அளவோடு சாப்பிடு; நலமோடு வாழ்ந்திடு

Spread the love

டாக்டர், நோயாளிக்கு அட்வைஸ் செய்வார்.. ‘‘சாப்பாட்டை குறைச்சுக்குங்க.. அரிசி சாதம் சாப்பிடாதீங்க.. அதுக்கு பதிலா இட்லி போன்ற டிபன் அயிட்டங்களை சாப்பிடுங்க..’’

நோயாளியும் ‘சரி’ என்று தலையாட்டி விட்டு வருவார். சில நாட்கள் கழித்து, டாக்டரை மறுபடியும் போய் பார்ப்பார்.

‘‘டாக்டர்.. நீங்க சொன்ன மாதிரி அரிசி சாதம் சாப்பிடறதை விட்டுட்டு, இட்லி, தோசை மாதிரி டிபன் அயிட்டங்களைத்தான் சாப்பிட்டேன்.. ஆனா, உடம்புல எந்த முன்னேற்றமும் இல்லையே’’ என்பார்.

உடனே டாக்டர் கேட்பார்.. ‘‘ஒரு நாளைக்கு எத்தனை இட்லி, எத்தனை தோசை சாப்பிடுவீங்க..?

நோயாளி பதில் சொன்னார். ‘‘காலையில 20 இட்லி, மதியானம் 20 இட்லி. நைட்ல பத்தே பத்து தோசைதான்’’ என்று.

டாக்டர் மயங்கி விழாத குறைதான் போங்கள். இதுதான் சாப்பாட்டை குறைக்கிற லட்சணமா? சபரிமலைக்கு விரதமிருந்து போகின்ற அய்யப்பமார்கள் இரவில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்பதற்காக ‘லைட்டாக’ டிபன் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தப்படுவார்கள். அவர்களில் பலர் லைட்டாக சாப்பிடுவதற்கு பதிலாக, ‘வெயிட்’ ஆகவே ஒரு கட்டு கட்டி விடுகிறார்கள்.

இனிமேல் குறைவாக சாப்பிடுங்கள் என்று ஆலோசனை கூறுவதை விட்டுவிட்டு, இரண்டு இட்லி சாப்பிடுங்கள்; ஒரு தோசை சாப்பிடுங்கள் என்று ஆலோசனை கூறினால்தான் சரியாக இருக்கும் போல தெரிகிறது.

ஓட்டலில் அளவு சாப்பாடு என்று போடுவார்கள். முதல் தர ஓட்டல்களில் அதற்கே 85 ரூபாய் வசூலித்து விடுகிறார்கள். அந்த சாப்பாட்டில் அரிசி சாதம் 200 கிராம் அளவுதான் இருக்கும். அந்த சாப்பாட்டை எடை மிஷின் வைத்து அளந்து போட மாட்டார்கள். தோராயமாக ஒரு கணக்குத்தான். ஒரு சிறிய தட்டில் குறிப்பிட்ட அளவு சாதத்தை நிரப்பி கொடுப்பார்கள். ஒரு கிராம், இரண்டு கிராம் கூடுதலாக இருக்கிறது என்பதற்காக சில பருக்கைகளை எடுத்து விட்டு தர மாட்டார்கள். குறைவாக இருந்தாலும் சில பருக்கைகளை போட்டு தரமாட்டார்கள். இதை எதற்காக சொல்கிறோம் என்றால், இந்த அளவுகள் எல்லாம் நம் பழக்கத்தில் வருபவைதான். இத்தனை கிராம்தான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கூறி விட்டார் என்பதற்காக, டெய்லர் இஞ்ச் டேப்புடன் இருப்பதை போல நாம், எடை மிஷினுடனா அலைந்து கொண்டிருக்க முடியும். இதற்கு அர்த்தம் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதுதான்.

யாரெல்லாம் அளவோடு சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.. எல்லோருமே அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடுவது கட்டாயமானது.  உடல் எடை குறையாமல் இருப்போர், இன்சுலினைக் குறைக்க விரும்புவோர்,இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர், சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர், சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர் இவர்கள் எல்லாம் அளவோடு எடை போட்டுத்தான் சாப்பிட வேண்டும்.

காலை டிபன்- & 150 கிராம் & இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை என்று வைத்துக் கொள்ளலாம். சப்பாத்தியாக இருந்தால் 3. மதியம்- 250 கிராம் சாதம் & ஓட்டலில் அளவு சாப்பாடு சாப்பிடுபவர்கள், சாதம் வைக்கும் தட்டின் அளவை வைத்தே இதை முடிவு செய்து கொள்ளலாம்.  இரவு- &150 கிராம் டிபன். மூன்று வேளையும் 200 கிராம் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மாலை வேளைகளில் டிபன் அல்லது நொறுக்குத் தீனி சாப்பிட எண்ணுபவர்கள் 100 கிராம் பழங்கள் (மாம்பழம், பலாப்பழம் போன்ற அதிக இனிப்புள்ள பழங்களை விலக்க வேண்டும்) சாப்பிடலாம். 100 கிராம் சுண்டல் சாப்பிடலாம்.

அளவோடு சாப்பிட்டால் வளமோடு வாழ முடியும் என்பதோடு, சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

                                உங்கள் நலன் கருதி

                          ஆயுர்வேதம் Dr. S. செந்தில் குமார்


Spread the love
error: Content is protected !!