும் தரக்கூடியது எனவே பார்க்கும் கண்களை காப்போம் கண்ணுக்கு கண்ணாக.     

                                                                ச. சுதர்ஸனா

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love