உடற்பயிற்சி என்று சொன்னதுமே, ஜிம்முக்கு சென்று கடினமான பயிற்சி எடுப்பது என்கிற எண்ணத்தில் இருக்கிறீர்களா. தவறில்லை. உடற்பயிற்சி என்பது ஜிம்மில் மட்டும் செய்யக் கூடியதல்ல. வீட்டிலும் செய்ய முடியும்.
இன்றைய இளைஞர்கள் சத்தான உணவுகளையே சாப்பிடுகிறார்கள். அதற்கான பொருளாதாரம், அவர்களிடம் இருப்பதால் பணம் ஒரு பிரச்சனை இல்லை. சாப்பிடுவதோடு ஆரோக்கியம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பொழுதுக்கும் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து விடுகிறார்கள். அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகாவது உடற்பயிற்சி பற்றி எண்ணிப் பார்க்கிறார்களா என்றால் இல்லை. ‘நெட்டில்’ அமர்ந்து உலக விஷயங்களை ஊடுருவத் தொடங்கி விடுகிறார்கள்.
பல நேரங்களில் நள்ளிரவு தாண்டியும் இந்த தேடல் தொடர்கிறது. இதனால் விடிகாலையில் தூங்கப் போய் சரியான தூக்கமின்றி ஆரோக்கியத்தையும் மெல்ல மெல்ல இழக்கிறார்கள்.
தூங்கவே நேரம் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சிக்கு மட்டும் எங்கிருந்து நேரம் கிடைக்கும்? அதனால்தான் உடல் பருமன் தேடிவந்து ஒட்டிக் கொள்கிறது. குண்டாகி விடுகிறார்கள். சோம்பலைப் போக்க புகை பிடிக்கும் பழக்கம் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டு நுழைந்து விடுகிறது. வலுக்கட்டாய தூக்கத்தை வரவழைக்க விரும்பும் பலர் மதுவுக்கு அடிமையாகி விடும் அவலமும் நடக்கிறது.
இப்படி மது அருந்தி விட்டுத் தூங்க முயற்சிக்கிறவர்களின் கதைதான் பரிதாபம். ஒரு கட்டத்தில் மது அருந்தினால் கூட தூக்கம் இவர்களுக்கு தூரமாகி விடும். அப்போது மதுவின் அளவை அதிகரித்து தூங்க செல்வார்கள்.
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி மன ஆரோக்கியத்துக்கும் தூக்கம் அவசியம். தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இந்த தூங்கும் நேரத்தை பல நேரங்களில் செல்போன் எடுத்துக் கொள்கிறது. காதலர்களாக இருந்தால் நள்ளிரவில் தான் காதல் வசனங்களை ஒப்பிக்கத் தொடங்குகிறார்கள். இரவில் நீண்ட நெடுநேரம் பேசி விடிகாலையில் தான் அரைகுறை மனதோடு செல்போனை கிடத்திவிட்டு,தூங்கப் போகிறார்கள். சிலர் நெட்டில் நேரத்தை தொலைக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் காலையில் எழ வேண்டிய கட்டாயத்தில் சிறு விஷயத்திற்கும் கோபப்படுவார்கள். சரிவர தூங்காதவர்களின் மன அமைதி பாதிக்கப்படும். முக வசீகரம் குறையும். அதனால் அழகு நிலையம் தேடிப்போய் வசீகரத்தை திரும்பப் பெற பணத்தை கொட்டுபவர்களும் உண்டு.
குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்தாலே போதும் உடல் ஆரோக்கியம், முக வசீகரம் திரும்பி விடும். குறைந்தபட்சம் தினமும் 20 நிமிட நேரமாவது வாக்கிங்கை தொடர வேண்டும். குண்டானவர்களுக்குத்தான் வாக்கிங் அவசியம் என்று சிலர் நினைக்கக் கூடும். அது தவறு.
குண்டோ, ஒல்லியோ எல்லோருக்குமே வாக்கிங் அவசியம். இதனால் மூளை சுறுசுறுப்பாவதுடன் நாள் முழுக்க உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருப்பீர்கள். இந்த சுறுசுறுப்பு, இரவு தூக்கத்திற்கும் துணை வருகிறது. படுத்தவுடன் தூங்க முடிகிறது.
அனுதினமும், அதிகாலையானால் உடற்பயிற்சி, நல்ல சத்துள்ள உணவுப் பொருள், சரியான நேரத்தில் தூங்கப் போதல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது, ஆரோக்கியம், உயர்வின் பக்கம் அனுப்பி வைத்து விடும்.
ஆயுர்வேதம்.காம்