மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்க வேண்டியதில்லை. கண்ணின் சிறப்பைச் சொல்லாத இலக்கியங்கள் கிடையாது கண்ணைப் பற்றிப் பாடாத கவிஞர்களும் கிடையாது.
1935 ல் பிலாபோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி இறந்தவர்களின் கண்களை உயிரோடிருந்தவர்களுக்குப் பொருத்த முடியும் எனக் கண்டறிந்தார். இவர் இந்த உண்மையைச் சொல்லும் முன்பே 1906 –ல் மருத்துவ உலகம் கண் அறுவை சிகிச்சையை செய்து காட்டிவிட்டது.
கண் அறுவை சிகிச்சை என்று சொல்லும்போது ஒருவருடைய கண்ணை எடுத்து அப்படியே கண்களுக்குள் வைப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது தவறு! கண் அறுவைச் சிகிச்சையால் மாற்றப்படுவது கண் அல்ல! கருவிழி மட்டும்தான்! மிக மிக மெல்லிய உறுப்பு கண். ஆனால் இதுவரை செய்யப்பட்ட கண் மாற்று அறுவை சிகிச்சை எல்லாமே வெற்றிகரமாக நடந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? கரு விழியில் இரத்த நாளங்கள் கிடையாது என்பது தான் அந்த அறுவை சிகிச்சை தோல்வியில்லாமல் முடிந்ததற்குக் காரணமாகும்.
கருவிழிகளைத் தவிர ஒருவருக்கு மொத்தமான பார்வை நரம்புகள், தசைநார்கள் போன்ற பிற பாகங்களை மற்றொருவருக்கு பொருத்துவது இன்று வரை முடியாத காரணமாக இருக்கிறது. ஒருவரது பார்வை இழப்பிற்குப் பல காரணங்கள் உள்ளன பார்வை நரம்புகள் அல்லது கண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் இரத்தக் குழாய்கள் சேதமடைந்தால் பார்வை பறிபோகும் இதற்கு சிகிச்சை கிடையாது.
குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால் மரபணு கோளாறுகளினால் கருவிழி பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்பு உண்டு குழந்தை எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் வளர வளர பார்வை மங்கலாகும். பார்வை முழுவதுமாக பறிபோகவும் வாய்ப்புண்டு. இதற்கு கண் மாற்று அறுவைச் சிகிச்சையைத் தவிர வேறு சிகிச்சை கிடையாது.
கருவிழி மாற்று சிகிச்சை என்பது மிக மிக நுணுக்கமான சிகிச்சையாகும். கண்களுக்கே தெரியாத சிறு சிறு தையல்கள் மூலம் புதிய கருவிழி இணைக்கப்படுகிறது. இந்தக் கருவிழி மாற்று சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.
இருதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்படும் “ஒவ்வாமை” என்ற பிரச்சினை இந்த அறுவைச் சிகிச்சையில் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டால் அதை மருந்துகள் மூலம் சரிப்படுத்தி விட முடியும்.
மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் கண்கள் தானம் பெற்றவர்களின் ஆயுட்காலம் வரை நன்கு செயல்படும். பற்பல காரணங்களால் தானம் பெற்றவரின் உடல்நிலை காரணமாக அறுவைச் சிகிச்சை தோல்வியடைந்தால் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து பலன்பெற்றுக் கொள்ளலாம். மொத்தம் மூன்று தடவை இந்த அறுவைச் சிகிச்சையை செய்து கொள்ளலாம்.