எலும்புகளை ஒட்ட வைக்கும் எலும்பொட்டி

Spread the love

சிறு நகரம் முதல் மாநகரம் வரை பெருகி வருவது மக்கள் தொகை மட்டுமல்ல, வாகனங்களும் தான். இரண்டு சக்கர வாகனம் முதல் பஸ், லாரி, டிரக் வண்டிகள் என்று பலவித வாகனங்கள் சாலையை ஆக்ரமித்து வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் தனது பணி புரியும் இடத்தை, வேக வேகமாக அடைந்து விட வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தில் செல்வது ஒரு பக்கம்.

மது அருந்தி விட்டு வாகனங்களில் பயணிப்பவர் அதிகம். வயதான முதியவர்கள் மட்டுமன்றி வளரும் குழந்தைகள் கூட காலை முதல் இரவு தூங்கும் வரை படிப்பு, படிப்பென்று இருக்க உடற்பயிற்சியோ, பள்ளியில் விளையாட்டு மைதானம் என்று இருந்தாலும் விளையாட்டு வகுப்புகளும் இல்லாமல் அதன் காரணமாக உடலில் எலும்புக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இன்றி எதிர்பாராத விதமாக எலும்பு முறிவு எளிதாக ஏற்பட்டு விடுகிறது.

அதிக உயிர் இழப்புகள், சாலை விபத்துக்கள் என்பதுடன் எலும்பு முறிவும் அதிகமாகிக் கொண்டே வரும் ஒரு உடல் சார்ந்த பிரச்சனையாகி விட்டது.

எலும்பு முறிவு ஏற்படாமலிருக்க ட்கொள்வதும் கவனக் குறைவு இல்லாத வண்ணம் நடந்து கொள்வதும் அவசியமானது. எலும்பு முறிவு ஏற்பட்டால் ஆயுர்வேதத்தில் குணப்படுத்த பல மூலிகைகள் இருந்தாலும் எலும்பொட்டி என்ற மூலிகையை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இதன் அறிவியல் பெயர் -& ஓர்மோகார்பம் கொசின் சைனிஸ்

தாவரக் குடும்பம் &- ஃபபசியே

இது எங்கு காணப்படுகிறது?

தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படுகிறது. விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

எலும்பொட்டிச் செடி சிறு குறிப்பு

செடி வகையைச் சேர்ந்த இச்செடி, வளம் உள்ள மண்ணில் எளிதாக, நன்றாக வளரும். அதிக வெயில், அதிக குளிர் இல்லாத மிதமான சீதோஷ்ண நிலையில் வளரும். இச்செடி எலும்பு முறிவை குணமாக்கும் என்பது ஆரம்ப காலத்தில் ஒரு சிலர் மட்டும் தெரிந்து வைத்து ரகசியமாகவே வைத்திருந்தார்கள்.

ஆறு அடி முதல் ஒன்பது அடி வரை உயரமாக வளரும். எப்பொழுதும் பச்சைப் பசேல் என்று இருக்கும். இலைகள் எதிர் அடுக்குகளாக காணப்படுவதுடன், அதில் 17 இணுக்குகள் இருக்கும். இலையானது 1.5 செ.மீ முதல் 2.5 செ.மீ வரை நீளம் இருக்கிறது. இலைகள் முதிர்ந்தால், கருப்பாகி விடும்.

அது போல தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகி விடும். பூக்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்சியம் அதிகம் காணப்படுகிறது. விதைகள் முட்டை வடிவத்தில், பிரவுன் நிறத்தில் இருக்கும். இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. எலும்பொட்டி மூலிகை மாதம் ஓரிரு முறை 5 கிராம் அளவு எடுத்து சூடான பால் கலந்து அருந்தி வர உடல் வலிமை பெறும். எலும்புகள் வலுவுடன் உறுதியாக அமையும்.

இதன் சமூலத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீர் விட்டு நன்கு சுண்டும் அளவுக்கு வேக வைத்து சாறை வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், இரண்டு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணி சுத்தி கட்டுப் போடுவார்கள். பின்னர் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு செய்து வர, ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணம் பெறும்.

கல் அத்தி என்று ஒரு மரம் உண்டு. அத்தி மரத்தின் பல வகைகளில் ஒன்று இது. பாறைகளுக்கிடையே வளருவது இது. பொதுவாக மலைக் காடுகளிடையே மட்டுமே காண இயலும். அரிய வகைகளில் இதுவும் ஒன்று. இதன் பாலை மெல்லிய துணியில் சேகரித்து, எலும்பு முறிவு உள்ள இடத்தில் வைத்து கட்டி விட வேண்டும். அடிபட்ட இடத்தில் வீக்கம் இருந்தாலும் சரியாகி விடும்.

ஆரோக்கியமான எலும்புகளுக்கு எதிரணியில் உள்ளவை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சிலவகை உணவுகள், பழக்க வழக்கங்கள் மனிதனின் ஆரோக்கியத்தில் குறிப்பாக எலும்பு வலிமையின்றிக் காணப்பட காரணமாகிறது. அவற்றில் ஒன்று, உடல் பருமன் ஆகும்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிப்படைந்து இருக்கும். சராசரிக்கும் கீழே உடல் எடை இருப்பதும் கூடாது. எலும்பு ஆரோக்கியமாக அமைய காபி, தேனீர், குளிர் பானங்களில் உள்ள காபின், பாஸ்பரஸ் வேதிப் பொருட்கள் எலும்புகளின் அடர்த்தியைக் குறைக்கக் கூடியதாகும்.

வலி நிவாரணியாக அடிக்கடி ஸ்ட்ராயிடு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. மேற்கூறிய மாத்திரைகளை பயன்படுத்தினால் எலும்புகளைச் சிறிது சிறியதாக அரித்து விடுகிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் கால்சியத்தை உடலில் கிரகிக்கப்படுவதை தடுக்கும்.

அது போல உப்பு உணவில் சேர்த்துக் கொள்வதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும். உப்பின் அளவு தினசரி 2300 மி.கி. மேல் தாண்டக் கூடாது. மீறினால், கால்சியத்தின் அளவு குறைந்து விடும். சத்துள்ள உணவுகளை தவறாமல் உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உடற்பயிற்சி. வயதுக்கேற்ப எளிமையான உடற்பயிற்சிகளை தினசரி அரை மணி நேரமாவது செய்து வர வேண்டும்.

பா. முருகன்


Spread the love