கண்ணுக்கு மை அழகு

Spread the love

கண் மேக்அப்:

அழகான முகத்திற்கு மேலும் அழகைத் தருவது கண்கள் தான். அந்தக் கண்களை மேலும் அழகுள்ளதாகக் காட்டக் கூடியது திறம்பட செய்து முடிக்கப்பட்ட கண் மேக்அப் தான். கண் மேக்அப்பினை இரண்டு, மூன்று நிமிடங்களில் மிக எளிதாகவும் செய்ய முடியும். ஐ புரோ பென்சிலால் இரண்டு கோடுகள், ஷேடோ கொண்டு பிரஷினால் ஒன்றிரண்டு தீற்றல்கள், கொஞ்சம் மஸ்காரா, ஒரு இயல்பான அவுட்டிங் செல்ல காலை நேரத்தில் கடைத் தெருவிற்குச் செல்வதற்கு இது போதும்.

மாலை நேர விருந்துகள், விழாக்களுக்குச் செல்லும் போது வேண்டிய அளவு விரிவாக 15 நிமிட நேரத்திற்கும் செய்யலாம். பல வித வண்ணங்களில் ஐ ஷேடோ , ஐ லைனர், மஸ்காரா, ஐ புரோ பென்சில் என்று பலவகை கண் அலங்கார சாதனங்கள் உள்ளன.

கண் மேக்அப் ஒரு நிமிட கண் மேக்அப் என்றாலும், 15 நிமிட கண் மேக்அப் ஆனாலும், கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், கண் மேக்அப் சாதனங்களைக் கவனமுடன், திறமையுடன் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். ஓய்வாக இருக்கும் வேளைகளில், பல வண்ண ஷேடோ க்களையும் கொண்டு உங்களுக்கு ஏற்றது என்று பரிசீலிக்கவும். பொதுவாக சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு மென்மையான, அதிகம் நிறம் உள்ள ஷேடோ க்களும், ஐ லைனரும், மஸ்காராவும் ஏற்றது. மாநிறம் கொண்டவர்களுக்கு சற்று இருண்ட (Dark) வண்ணங்களும் அவற்றின் கலவைகளும் ஏற்றவை.

ஐ ஷேடோ  (Eye Shadow):

ஐ ஷேடோ  கிரிம்கள், பென்சில்கள் மற்றும் கெட்டியான பவுடர் வடிவங்களில் கிடைக்கின்றது. தனித்தனி வண்ணங்களிலும் கிடைக்கும். இவற்றை கலந்து கொண்டு தேவையான நிறத்தையும் உண்டாக்கிக் கொள்ளலாம். ஐ ஷேடோ க்களில் பவுடர் வடிவில் வருபவை பூசுவதற்கு எளிதாக இருக்கும். ஸ்பாஞ்ச் அல்லது மேக்அப் பிரஷ்உதவி கொண்டு கவனமுடன் பூசலாம். பவுடர் முதலில் சற்றுக் கனமாகத் தெரிந்தாலும் நன்கு தடவி, நீவி விட்டு மெலிதாக செய்து கொள்ளலாம். கிரிம் ஷேடோ க்களைப் பயன்படுத்த இன்னும் சிறிது திறமை வேண்டும். இதைப் பிரஷினாலோ அல்லது விரல்களினாலோ வேண்டிய அளவில் தடவிச் சமன் செய்து கொள்ளலாம். பவுடர் பென்சில் வடிவத்தில் வரும் ஷேடோ வைத் துல்லியமாக பயன்படுத்த இயலும். மேலும் கிரிம்கள் உபயோகிக்கும் போது ஏற்படுகின்ற கிரிஸ் தடவியது போன்ற பிசுக்குத் தோற்றம் பென்சிலைப் பயன்படுத்தும் போது ஏற்படாது.

ஐ ஷேடோ  பயன்படுத்தும் முறை:

ஐ ஷேடோ  பயன்படுத்துவதற்குச் சிறந்த முறை, தாடையை மேலோடு உயர்த்திக் கொண்டு, கீழ் நோக்கி பார்த்த வண்ணம் இமைகளால் தடவுவதேயாகும். உங்கள் கண்களை ஏற்ற இறக்கங்களுடன் தோன்றச் செய்வது ஐ ஷேடோ  தான். கண் மேக்அப்பில் முக்கியமானதும் இதுதான். ஷேடோ  தடவும் போது இமைகளின் வெளிப்புறத்துச் சருமத்தின் நிறத்தோடு ஷேடோ வின் நிறம் இணைந்து தோன்றும் படி நன்கு நீவி மெலிதாக்கி இணைக்க வேண்டும். இல்லையென்றால், கண்களின் கடைப்பகுதியில் வண்ணங்கள் ஒழுங்கு இல்லாமல் காணப்பட்டு, ஒரு விநோதமான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.

முதலில் இமை முழுவதும் ஹைலைட்டிங் கலரைத் தடவிச் சமமாக்கவும். பின்னர் ஆழ்ந்த (Dark) நிறங்களான ப்ரவுன், கிரே, புளு, பர்ப்பிள் போன்ற வண்ணங்களைக் கொண்டு கண்களின் வடிவத்தை நிலைப் படுத்திக் கொண்டு, பின்னர் உள்ளிருந்து வெளிப்புறமாக நீவிப் பூச வேண்டும். கண்களின் குழிந்த பகுதியின் நீள்வட்ட விளிம்பை ஆழ்ந்த நிறமுடைய வேவொரு ஷேடோ வினால் வரைந்து மென்மையாக்கவும்.

ஷேடோ  இடும் போது கண் இமைகள் கனமாக இருந்தால், இமை முழுவதும் ஷேடோ  தடவிப் புருவம் வரை இழைத்து (Blend) விடுங்கள். கண் விழிகள் ஆழத்தில் இருந்தால், வெளிர் நிற ஷேடோ வை இமைகளில் தடவுவதுடன், அடர்ந்த நிறமுடைய ஷேடோ வை கடைக் கண்ணிலிருந்து மேல் நோக்கிப் புருவம் வரை இடலாம். இரு உங்கள் கண்களை அகன்று விரிந்த கண்களாக்கிக் காட்டும்.

கண்கள் இரண்டுக்கும் இடையேயுள்ள இமை வெளி அகன்று இருந்தால், இமைகளுக்கு இட்டு இருக்கும் ஷேடோ வை மூக்கின் மேல் எலும்பு வரை இட்டு நன்றாக இழைத்து விடுங்கள். இது கண்களுக்கு இடையே உள்ள வெளியை நெருக்கமாகக் காட்டும் அல்லது மூக்கருகே கண் முனையில் ஷேடோ வைத் தொடங்கி இமையின் நடுவில் வந்ததும் நிறுத்தி விடுங்கள். இதுவும் இடைவெளியை நெருக்கமாகக் காட்டும்.

கண்கள் குறுகி நீண்டிருந்தால், சிறிதளவு ஷேடோ வை கீழ் இமை முடிகளுக்குக் கீழேயும் தடவுங்கள். இமையின் நடுவில் தொடங்கி, மேல் பக்கமாக புருவத்தை நோக்கி வளைந்தாற் போல இழைத்து விடுங்கள். ஒரு பறவையின் இறக்கை போல அகன்று விரிந்த கண்கள் போன்ற தோற்றத்தை இது தரும்.

உங்கள் கண்கள் அதிக அளவு வட்டமாக இருக்குமானால், உங்கள் புருவத்தின் வடிவம் கோண வடிவில் (Angular) இருக்க வேண்டும். இமையின் நடுவில் ஷேடோ வைத் தொடங்கி, வெளிப்புறமாகத் தடவிச் சென்று, கண்களின் கடைசி தாண்டிச் சிறிது செல்லும்படி செய்ய வேண்டும்.

உருண்டையான பெரிய கண்களாக இருந்தால், ஆழ்ந்த நிறமுடைய ஷேடோ வை இமைகளில் தடவி விட்டு, சற்று மென்மையான நிறத்தைப் புருவங்களுக்குக் கீழே தடவினால் கண்களைச் சிறிதாக்கிக் காட்ட இயலும்.

உட்குழிந்து காணப்படும் கண்களை வெளிக் கொண்டு வந்து காட்டுவதற்கு இமைகளில் மெலிதான, வெளிர்ந்த ஷேடோ வைப் பூசி விட்டு, புருவங்களுக்கு கீழே ஆழ்ந்த வண்ணத்தை தடவலாம்.

தொங்கிய அல்லது தூங்கியது போன்ற தோற்றம் தரும் கண்களுக்கு கண் குழிவை ஒரு அடர்ந்த நிறமுடைய ஷேடோ வினால் சுற்றி வரைந்து, கண்ணின் கடைசிப் பகுதியில் வரையாமல் நிறுத்தி விடுவது நல்ல தோற்றத்தைத் தரும். புருவத்தை மேல் நோக்கிப் பிரஷ்செய்து விடுவதுடன் ஐ புரோ பென்சிலை அழுத்தமாக வரைந்து புருவத்தை பளிச்சென்று தெரியச் செய்யவும்.வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவ்வகை பென்சில்களை வாங்கும் முன்னர் பென்சில் முனை காய்ந்து போகாமல் இருப்பதுடன், நல்ல மெழுகு போன்று மென்மையாகவும் இருக்கிறதா? என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பென்சிலை பயன்படுத்தும் போது சருமத்தை இழுக்கவோ, கீறவோ கூடாது.

ஐ லைனர் இடும் முறை:

கண் இமைகளின் விளிம்புகளைத் தெளிவாக வரையறுத்துக் கண்களை அதிக அழகுடன் தோன்றச் செய்வதற்காகவே ஐ லைனர் பயன்படுத்தப்படுகிறது. கண்களின் வெள்ளை விழிகளுக்கு நேர் எதிராக இவை கருமையாகத் தோற்றம் தருவது கண்களின் அழகை மிகுதியாக்கிக் காட்டும். எப்போதும் ஐ ஷேடோ  இட்டதின் பின்னரே ஐ லைனர் இட வேண்டும்.

இமைகளில் ஐ லைனர் இடுவதற்கு முன்னர் ஒரு மேஜையின் முன் அமர்ந்து கொண்டு முழங்கைகளை மேஜையின் மேல் ஊன்றிக் கொள்ளுங்கள். ஒரு கையினால் கண்ணின் கடை முனையைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையினால் இமை முடிகளுக்கு மேல்புறம் மென்மையாக ஐ லைனர் கொண்டு கோடிடுங்கள். மேல், கீழ் இமைகளில் கோடிட்டு வரையுங்கள். ஐ லைனர் மேலும் எடுப்பாக தெரிய வேண்டுமென்றால், லைனர் பென்சில் அல்லது கண்மையை கீழ், மேல் இரண்டு இமைகளின் உட்புறம் தடவுங்கள். இது உங்கள் கண்களைக் கடல் போலாக்கிக் காட்டும். ஆனால், கண்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்தால், இந்த விதத்தில் ஐ லைனர் இடும் போது கண் மேலும் சிறியதாக தோற்றம் தர வாய்ப்புண்டு. மேலும் இவ்விதம் ஐ லைனர் இடும் போது கண்ணில் நீர் வரலாம். எரிச்சல் ஏற்படலாம். எனவே கவனமுடன் செய்ய வேண்டும்.

மிக மெலிதாக ஐ லைனர் இட நினைப்பவர்கள், தாங்கள் இட்டிருக்கும் ஐ ஷேடோ  நிறத்தை ஒத்த ஐ லைனர் பென்சிலால் இமை விளிம்புகளில் இடம் விட்டு, இடம் விட்டுச் சில புள்ளிகள் இட வேண்டும். பின்னர் உள்ளங்கால் போல் வடிவமுள்ள கண்களுக்கு இமைகளின் வெளிப்பக்கத்தை ஆழ்ந்த நிறமுடைய ஷேடோ வினால் நிரப்பி விட்டு, உட்பகுதி எல்லையில் லைட் கலர் ஷேடோ வினை இட்டு அதை மேல்புறமாக புருவ எலும்பினை நோக்கித் தடவி பூசவும்.

கண்கள் நெருக்கமாகவும் குறுகியும் இருந்தால், கண்களின் வெளி முனைப் பக்கம் மேம்படுத்திக் காட்டப்பட வேண்டும். ஆழ்ந்த நிறமுடைய ஷேடோ வை இமைகளின் வெளிப் பகுதியில் இட்டு அதை வெளிப்புறமாக தடவி விட வேண்டும். கண்ணின் உட்புறத்தில் வெளிர் நிற ஷேடோ வைத் தடவுங்கள். அதே போன்று இமை முடிகளின் கீழ் பகுதியிலும் ஆழ்ந்த நிறமுடைய வண்ணத்தை ஒரு இமையில் தொடங்கி வெளிப்புறம் நோக்கி இட்டு நிரப்புங்கள். அகன்று விரிந்த கண்களாக இருந்தால் கண்ணின் உட்பகுதியை பளிச்சென்று ஆக்கிக் காட்டுங்கள். மூக்கிற்கு அருகாமையில் தொடங்கி ஒரு ஆழ்ந்த நிறமுடைய ஷேடோ வை இட்டு, கண்ணின் வெளிப் பகுதியை ஒரு வெளிர் நிற ஷேடோ  கொண்டு தடவிச் சமன் செய்யுங்கள். கண்ணின் கடை முனை தாண்டி மேக்அப் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஐ லைனர் (Eye Liner):

சந்தையில் ஐ லைனர் மூன்று விதங்களில் வருகின்றன. ஒன்று நீர்ம (Liquid) வடிவில், மற்ற இரண்டும் பென்சில் வடிவில் வருகின்றன. நீர்ம வடிவில் வரும் லைனர்கள் சிறிய பாட்டில்களில் ஒரு மெல்லிய ப்ரஷ்உடன் சேர்த்து விற்கப்படுகின்றன. இதை மிகவும் கவனமுடன் இட வேண்டும். மிகவும் கனத்தும் போகக் கூடாது. மிக மெலிதான அளவிலும் இருக்கக் கூடாது.

ஐ லைனர் பென்சில்கள் இரண்டு வகைகளில் வருகின்றன. தண்ணீரில் கரையக் கூடியது ஒரு வகை. இதை சிறிது தண்ணீரில் நனைத்து ஈரமாக்கிக் கொண்டோ, எச்சிலை தொட்டுக் கொண்டோ தடவ வேண்டும். வேண்டிய அளவில் இதை மெலிதாகவும், தடிமனாகவும் தடவலாம். இரண்டாவது வகையைச் சேர்ந்த பென்சிலைப் பயன்படுத்தும் முன்னர் ஈரமாக்க கை விரலால் தடவி இவைகளை இணைப்பதுடன் ஐ ஷேடோ வுடன் இணைந்து கலந்து விடுமாறு செய்து விட வேண்டும்.

கண்கள் மிகப் பெரியதாகத் தெரிய வேண்டுமென்று விரும்பினால், கீழ் இமையின் நடுப் பகுதியில் இருந்து வெளிப்பகுதி நோக்கிக் கோடிட்டு கண்ணின் கடைசி வரை இழுத்து விடவும்.

ப்ளீச்சிங்:

முகத்தில் அரும்பும் மெல்லிய பூனை முடிகளையும், புருவ முடிகளையும் ப்ளீச் செய்வதற்குப் பாதுகாப்பான பல கிரிம்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு ப்ளீச் செய்யும் போது, முடியின் நிறம் வெளுத்துப் போவதுடன் சருமத்திலிருந்து வேறுபட்டுத் தெரிவதில்லை.

செய்முறை:

                        ப்ளீச் செய்ய வேண்டிய இ;டத்தை நல்ல சோப்பும், குளிர்ந்த நீரும் கொண்டு கழுவித் துடைத்து ஈரமின்றிச் செய்யவும். ப்ளீச் கிரிமில் அரைத் தேக்கரண்டி எடுத்து பவுடருடன் கலந்து ஒரு மரஸ்பூனால் (Spatula) தடவவும். 15 நிமிடம் கழித்து மரஸ்பூனால் வழித்து எடுத்து விடவும். உங்கள் சருமம் மிகவும் மென்மையானது என்றால் கிரிமை வழித்தெடுத்தவுடன் தண்ணீரால் கழுவி விடுங்கள். புருவங்களைப் ப்ளீச் செய்யவும் இதே முறையைப் பின்பற்றுங்கள்.

இமை முடியும், மஸ்காராவும்:

இமை முடிகளுக்கு மஸ்காரா இட்டு நிறமூட்டினால் அது கண்களை மேலும் அழகாக காட்டக் கூடும். கண் மேக்அப்பின் கடைசி செயல் மஸ்காரா தான். மஸ்காராவில் வாட்டர் புரூப் மற்றும் வாட்டர் புரூப் அல்லாதது என்று இருவகைகள் உண்டு. சாதாரணமாக வாட்டர் புரூப் அல்லாத மஸ்காரா தான் எல்லாருக்கும் ஏற்றது. இதை இடுவதும் எளிது. அகற்றுவதும் எளிது. நீந்தச் செல்பவர்கள், நீரில் நனைபவர்களுக்கு வாட்டர் புரூப் மஸ்காரா பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அகற்றுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லாவிடில் இமை முடிகளைச் சுற்றி இருக்கும் மெல்லிய சருமம் பாதிக்கப்படக் கூடும். இமை முடிகள் உதிர்ந்து போகவும்  நேரிடலாம். கருப்பு, அடர்ந்த ப்ரவுன், நிலக்கரி நிறம் போன்ற வண்ணங்களிலும் கிரே மற்றும் நீல வண்ணங்களிலும் உள்ள மஸ்காராக்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

மஸ்காரா இடும் முறை:

படத்தில் ( படம் அவசியம் ) காட்டியுள்ள படி ஒரு கண்ணை மூடிக்கொண்டு, மேலிருந்து கீழாக இமை முடி தொடங்குமிடத்தில் அடிப்பாகத்திலிருந்து, நுனியை நோக்கி மஸ்காரா இடவும். பிறகு கண்ணை அகலத் திறந்து கொண்டு, கீழிருந்து மேலாக முடியின் அடிப்பாகத்திலிருந்து நுனியை நோக்கி மஸ்காரா இடவும். மேல் இமை முடியை விடக் கீழ் இமை முடிகளுக்கு சற்றுக் கூடுதலாக மஸ்காரா இடவும். இதே போல் மற்றக் கண்ணுக்கு இடவும்.

கண் மேக்அப் அகற்றுதல் (Removing Eye Make-up):

கண் இமைகளையும் இமை முடிகளையும் சார்ந்திருக்கும் மேக்அப் பொருள்கள் காய்ந்து போய் கண் சருமத்திற்கு கேடு ஏற்படக் கூடாது என்று நினைத்தால் கண் மேக்அப்பைக் கலைக்கும் போது திப்பிகள், தூசு இல்லாதவாறு சுத்தமாக களைய வேண்டும். குறிப்பாக கண் மேக்அப்பை முற்றிலுமாக களைந்த பிறகு, கடைசியாக இருக்கும் சிறிய சிறிய மஸ்காரா துகள்களை காட்டன் பட் (Cotton Bud) அல்லது பஞ்சு சுற்றிய குச்சி ஒன்றினை எடுத்துக் கொண்டு, அதனை க்ளென்சரில் முக்கி எடுத்து இமை முடிகளை நீவித் துடைக்கலாம்.

கண் மேக் அப் ரிமூவரை ஒரு பஞ்சுப் பேடில் தடவிக் கொள்ளுங்கள். கண்ணை டிக் கொண்டு மேல் புறமாக வைத்து அழுத்தித் துடைத்தபடி, கீழ்ப்புறமாகக் கொண்டு வர வேண்டும். அதே பஞ்சை மறுபுறமாக வைத்துக் கொண்டு இதே போல் செய்யுங்கள். சருமத்திலிருந்து மேக் அப் மறையும் வரை பஞ்சை மூன்று நான்கு முறை மாற்றித் திரும்ப திரும்ப செய்யுங்கள். இதே போல் மற்றொரு கண்ணிற்கும் செய்யுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவி தூய துவாலை ஒன்றினால் மெல்ல மெல்ல ஒத்தி எடுங்கள்.


Spread the love