வெண்மையாக்கப்பட்டு, மென்மையாக்கப்பட்ட மைதாமாவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மைதா மாவை வெண்மையாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பென்சைல் பெராக்சைடு(Benzyl peroxide) மென்மையாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் Aloxanes என்னும் வேதிப்பொருள்கள் உடலில் இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களை அழித்து விடுகின்றன என்பது தான் காரணம். இந்த பீட்டா செல்கள் கணையத்தில் உள்ளன. இவை அழிக்கப்படுவதால் இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்பு பன் மடங்கு உண்டாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
மைதாமாவு வெள்ளையாக இருந்தால் தான் நல்ல மாவு என்று மக்கள் நினைப்பதும் இதற்கு ஒரு காரணமாகிறது. பொதுவாகக் கோதுமையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மைதா சிறிது தவிட்டு நிறமாகவே இருக்கும். ஆனால் பரோட்டா போன்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவகங்கள் வெள்ளை மைதாவையே வாங்குகின்றனர். இன்றைக்கு அதிக அளவில் விற்பனை ஆவதும் பரோட்டா தான்.
உணவுச்சத்து என்று பார்க்கும் போது மைதாமாவில் மாவுச்சத்தை விட வேறு புரதச்சத்தோ, கொழுப்புச்சத்தோ, நார்ச்சத்தோ எதுவுமில்லை என்று கூறுகின்றனர் மத்திய அரசின் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள். உனவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை மைதாவை பயன்படுத்தாமல் கோதுமை மாவு பரோட்டாக்கள் விற்பனை செய்வது நல்லது. வட இந்தியாவில் பெரும்பாலும் கோதுமை பரோட்டாக்களே அதிகம் விற்கப் படுகின்றன.