மூக்கில் இரத்தம் (Epistaxis)

Spread the love

மூக்கில் இரத்தம் (Epistaxis)

நம்முடைய மூக்கு ஒரு மென்மையான உறுப்பு. பாக்சிங்கில் அதைத்தான் படாய்ப்படுத்துகிறார்கள். யாராவது கோபப்பட்டால் ‘அவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருது’ என்பார்கள். யாருக்காவது கோபம் வந்தால், மூக்கில்தான் குத்துகிறார்கள். பெரும்பாலான பாக்ஸர்களுக்கு மூக்கு தண்டு உடைந்திருக்கும். (இதனால் ஒன்றும் பிரச்னை இல்லை.) அவர்களது மூக்கு ரப்பரை போல் நன்கு அழுந்தும். (சந்தேகம் இருந்தால், தைரியசாலிகள், பாக்ஸர்களின் மூக்கை அழுத்திப் பார்க்கலாம்.) அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் கொட்டும். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ்பகுதியில் நுண்ணிய இரத்தக்குழாய்கள் (தந்துகிகள்) சந்திக்கின்றன. இவைகள் சுலபமாக உடையும் குழாய்கள். சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் (மூக்கை நோண்டினாலும்) உடைந்து ரத்தம் வர ஆரம்பித்து விடும்..

காரணங்கள்

•மூக்கை நோண்டுவது, விபத்து, மூக்கில் அடிபடுவது.

•குளிர்காலத்தில் உலர்ந்த சூடான காற்றை அதிக நேரம் சுவாசிக்க நேர்ந்தால் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

•ஆஸ்பிரின் போன்ற இரத்தமிளக்கிகள் (anti – coagulants) காரணமாகலாம்.

•பலமாக மூக்கை சிந்துவது, மூக்கில் கட்டி, சைனஸ் ஷயரோகம், பால் வினை நோய்கள், தொழுநோய் இவை காரணமாகவும் ரத்தம் வரும்.

•மண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை புண்கள் இவற்றால் ஏற்படும் உதிரப்போக்கு மூக்கு வழியே வடியும்.

•மூக்கின் ஈர ஜவ்வுப்பகுதிகள் உலர்ந்து போனால் ரத்தம் வரும். குளிர்காலத்தில் இந்த மாதிரி மூக்கில் ரத்தம் வருவது அதிகம்.

•மூக்கில் உதிரம் கொட்டும் போது பார்க்க பயமாகத்தான் இருக்கும். மூக்கின் முன் பகுதியிலிருந்து ரத்தம் வருவது அவ்வளவு ஆபத்தில்லை. ஆனால் மூக்கின் பின்புறத்திலிருந்து வந்தால் ஆபத்து தான். எனவே மூக்கில் ரத்தம் வழிந்தால் டாக்டரிடம் உடனே செல்வது நல்லது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், நிறுத்துவது கடினம். இவர்கள் தங்களின் நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இரத்தக் கசிவை உண்டாக்கலாம். அதே போல மூட்டுவலிக்காரர்கள் சாப்பிடும் சில மருந்துகளும் மூக்கில் ரத்தம் வடிவதை உண்டாக்கும்.

•மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும் போது சிறிதளவாவது அந்த ரத்தத்தை முழுங்கி விடுவதை தவிர்ப்பது கடினம். முழுங்கப்பட்ட ரத்தம் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, வாந்தி எடுக்கச் செய்யும்.

ஆயுர்வேதக் காரணம்

பித்த தோஷ சீர்கேட்டினால் மூக்கில் ரத்தம் வரும். இதை ஆயுர்வேதம் ‘ரக்த பித்தா’ என்கிறது.

சிகிச்சை

வீட்டு வைத்தியம் / ஆயுர்வேதம்

1.நோயாளியை ஆடாமல் அசையாமல் ஒரு நாற்காலியில் உட்கார வைக்கவும். நார்மலாக இருக்கட்டும். தலையை பின்புறம் சாய்க்க வேண்டாம். குளிர் ஒத்தடம் அல்லது ஐஸ்கட்டிகளால் மூக்குக்கு மேலிருக்கும் பிரதேசங்களிலும், மூக்கின் “பாலத்திலும்” ஒத்தடம் கொடுக்கவும்.

2. நோயாளி தன் முகத்தையும், தலையையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

3. மாதுளம் பூவை நுகர்வது நல்லது.

4. தர்ப்பைப் புல் சாற்றில் 5 (அ) 10 சொட்டு வரை ஒவ்வொரு மூக்கிலும் விடலாம். இந்த ஜுஸுடன் வெங்காய சாறு, பிரண்டை சாறு, மாங்காய் விதை சாறுகளை கலந்து மூக்கில் விடலாம்.

5. மாதுளம் பூ சாறு, கடுக்காய் பொடி – இவற்றை தேனுடன் (அ) பாலுடன் சேர்த்து குடித்து வரவும்.

6. வாழை மரத்தின் இளம் இலைகளை 2 கிராம் எடுத்து விழுதாக அரைத்து 20 கிராம் சர்க்கரை, மற்றும் 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து தினமும் குடித்து வரவும்.

7. பழைய அரிசி, பார்லி, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, தேன், படிக சர்க்கரை, கரும்புச்சாறு, பசு நெய், வாழை, புடலங்காய், வெள்ளரி, வேப்பிலை, மாதுளம் பழம், தேங்காய், விளாம்பழம், திராட்சை முதலியன மூக்கில் ரத்தம் வருவதை குணப்படுத்த உதவும் உணவுகள். காரமான, புளிப்பான, உப்பான உணவுகளை தவிர்க்கவும்.

8. நெல்லிக்காயை மோரில் அரைத்து, விழுதை சூடான நெய்யில் போடவும். குளிர்ந்த பின் எடுத்து நெற்றியிலும், மூக்கில் பக்கங்களில் தடவவும்.

9. சாமனா சிகிச்சையில் மூலிகை மருந்துகள் மூக்கில் விடப்படும்.

10. மலமிளக்கும் மருந்துகள் தரப்படும்.

11. மசாலா செறிந்த உணவுகள் தவிர்க்கப்படும்.

12. ஆயுர்வேதத்தின் படி, மூக்கிலிருந்து வெளியே வந்த ரத்தம், சீர் குலைந்த பித்தம். எனவே முதலில் சிறிது ரத்தம் போனால் அதை அடைக்க தேவையில்லை. அதுவே சில நிமிடங்களில் நின்று விடும். நிற்காவிட்டாலும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருந்தாலும் சிகிச்சையை மேற்கொள்ளவும்.

குணமளிக்கும் ஆயுர்வேத மருந்துகள்

வசா அவலேகியம், வசாக்ருதம் அம்லாக்கி சூரணம், மூக்கில் விட அனு தைலம், அம்லா சூரணம், ச்யவன பிராசம், ஆயுர்வேதம் முக்கியமாக உபயோகிக்கும் பொருள் – வசம்பு.

இதர சிகிச்சை

•மூக்கை இரு பக்கமும் அழுத்தி 5 லிருந்து 10 நிமிடம் வரை பிடித்துக் கொள்ளவும். மூக்கை பிடித்தால் வாய் வழியே ரத்தம் வரலாம். அதைக் கண்டு பயப்பட வேண்டாம். வாய் ரத்தத்தை வெளியே துப்பவும்.

•நிற்காமல் ரத்தம் கொட்டும் ஹீமோஃபிலியா வியாதி உள்ளவர்களுக்கு ரத்தத்தை நிறுத்துவது கடினம். இவர்கள் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

•ரத்தம் வரும் இடத்தை மின்சாரத்தால் லேசாக “தீய்த்து” விடுவது முக்கிய சிகிச்சை இதை Causterization என்பார்கள்.

•ஆயுர்வேதம் ‘சோதனா’ (உடலை சுத்திகரிப்பது) மற்றும் சாமனா (நாஸ்யம் மூக்கில் மருந்து விடுதல்) சிகிச்சை முறைகளை கையாளும்.

•சோதனா சிகிச்சையில் விரேசனா சிகிச்சையும் உண்டு.

•இவற்றால் உடலின் கழிவுகள் நச்சுக்கள் வெளியேற்றப்படும்.


Spread the love