நம்மில் பலர் நாக்குக்கு அடிமையானவர்கள். பசிக்கு சாப்பிடுவதற்கு பதிலாக நாக்கு ருசிக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இயற்கையான சத்துணவுக்கு முக்கியத்துவம் தராமல் சுவையுணர்வுக்கே முக்கியத்துவம் கொடுத்து அல்லல் வரும் என்று தெரிந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பசிக்காக உண்ணும் உணவு சுவையுடன் இருக்கவேண்டும் என விரும்புவது தவறல்ல. சுவைக்காகவே உண்பதுதான் தவறாகும். பெரும்பாலோர் பசியுணர்வுக்கும் ருசியுணர்வுக்கும் வேறுபாடு தெரியாதவர்களாக உள்ளனர். காரணம் பசியெடுத்த நேரத்தில் உண்ணும் பழக்கம் இல்லாமல் தினசரி இன்ன நேரத்தில்தான் உண்ண வேண்டும் அல்லது உண்ணமுடியும் என்ற திட்டத்துடன் வாழ்கின்றனர். நமது வாழ்க்கை முறை பசியெடுக்கும் நேரத்தில் உண்ணுவதற்கு ஏற்றதாக இல்லை. காரணம் ஒரு நாளின் இன்னின்ன நேரத்தில் இன்னின்ன செய்யவேண்டும் என்ற ஒரு நியதியை வகுத்துக்கொண்டு ஏறக்குறைய அதைப் பின்பற்றுகிறோம். அது காலை, மதியம், இரவு உணவு என்பதாக இருக்கிறது. இது தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது. இதனால், பசி எடுக்கிறதோ இல்லையோ உணவு உண்பதற்கான நேரத்தில் உணவை உண்ணவேண்டியது ஆகிவிட்டது.
அப்படி உண்ணும் போதெல்லாம் பசி இருப்பதில்லை. அதனால் சாதாரண உணவை விரும்பி உண்ணமுடிவதில்லை. அதனால் பசி இல்லாவிட்டாலும் உண்ணும் விதத்தில் உணவை நாவிற்கு ஏற்ற முறையில் சுவையாகச் சமைத்து உண்கிறோம். அதனால் குறிப்பிட்ட உணவு நேரம் வந்தவுடன் பசியுணர்வுக்கான அறிகுறிகளுக்கு முன்பாகவே சுவையாக உண்ணவேண்டும் என்பதற்கான அறிகுறிகள்தான் ஏற்படுகின்றன. அந்தச் சுவையுணர்வால் தூண்டப்பட்டே உணவு உண்பதற்கு விரும்புகிறோம். ஒவ்வொரு நேரமும் பசியுணர்வுக்கு முன்பே சுவையுணர்வு முந்திக் கொள்வதால் சுவையுணர்வையே பசியுணர்வாக எண்ணி வாழப் பழகிவிட்டோம்.
பசியுணர்வு என்பது உடலில் உள்கட்டமைப்பாக உள்ள மூலக்கூறுகள் தாங்கள் வாழ்வதற்கும் இயங்குவதற்குமான சக்தி இல்லாமல் போகும்போது அல்லது குறைந்து போகும்போதுதான் ஏற்படும். ஆனால் சுவையுணர்வு என்பதோ சுவையான உணவுகளை நினைத்தாலே ஏற்படும். அதனால்தான் பசியுணர்வு கொஞ்சமும் இல்லாத நேரத்தில்கூட நொறுக்குத் தீனிகளைச் சுவைக்காக உண்கிறோம். அப்படி உண்பதன் காரணமாக உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்துக் கொள்கிறோம்.
தேவையில்லாமல் உண்பதால் அதைத்தொடர்ந்து தேவையில்லாத சத்துக்கள் சேர்வதால் அவற்றைச் செரிக்கவேண்டிய வேலையும் கழிவுகளை வெளியேற்றவேண்டிய வேலைகளும் அதிகரிக்கிறது. அதனால் ஒருவரின் உடல் எந்த அளவு எடையுடன் பராமரிக்கப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு மாறாக எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு காரணமாக பல நோய்களை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
சுவைக்காக உண்ணும் உணவு பெரும்பாலும் இயற்கை உணவாகவோ அல்லது தீங்கற்ற சமைத்த உணவாகவோ இருப்பதில்லை. தீங்குவிளைவிக்கக்கூடிய பொறித்த, வறுத்த, கொழுப்புப்பொருட்கள் அதிகம் நிறைந்த உணவுகளாகத்தான் உள்ளன. அதனால் உடல் நலம் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகிறது.
இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? பசியுணர்வையும் ருசியுணர்வையும் பிரித்துப் பார்க்கவேண்டும். பசிக்காக மட்டும் உண்ணவேண்டும். ருசிக்காக உண்ணக்கூடாது. ஏதாவது சாப்பிடலாம் அல்லது எது இருந்தாலும் கிடைத்ததைச் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு வந்தால் அதுதான் பசியுணர்வு. அதாவது நமது உடம்புக்கு உண்ண ஏதாவது கொடுக்கவேண்டும் என்பது இதன் பொருள் ஆகும். ஆனால், இது இருந்தால் சாப்பிடலாம் அல்லது இப்படி இருந்தால்தான் நன்றாக இருக்கும் அல்லது இதுவேண்டும் என்ற உணர்வு இருந்தால் அது சுவையுணர்வு. அதாவது நமது உடலுக்கு எதுவும் தேவையாக இல்லை. நாக்கு தன் ருசி உணர்வைத் தீர்த்துக்கொள்ள கேட்கிறது என்று இதன் பொருள் ஆகும்.
பசியுணர்வு ஏற்பட்டால் அந்த உணர்வை அதிக நேரம் இழுத்தடிக்க வேண்டியது இல்லை. குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் ஏதாவது தீங்கற்ற உணவை உண்ணவேண்டும். அதுவே சுவையாக இருக்கும். ஆனால், அதற்கு மாறாகச் சுவையுணர்வு ஏற்பட்டால் அதைக் கெட்ட குணமாக நினைக்கவேண்டும். அப்போதுதான் அதுபற்றி நம் மனதில் எப்போதும் எதிர்மறையான உணர்வு இருந்துகொண்டிருக்கும். அதன்பின்னும் உண்மையாகவே பசியுணர்வு ஏற்படும் வரை எதுவும் உண்ணக்ககூடாது.
பசித்தால் மட்டும் உண்பது என்ற பழக்கம் வந்துவிட்டால் அந்த உணவு அதில் அடங்கியுள்ள சத்துக்கள் இது பற்றிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை, இயற்கையுணவாகவும் தீங்கற்ற உணவாகவும் இருந்தால் போதும். காரணம் அதில் உள்ள குறைநிறைகளை நமது உடல் சரியான முறையில் கையாண்டு நமது உடலுக்கு நன்மை பயப்பதை எடுத்துக்கொள்ளும். தவறானவற்றைக் கழிவுகளாக வெளியேற்றிவிடும்.
நமக்கு ஏதாவது உண்ணும் உணர்வு ஏற்படும்போது அது உண்மையாகவே பசியுணர்வுதானா? கண்டிப்பாக ஏதாவது கிடைத்ததை உண்டுதான் ஆகவேண்டும் என்ற நிலை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு அதன் பின் உண்ணப் பழகுவோம்.
வீட்டில் சமைப்பதை வேளாவேளைக்கு சாப்பிடுபவர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பசிக்காக உண்பதை அவர்கள் சிறிது முயற்சி செய்தால் பழக்கப்படுத்திக் கொண்டு வீட்டு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வெளியில் சாப்பிடுபவர்கள், சுவையுணர்வுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நபர்கள், இந்த ஓட்டலில் இன்னின்ன அயிட்டங்கள் ருசியாக இருக்கும் என்று ஒரு பட்டியலே வைத்துக் கொண்டு அலைவார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். தொண்டையில் இறங்கும் வரைதான் எந்த ருசியும். அதன் பிறகு ருசியாவது மண்ணாவது..!