ஏறக்குறைய முடிந்து விட்ட விஷயம் இனி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டபோது நவீன மருத்துவம் கை கொடுக்க வந்திருக்கிறது. ஆம்! மாதவிடாய் மறைந்ததும் ஏற்படுகின்ற தொல்லைகளுக்கு ஹார்மோன் பதிலமர்த்தீடு மருத்துவம் (Hormone Replacement Therapy) இருண்ட வானில் ஒரு ஒளிக்கீற்றாய்த் தோன்றியிருக்கிறது.
மாதவிடாய் மறைகின்ற வேளையில் ஏற்படும் எண்ணற்ற தொல்லைகள் போதாதென்று, மருத்துவத்துறையில் எழுப்பப்பட்டு வருகின்ற ஏராளமான கருத்துக்கள் (உடன்பாடுடையவை, முரண்பாடானவை) வேறு மனத் தளர்ச்சியை தந்து கொண்டிருந்தன.
மாதவிடாய் மறைவதென்பது இயற்கை. அதனுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்ற தொல்லைகளெல்லாம் முற்றிலும் செயற்கை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் மறுசாராரோ அதெல்லாம் சரியில்லை.
மாதவிடாய் மறைகிறது என்றாலே ஹார்மோன் சுரப்புக் குறைகிறது என்று தான் பொருள். எனவே குறைகின்ற ஹார்மோனை பதிலமர்த்தீடு (Replacement) செய்யும் வகையில் மருத்துவம் செய்யலாம் என்கின்றனர். ஆனால் உண்மை என்னவோ இது இரண்டிற்கும் நடுவில் இருக்கிறது.
மாதந்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாதவிடாய் ஒழுங்கில்லாமல் வரத்தொடங்கிப் பின்னர் படிப்படியாக மறைந்துபோவதே மாதவிடாய் மறைவதாகும். (menopause) பூப்பெய்துகின்ற காலத்தில் ஏற்படுவது போன்ற ஒரு வகை உணர்ச்சிப் பெருக்கும் மனத்தடுமாற்றமும் மாதவிடாய் மறையுங்காலத்திலும் ஏற்படக்கூடும். சாதாரணமாக இது ஒரு பெண் ஐம்பது வயதை எட்டுகின்ற போது ஏற்படக் கூடும். ஆனால் சில பெண்களுக்கு மிக அரிதாக 38 வயதிலும் இன்னும் சிலருக்கு 60 வயதிலும் நிகழலாம்.
இந்தக் கால கட்டத்தை பெண் நெருங்கும்போது அவளது இனப்பெருக்கத்திறன் குறைந்து கொண்டே வந்து பின்னர் மறைந்து விடுகிறது. அப்போது அவளது சினையகச் சுரப்புக் குறைந்து போகிறது. அதிலும் குறிப்பாக சினையின் வளர்ச்சிக்கு உதவுகின்ற எஸ்ட்ரோஜனும் கருப்பை வளர்ச்சிக்கு உதவும் புரோஜெஸ்ட்ரோனும் குறிப்பிடத் தக்க அளவு குறைந்து போகிறது.
மாதந்தோறும் கருப்பையில் நடந்து வந்த திசு வளர்ச்சியும் சிதைவும் மாதாந்திர உதிரப்போக்கும் மறைந்து விடுகிறது. மாதவிடாய் மறைவதென்பது இத்துடன் நின்றுவிட்டால் கவலையே இல்லை.
மாறாக 80 சதவிகிதம் பெண்மணிகள் எஸ்ட்ரோஜன் குறைவினால் ஏற்படக்கூடிய முகஞ்சிவத்தல். மூச்சுத்திணறல். படபடப்பு. வலியுடன் கூடிய உடலுறவு, புணர்புழை நீர்த்தாரை நுண்மத்தொற்று நோய்கள் மூத்திரத்தை அடக்க முடியாமை, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற எண்ணற்ற தொல்லைகளால் அவதிப்படுகின்றனர். இவை போதாதென்று மனநிலைத் தடுமாற்றங்கள், ஆர்வக் குறைவுகள், மனத்தொய்வு போன்றவற்றால் ஏற்படும் இன்னல்கள் வேறு.
மனமும் உடலும் சார்ந்த பல கோளாறுகளுக்கு ஹார்மோன் பதிலமர்த்தீடு மருத்துவம் நல்ல பலனளிப்பதாகத் தெரிகிறது. அது மட்டுமன்றி Post Menopausal எனப்படும் மாதவிடாய் மறைவுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய இதயக்கோளாறுகள், எலும்பு நொய்மை (Osteoporosis) போன்ற பெரிய தொல்லைகளைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.
Osteoporosis என்பது எலும்புகள் மெலிதாகி நொய்மையுற்று உடைந்து விடும் தன்மையுடையதாக ஆகும் ஒரு நோய். எஸ்ட்ரோஜன் குறைவினால் வயதான பெண்களுக்கு இந்நோய் எளிதாக ஏற்படக்கூடும். ஆண்டொன்றிற்கு அமெரிக்காவில் மட்டும் 11,000 பெண்கள் இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளாகின்றனர்.
பிஸிஜி எனப்படும் ஹார்மோன் பதிலமர்த்தீடு (Horomone Replacement herapy)
மருத்துவத்தால் மாதவிடாய் மறைந்து பெண்களிடையே ஏற்படக்கூடிய இதய நோய்கள், எலும்புநொய்மை, இடுப்பு எலும்பு முறிவு, புற்றுநோய் மற்றும் பிற நோய்களை 50 முதல் 70 சதவிகிதம் குறைத்து விடமுடியுமென்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எல்லாவற்றிலும் தொல்லைகள் இருப்பது போல் ஹார்மோன் பதிலமர்த்தீடு மருத்துவத்திலும் தொல்லைகள் சில உள்ளன. நெடுநாட்களுக்கு எஸ்ட்ரோஜன் உட்கொள்கின்றபோது கருப்பை உள்வரிப் புற்றும் (Endometial Cancer) மார்பகப் புற்றும் (Breast Cancer) தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இந்த ஆய்வுகள் செய்யப்பட்டு ஆண்டுகள் பலவாகி விட்டமையாலும், அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளான குறைந்த அளவு எஸ்ட்ரோஜன் மாத்திரைகளும் தற்போது கிடைப்பதாலும் மேற்சொன்ன தீமைகள் எதுவும் வராமல் தடுத்துவிடலாம் என மருத்துவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.
மேலும் ஹார்மோன் பதிலமர்த்தீடு மருத்துவம் செய்து கொண்ட பெண்களைக் காட்டிலும் செய்து கொள்ளாத பெண்களுக்குக் கருப்பைப்புற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இம்மருத்துவத்தின் நன்மை, தீமைளை தீவிரமாக ஆராய்ந்த பிறகே இம்மருத்துவத்தால் நன்மைகளே அதிகம் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். உலகெங்கிலும் இது ஒத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.
ஹார்மோன் பதிலமர்த்தீடு மருத்துவத்தில் சில குறைபாடுகள், கோளாறுகள் இருக்கலாம், ஏனெனில் இது செயற்கை முறை. ஆனால் அதைச் சீர் செய்து கொள்ளுகின்ற வகையில் ஹார்மோன் மாத்திரைகள் பல அளவிலும் வடிவிலும் கிடைக்கின்றன. புணர்புழை வறட்சியைப் போக்குவதற்கு Estrogen கிரீம்கள் கிடைக்கின்றன.
ஹார்மோன் பதிலமர்த்தீடு மருத்துவம் எல்லாப் பெண்களுக்கும் ஏற்றது என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லி விட முடியாது. ஏற்கனவே புற்றநோய்க் கூறுபாடு உள்ள பெண்களுக்கும், வாரிசு வழிப்படி புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புள்ள பெண்களுக்கும் இம்மருத்துவம் செய்யப்படக்கூடாது.