நாம் இந்த அற்புத உலகைப் பார்த்து ரசிப்பதற்கு மிகவும் உறுதுணையானவை தான் கண்கள்.நம்மில் ஒருசிலர், இயற்கையாகவோ அல்லது விபத்துகளின் போதோ கருவிழி பாதிக்கப்பட்டு பார்வையற்றவர்களாக,மாறி விடுகின்றனர். அப்படி, பாதிக்கப்பட்டு பார்வையற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை வரும் சாத்தியம் உள்ளது. அதற்கு, மிகவும் முக்கியம் கண்தானம் செய்தவர்களின் கண்கள் தான். கண்களைத் திறந்து வைக்கும் கடவுள் என்று கண்தானம் செய்வோரை சொல்லலாம். நமது நாட்டில், கருவிழியில் ஏற்பட்ட பாதிப்பால் பல்வேறு வகையில், பார்வையிழந்து காணப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சம் என சொல்லலாம்.கண்பார்வையற்றவர்களுக்கு பயன்படட்டுமே என்று ஒருசிலர் செய்யும் கண்தானம் தான், பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகின்றன. கண்தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து, கண்தானம் செய்வதற்கு என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
கண் தானம் செய்ய வேண்டுமா?
ஒருவர் தனது கண்களை தானமாக வழங்க வேண்டும் என்று கருதினால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு, கண்தானத்திற்கான உறுதிமொழி படிவத்தை நிரப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வளவு தான். கண்தானத்திற்கான உறுதிமொழி எழுதிக் கொடுத்தவர் இறந்த பின்பும்,அவரது உறவினர்கள், அருகில் உள்ள அரசு மருத்துமனைக்குத் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க வேண்டும். கண்தானம் செய்ய விரும்பும் பெரும்பாலானவர்கள், தான் உயிருடன் இருக்கும் போது, கண்தானம் செய்யப்போகும் விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்வது கிடையாது. அப்படியே சொன்னாலும்,குடும்பத்தினர் அதற்கு அனுமதிப்பதும் இல்லை. இதனால், கண்தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தை மறைத்துக் கொண்டு இறந்து போவதும் உண்டு. ஒருவர் இறக்க நேர்ந்தால் அவர் கண்தானத்திற்கான உறுதிமொழி அளித்திருந்தால், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி செயலாற்றுவது தான் சிறந்தது. ஏனெனில், மண்ணில் புதைவதை விட, இரண்டு பேருக்கு பார்வையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்தானம் எழுதிக் கொடுத்தவர், இறந்து விட்டால், அந்த உடலில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள் கண்களை அகற்றி விட வேண்டும். ஆகவே, தங்களது குடும்பத்தினர் இறந்தவுடன் கண்வங்கிக்கு தகவல் தெரிவித்து விட வேண்டும்.இறந்தவர்களின் கண்களை மூடி விட வேண்டும். பின்பு, அந்த மூடிய இமைகளின் மேல் பகுதியில், ஈரப்பஞ்சை வைத்து விட வேண்டும் அல்லது உடல் வைக்கப்பட்டிருக்கின்ற அறையில் மின்வசிறி ஓடிக் கொண்டிருந்தால், அதை நிறுத்தி விட வேண்டும்.
ஒருவர் இறந்து விட்டதை தகவல் தெரிவித்த பின்பு, கண்வங்கியிலிருந்து சிறப்பு மருத்துவர் குழு வீட்டிற்கு வந்து, இறந்தவரின் கண்களில் இருந்து கருவிழிப்படலத்தை எடுத்து செல்வர். இந்த கருவிழிப்படலம் எடுப்பதற்கு குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள் போதுமானதாகும்.
இறந்தவர்களின் உடலில் இருந்து கண்களை எடுக்கும் போது, முகம் மிகவும் விகாரமாக காட்சியளிக்கும் என்று நினைத்துக் கொண்டு, கண்களை தானமாக எழுதிக் கொடுக்க தயங்குகின்றனர்.இறந்தவரின் உடலில் இருந்து பெறப்படும் இரண்டு கண்கள், கண்பார்வையற்ற இரண்டு பேருக்கு பார்வை வழங்குகின்றன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருவர் கண்தானம் செய்வதற்கு இந்த ஜாதி தான் இருக்க வேண்டும். இந்த மதம் தான் இருக்க வேண்டும் என்கிற எந்த கட்டுப்பாடும், நிபந்தனையும் இல்லை. மனிதாபிமானமிக்க மனிதராக இருந்தால் மட்டுமே போதுமானது. மனிதாபிமானத்துடன் நீங்கள் கண்தானம் செய்யுங்கள். உங்கள் உறவினர் நண்பர்களிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தாலோ, அல்லது வேறு ஏதும் தொற்றுநோய்,கண்களில் புற்றுநோய், எய்ட்ஸ், மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய பிரச்னைகள் இருந்தால், கண்களை தானமாக பெறும் போது, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்பு தான் ஏற்றுக் கொள்ளப்படும்