எக்சிமா நோய் மருந்து

Spread the love

மேக படை (Eczema):

தோல் வியாதிகள் பல வகை இருந்தாலும், நவீன முறை வைத்தியத்தில் அவை எல்லாவற்றையும் குணப்படுத்த முடிவதில்லை. எக்சிமா என்று கூறப்படும் மேகப்படையும் அத்தகைய தோல் நோய்களில் ஒன்று. டெர்மடைடீஸ் (Dermatitis)  என்றும் குறிப்பிடப்படும் எக்சிமா எல்லா வயதினரையும் தாக்கும். சிலருக்கு வயதாக எக்சிமா குறையும். சிலருக்கு அதிகமாகும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தோன்றி, மறைந்து தொல்லை தரும்.

எக்சிமா என்றால் என்ன?

மேல் தோலில் உண்டாகும் அழற்சி காரணமாக அதிகமான அரிப்பு, நமைச்சல், கொப்புளங்கள், தோல் சிவப்பாக மாறுவது, வீக்கம், சிரங்கும் சொறியும் ஏற்படுதல், செதில்கள் தோன்றுதல் மற்றும் சீழ் போல் புண்களில் இருந்து கசிவு ஏற்படுதல் இவையெல்லாம் உண்டாகும். சினைப்பு (Rashes) உண்டாகும். பல சரும நோய்களின் கூட்டுப் பிரிவு தான் எக்சிமா நோய். ஒரு சிலருக்கு உடலின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பாதிக்கும். சிலருக்கு எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். இதனை ஏதோ ஒரு ஒவ்வாத பொருள் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு எதிரான எச்சரிக்கை என்று சொல்லலாம். எக்சிமாவில் பல வகைகள் இருந்தாலும் முக்கியமானது (ஐ) அடோபிக் எக்சிமா (Atopic Eczema) ஆகும். எக்சிமாவில் இதுதான் பரவலாக காணப்படுகிறது. Atopy என்றால் ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள் உடலில் ஊடுருவது ஒரு இடத்திலும், அதன் விளைவுகள் உடலின் வேறு இடத்திலும் தோன்றுவது ஆகும். உதாரணமாக ஒரு சில பொருட்களை உட்கொண்டால் தோலில் எக்சிமா உண்டாகும். அதிக உணர்ச்சி உள்ளவர்களுக்கு இந்த வகை எக்சிமா தொட்டாற் சுருங்கி போல அதிகமாக வரும். ஆஸ்துமா, அதிக சுரம் உள்ளவர்களையும் அதிகம் தாக்கும்.

அறிகுறிகள்:

1. அரிப்பு. அதிலும் தாங்க முடியாத அரிப்பு

2. தோலில் கட்டிகள், சிரங்குகள் தோன்றுதல்

3. சினைப்பு (Rashes) ஏற்படும். சொறிவதை தடுக்க முடியாததால் சினைப்பு புண்கள் சொறிவதால் புண் ஆகும்.

4. சிரங்குகளில் நீர் கோர்த்துக் கொண்டு கசியலாம். இதனை அழும் எக்சிமா (Wet Eczema) என்பார்கள்.

5. தோல் சிவந்து தடிமனாகும்.

6. சினைப்புகள் கைகள், முழங்கைகள், முழங்கால்களுக்குப் பின் பகுதிகள் போன்ற இடங்களில் பொதுவாகத் தோன்றும். சினைப்புகளின் (Rashes) நிறம், தோன்றுமிடம், தீவிரம் இவை மாறினாலும் அரிப்பு ஒன்று மட்டும் மாறாது. அரித்து அரித்து தோல் ‘உடைந்து’ பாக்டீரியா உள்ளே புகுந்து விடும்.

காரணங்கள்:

ஒவ்வாமை மற்றும் ஸ்ட்ரெஸ் மற்றும் பரம்பரை காரணமாகலாம். மிமி. ஸ்பரிச ஒவ்வாமை எக்சிமா (Contact Eczema/Dermatitis) ஒவ்வாமையை ( அலர்ஜி ) உண்டாக்கும் பொருளுடன் நேர் தொடர்பு கொள்வதால் தோலில் ஏற்படும் அழற்சியினை தான் டெர்மடைடீஸ் என்கிறார்கள். இதனால் ஏற்படும் சொறி, சிரங்கு மற்றும் சினைப்பு பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தோன்றும். நன்றாக தனித்திட்டாக, வட்டமாகத் தோன்றும் சினைப்பில் அரிப்பு மிக அதிகமாக இருக்கும்.

காரணங்கள்:

ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்கள் எரிச்சலையும், அலர்ஜியினையும் உருவாக்குகின்றன. அலர்ஜி வருவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. வாசனை பொருட்கள் என பவுடர், கிரிம்கள், நக பாலீஷ், நக பாலீஷ் எடுப்பவை, சென்ட்டுகள் முதலியன. பென்சிலின் ஆன்டிபயாடிக் மருந்துகள், அணிகலன்கள், உலோகங்களில் பெரும்பாலும் நிக்கல் ஒவ்வாமையை உண்டாக்கும்.அணிகலன்கள் உலோகங்கள் – நிக்கல் பெரும்பாலும் அலர்ஜியை உண்டாக்கும். தங்கம் கூட சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம்.

வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பினாயில், அமிலம், காரங்கள் மற்றும் சோப், துணி வெளுக்கும் டிடர்ஜெண்டுகள் தாவரங்களில் பார்த்தீனியம், நெரிஞ்சில் போன்றவை ஒவ்வாமையை உண்டாக்கும்.

மிமிமி. சீபம் எக்சிமா (Seborraheric Eczema):

இந்த வகை எக்சிமா காரணம் தெரியாத ஒன்றாக உள்ளது. தலை, முகம் சில சமயங்களில் வேறு பாகங்களில் செதில்களை தோற்றுவிக்கும். மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும். பெரியவர்களை 30 முதல் 70 வயதிற்குள் தாக்கும்.

இது முதலில் தலையில் ‘பொடுகு’ போல் தொடங்கும். முடி இழப்பு இல்லாவிட்டாலும், அரிப்பு சில சமயங்களில் இருக்கும். தீவிரமான நிலையில் பருக்கள் போன்ற சிறிய கட்டிகள், தலை, காதுகளுக்குப் பின்னால், கண் புருவங்களில், மார்பில், முதுகின் மேல் பகுதியில் தோன்றலாம். ஒரு மாத சிறு குழந்தைகளுக்கும் ஏற்படும். இந்த எக்சிமா பொதுவாக அரிப்பு, நமைச்சலை உண்டாக்குவதில்லை. குழந்தைகளுக்கு முகத்தில் சிவப்பு நிறப் பருக்கள் தோன்றும். ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, மூன்று தோஷங்களின் ( வாத, பித்த, கபம் ) பாதிப்பினால் எக்சிமா உண்டாகும் எனினும் கப தோஷக் கோளாறுகளாலும் சிறிதளவு வாத, பித்த, தோஷ மாறுபாடுகளாலும் உண்டாகிறது.

இதற்கு உணவு முறை தவறுகள் ( பழைய கெட்டுப் போன உணவுகளை உட்கொள்ளுதல், ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத உணவுகளை உண்பது, அதிக இனிப்புகள், காரம் மற்றும் அதிக மசாலா சேர்த்த உணவுகள், அதிக அளவு மாமிசம் உண்பது ) காரணமாகவும், உடலுறவில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவது மற்றும் அதீத உடற்பயிற்சி மேற்கொள்வது காரணமாகவும் எக்சிமா உண்டாகிறது என்று ஆயுர்வேதம கூறுகிறது.

 

எக்சிமாவிற்கு எளிய வைத்தியம்:

1. வேப்பமரப் பட்டையை போட்டு காய்ச்சிய நீரால், தினமும் பாதிக்கப்பட்ட இடங்களைக் கழுவவும். வேப்பமரப்பட்டையில் இருந்து செய்யப்பட்ட களிம்பை தடவி, உலர்ந்த பின் கழுவி விடவும். வேப்ப எண்ணெய் 24 துளிகள் பாலில் இட்டு கலந்து, சர்க்கரை சேர்த்து தொடர்ச்சியாக 40 நாட்களுக்கு தினமும் ஒரு வேளை என அருந்தி வர வேண்டும்.

2. முடிந்த அளவு தினமும் சாதாரண குளியலுக்குப் பதில் எண்ணெய்க் குளியல் செய்து வரவும்.

3. உடல் கழிவுகளைப் போக்க மாதம் ஒருமுறை இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெயினை சூடான பாலுடன் கலந்து பருகவும்.

ஆயுர்வேத சிகிச்சை

இரத்தம் நச்சுப்பொருட்களால் மாசு படிந்து போவதால் சர்ம வியாதிகள் தோன்றுகின்றன என்பது ஆயுர்வேத கருத்து. எனவே ‘விரேசனா’ முறையால் முதலில் உடலின் கழிவுப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. இதற்காக சென்னா, சணல் விதைகள், இசப்கோல், த்ரிபாலா போன்றவை பசும்பால், விளக்கெண்ணை, திராட்சை, மாழ்பழச்சாறு இவற்றுடன் கொடுக்கப்படுகின்றன. பிறகு சர்ம வியாதிக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

நாட்டு வாதுமை இலைகளின் சாற்றை எக்சிமா பாதித்த இடங்களில் தடவலாம்.

புங்கமர விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட தைலத்தையும், எலுமிச்சை பழச்சாற்றையும் கலந்து தடவலாம்.

கதீரா – பல சர்ம நோய்களுக்கு ஏற்ற மூலிகை – பரவலாக ஆயுர்வேத வைத்தியர்களால் பயன்படுத்தப்படும் மூலிகை. எக்சிமாவை போக்க வல்ல அருமருந்து.

மஞ்சள் – தொன்று தொட்டு தெரிந்த கிருமி நாசினி. தோலை தொற்று நோய்கள் அணுகா வண்ணம் காக்கும்.

சேராங்கொட்டை – உடலின் இரத்த ஒட்டத்தை மேம்படுத்தி ரத்தத்தை சுத்தீக்கரிக்கிறது.

ரை – இதன் மற்றொரு பெயர் “படர்தாமரை செடி” சர்ம வியாதிகளுக்கு சிறந்த மருந்து – எக்சிமாவை குணமாக்கும் திறன் உடையது.

ஆயுர்வேத மருந்துகள்

பஞ்சதிக்க க்ரித குக்குலு – இந்த மருந்து பாலுடன் 2 தேக்கரண்டி அளவில் கலந்து வெறும் வயிற்றில் கொடுக்கப்படும் சிறந்த மருந்து.

கந்தக் ரசாயனம் – பிரத்யேக ஆயுர்வேத தயாரிப்பு. மூன்று வகைகளில் செயல்படுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சர்ம நோய்களை குணப்படுத்துகிறது. அவை திரும்பி வராமல் காக்கிறது.

காமஞ்சிஷ்டாதி க்வாதம், கதிராரிஷ்டா, போன்ற மருந்துகளும் நல்ல நிவாரணமளிக்கின்றன.

வெளிப்பூச்சாக குடூச்யாதி தைலம், மகா மறிச்சயாதி தைலம் முதலியன பயன்படுகின்றன.

இதர அறிவுரைகள்:

1. எக்சிமா போன்ற சரும நோயுள்ளவர்கள் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது. கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தலாம். தரமான ஆயுர்வேத சோப்புகளை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு ஊற விட்டு, மிதமான சூடுள்ள அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கவும். குளித்தவுடன் துவாலையால் அழுத்தித் துடைக்காமல், மெதுவாக நீரை, ஒற்றி எடுக்கவும்.

2. கம்பளி ஆடைகள், போர்வைகள் இவற்றை முடிந்த வரை தவிர்க்கவும்.

3. டிடர்ஜென்ட் சோப்புகளை துணிகளுக்குப் பயன்படுத்தும் போது, கையுறைகளை அணிந்து கொள்வது கை சருமத்திற்கு பாதுகாப்புத் தரும்.

4. ஒவ்வாமை ஏற்படும் பொருட்களை அறிந்து ஒதுக்கி விடவும்.

5. மசாலா, காரம், மாமிசம், முட்டை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். வெந்த காய்கள், பழங்கள், பரங்கிக்காய் சேர்த்துக் கொள்ளவும். தர்பூசணிப் பழம் நல்லது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். சில ஆயுர்வேத மருத்துவர்கள் புளித்த தயிரை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.


Spread the love