கண் சொட்டு மருந்தும் கவலை உண்டாக்கலாம்

Spread the love

வகுப்பறையில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த சியாமளாவிற்குத் திடீரென ஒருவித படபடப்பு ஏற்பட்டது. இதயம் லயம் மாறி விரைந்து அடித்துக் கொள்ளத் தொடங்கியது. நெஞ்சில் பயம் கப்பிக் கொண்டது. தலைமை ஆசிரியையிடம் தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.

மாலையில் குடும்ப மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொண்டபோது குறிப்பாக எந்தக் குறையுமே தென்படவில்லை. கண் சிவந்திருந்ததற்காக இரண்டு நாட்களாகக் கண்ணில் போட்டு வந்த சொட்டு மருந்தையும் அச்சத்தால் நிறுத்திவிட்டால். என்ன காரணம் என்று தெரியவில்லை. மறுநாளிலிருந்து படபடப்பு நின்று விட்டது.

கண் சொட்டு மருந்து காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டுச் சொட்டு மருந்தை டாக்டரிடம் காண்பித்த போது  உங்கள் படபடப்புக்கு இந்தச் சொட்டு மருந்து தான் காரணம் என்றார். சில சொட்டு மருந்துகளைக் கண்ணில் விடும் போது கண்ணிலுள்ள கண்ணீர் நாளங்கள் (tear ducts) வழியாக தொண்டை மற்றும் மூக்கிலுள்ள சிறு இரத்தக் குழாய்களால் உறிஞ்சப்பட்டு விடக்கூடும். இதனால் கண்ணில் மருந்து விட்டதும் தொண்டையில் கசப்பு உணர்வு தோன்றக் கூடும்என்று கூறினார்.

கண் மருந்துகளால் பெரிய தீங்கு எதுவும் நேராவிட்டாலும் சில வகைச் சொட்டு மருந்துகள் இரத்த அழுத்தத்தை உயர்த்தவும். இதயத்தின் லயத்தை மாற்றவும், வாந்தி, குமட்டல் போன்றவற்றை உண்டாக்கவும் கூடும். சில வேளைகளில் ஆஸ்த்துமா போன்ற உணர்குறிகளையும் ஏற்படுத்தக்கூடும். இவ்வகைச் சொட்டு மருந்துகளில் சேர்க்கப்படும் சில மருந்துகளால் இரத்தக் குழாய் குறுக்கம் (vasoconstriction) ஏற்படக்கூடும்.

  • எப்போதும் கண்ணுக்குச் சொட்டு மருந்து இடும் முன்னர் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்.
  • மருந்தைக் கண்ணில் இட்டதும் ஓரிரு நிமிடங்கள் இலேசாகக் கண்ணை மூடியபடி இருங்கள்.
  • கண்களின் ஓரங்களில் மருந்து வெளியேறாதபடி ஆள்காட்டி விரலை வைத்துச் சற்று மெதுவாக அழுந்தப் பிடித்துக் கொள்ளலாம்.
  • டாக்டர் புதிய சொட்டு மருந்துகள் எழுதிக் கொடுக்கின்ற போது வேறு ஏதாவது மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ கண்ணில் மருந்து போட்டுக் கொண்டிருந்தாலோ டாக்டரிடம் தெரிவித்து விடுங்கள்.

Spread the love