பலருக்கு, மூன்று வேளை உணவுகள் உண்டாலும் நடு நடுவே எதையாவது கொரித்துக் கொண்டு இருப்பது பழக்கம். இந்த ‘அல்பப் பசி‘ வாயுவால் உண்டாகும் மனக்கோளாறு என்கிறது ஆயுர்வேதம். நாமே இதை கண்கூடாக பார்க்கிறோம் – மன அழுத்தம் (Stress) ஏற்பட்டால் எதையாவது கொரிக்கத் தொடங்குகிறோம். Snacks என்று சிற்றுண்டிகளை உண்ணும் பழக்கம் கை விட முடியாத பழக்கமாக மாறிவிடுகிறது.
காலை, நடுப்பகல், இரவு – இந்த மூன்று வேளைகளில் உணவு உண்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்ற உணவு முறை தான். பகலில் இரு உணவுகளுக்கு நடுவே இடைவெளி இருப்பதும் அவசியம். பகல் வேளைகளில், முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே நல்ல பசி ஏற்பட்டால் மறுபடியும் உணவு உட்கொள்வதில் பெரிய தவறில்லை. ஆனால் இரவில் உண்ட உணவு செரிக்காத போது காலையில் உணவு உட்கொள்வது சரியல்ல.
பகலில் நாம் பல பணிகளில் ஈடுபடுகிறோம். சூர்ய வெப்பத்தில் உடலின் ‘அக்னி‘ நல்ல நிலைமைகளில் இருக்கிறது. ஜீரண அவயங்கள், கழிவுப்பொருட்களை வெளியேற்றும் அவயங்கள், நன்கு பணியாற்றுகின்றன. உடல் வியர்வை பகலில் அதிகமாக ஏற்பட்டு, வெளியேறுகிறது. இந்த காரணங்களால், காலையில் உண்ட உணவு ஜீரணமாகும் முன்பே மாலை உணவை உண்பதில் பெரிய கெடுதி ஏற்படுவதில்லை. ஆனால் இரவில் நிலைமை வேறு. சூரிய ஒளி இல்லாததால் உடல் ‘அக்னி‘ குறைகிறது. உடலின் இயக்கங்கள் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைந்து விடுகின்றன. முழு உடல் இயக்கம் இல்லாததால் மலங்கள் வெளியேறும் இயக்கங்கள் மந்தமடைகின்றன.
எனவே காலையில் எழுந்தவுடன், நல்ல பசி இருந்து, முன்னிரவில் உண்ட உணவு ஜீரணமாகி விட்டது என்ற உணர்வும் இருந்தால் உணவு உண்பதில் தவறில்லை. பசியின்மை, வயிற்றில் கனமான உணர்வு, மலம் வெளியேறாமை – இவை இருந்தால், உடற்பயிற்சி (அ) உடலுழைப்பு மற்றும் சூர்ய ஒளியால் உடலின் செரிமானத்தை வேகப்படுத்தி, பின்னர் உண்பதே நல்லது. இதை சொல்பவர் ஆயுர்வேத ஆசான்களின் ஒருவரான வாகபட்டர்.
உங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் Dr. S. செந்தில்குமார்
உணவு நலம் செப்டம்பர் 2011