“நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்பது முதுமொழி. அதை முதுமொழியளவிலேயே தான் வைத்திருக்கிறோமே தவிர நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பதில்லை. உணவை மென்று அதன் பின்னரே விழுங்க வேண்டும் என்று சின்ன வயதில் நம் காதுகளில் உருவேற்றப்பட்டிருந்தாலும் இன்று அதை நினைவுக்குக் கொண்டு வருபவர்கள் எத்தனை பேர்.
நம் உடலிலுள்ள உறுப்புக்களில் உணவின் சுவையை அறியக் கூடிய ஒரே ஒரு உறுப்பு நாக்கு மட்டும் தான். நாக்கை விட்டுப் பிரிந்து தொண்டைக் குழியில் இறங்கி உணவு என்னவாகிறது என்பது நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. எனவே, உணவு எவ்வளவுக்கெவ்வளவு அதிக நேரம் நமது நாக்குடன் உறவு கொண்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உணவின் ருசியை நாம் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
உணவின் சுவையை அறிவதற்கு மட்டுமன்றி நன்கு மென்று சுவைத்து உண்ணப்படுகின்ற உணவு எளிதில் செரிமானம் அடைகிறது. இதற்கென்றே குறிப்பிட்ட வகையில் நம்முடைய பற்கள் அமைந்துள்ளன. இருப்பினும் நம்மில் எத்தனை பேர் இயற்கை தந்திருக்கும் இந்த அருட்கொடையை எண்ணி வியந்திருக்கிறோம்?
பல மனிதர்கள் ஆடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் அவசரம் அவசரமாகவும் உண்கின்றனர். இதனால் உணவை மென்று சுவைத்து உண்ண அவகாசம் இன்றிப் போகிறது. மென்று உண்ணவும் உண்ட பின் சிறிது ஓய்வு கொள்ளவும். நேரமில்லாத போது உண்பதைத் தள்ளிப் போட வேண்டும். அது மட்டுமன்றி அவசரமாக உண்கின்ற வேளையில் நிகழ்கின்ற மனநிலை மாறுபாடுகளால் வாயிலும், வயிற்றிலும் சுரக்க வேண்டிய பல செரிமான நீர்கள் சுரக்காமலே போய் விடுவதுண்டு. அதுவுமில்லாமல் வாயில் தொடங்கி மலக்குடல் சீராக நடைபெறுகின்ற செரிமான நிகழ்ச்சிகளில் உணவை வாயிலிட்டு மென்று சுவைப்பது ஒன்று தான்.
நம் கட்டுப்பாட்டில் உள்ள செயல் , தொண்டைக்குக் கீழ் நிகழ்கின்ற பிற செயல்கள் எதிலும் நமக்குக் கட்டுப்பாடில்லை அவை தமக்குத் தாமே நிகழ்பவை. எனவே நமக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பை நன்கு பயன்படுத்தி உணவுப் பொருட்களை நன்கு மென்று, சுவைத்து உண்ண வேண்டாமா?
உணவு செரிமானமாவது வாயிலேயே தொடங்கிவிடுகிறது. நம் வாயிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. உணவு உமிழ் நீருடன் கலக்கும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கிறது. அத்துடன் மாவுப்பொருட்கள் உமிழ் நீருடன் கலந்து வாயிலேயே உடைபடத் தொடங்குகின்றன. இந்த உமிழ் நீரில் உள்ள டயலின் றிtஹ்றீவீஸீமீ என்னும் நொதி மாவுப் பொருளைச் சர்க்கரையாக மாற்றத் தொடங்கிவிடுகிறது. இது சிறுகுடலுக்குச் செல்கின்ற போது எளிதாகச் செரிக்கப்படுகிறது.
நன்கு சுவைக்காமல், மெல்லாமல் உணவு விழுங்கப்படுகின்ற போது பசியின்மை, செரிமானக் குறைவு, வயிற்றோட்டம், மலச்சிக்கல் என்று பலவகைத் தொல்லைகள் தோன்றத் தொடங்குகின்றன. உணவு பற்களால் நன்கு அரைக்கப்பட்டு, மெல்லப்படுகின்ற போது அவை மிக நுண்ணிய துகள்களாக மாறுகின்றன. அப்போது உமிழ் நீர் மிக எளிதாக அவற்றுடன் இணைய முடிகிறது. உணவுப் பொருள்கள் வாயில் நன்கு அரைபடாமல் விழுங்கப்படுமாயின் உள்ளே உள்ள உறுப்புக்கள் தமது சக்திக்கு மீறி உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குக் ஆட்படுகின்றன. இது குறித்தே “பற்கள் உங்கள் வாயில் தான் இருக்கிறதே தவிர வயிற்றுக்குள் இல்லை” என்று கூறுவார் ஒரு உணவியல் அறிஞர்.
நன்கு சுவைத்து மென்று உண்ணச் சிறிது அதிகமான நேரம் தேவைப்படுவதால் மிகுந்த உணவு உண்பது தவிர்க்கப்படுகிறது. பசி எளிதில் அடங்குகிறது. அது மட்டுமன்றி சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் உண்ண இயலுகிறது. பொரித்த, வறுத்த, பதனிடப்பட்ட பலஉணவுகள் உடல் நலத்துக்கு ஏற்றவையல்ல என்று தெரிந்திருந்தும் உண்கிறோம். இவற்றை மென்று உண்ணத் தேவையில்லாத காரணத்தால் விழுங்கிறோம். அதுவும் அதிக அளவில் எண்ணெயும், காரமும், மசாலாவும் சேர்ந்த இவ்வகை உணவு வயிற்றினுள் சென்று அங்குள்ள சீத சவ்வைச் சேதமுறச் செய்கின்றன. இதன் விளைவாக அஜுர்ணம், ஏப்பம், உப்புசம், மலச்சிக்கல் போன்ற பல நோய்கள் உண்டாகின்றன.
எனவே முயன்ற வரை இயற்கை உணவுகளை உண்பதுடன் எஞ்சிய பிற உணவு வகைகளை நன்கு மென்று சுவைத்து உண்பது உடலுக்கு நன்மை பயக்கும்.