உண்பதில் ஒழுக்கம்

Spread the love

மூன்று வேளை உணவு உண்டாலும், பலர் நடு நடுவே எதையாவது கொரிப்பதையோ அல்லது குடிப்பதையோ பழக்கமாக கொண்டிருப்பர். இது வாயு ஏற்படுத்தும் மனக்கோளாறு என்கின்றன பழங்கால வேத நூல்கள். நாம் இதனை கண்கூடாக அன்றாடம் பார்க்கலாம்-, மன அழுத்தம் ஏற்பட்டால் எதையாவது கொரிக்க ஆரம்பித்து விடுவர் பலர். சிற்றுண்டிகளை உண்ணும் பழக்கம் கை விட முடியாத பழக்கமாக மாறிவருகின்றது.

காலை, நண்பகல், இரவு – ஆகிய மூன்று வேளைகளில் உணவு உண்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்ற உணவு முறையாக கொள்ளலாம். இரு உணவுகளுக்கு நடுவே இடைவெளி இருப்பது அவசியம். பகல் வேளைகளில், முன்பு உண்ட உணவு செரிக்கும் முன்பே நல்ல பசி ஏற்பட்டால் மறுபடியும் உணவு உட்கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் உண்ட உணவு செரிக்காத போது உணவு உட்கொள்வது சரியல்ல.

பகலில் நாம் பல பணிகளில் ஈடுபடுகிறோம். சூர்ய வெப்பத்தில் உடலின் ‘அக்னி’ நல்ல நிலைமைகளில் இருக்கிறது, ஜீரண உறுப்புகளும் கழிவுப்பொருட்களை சீராக வெளியேற்றுகின்றன, உடலில் வியர்வை வெளியேறுகிறது, எனவே இந்த காரணங்களால், காலையில் உண்ட உணவு ஜீரணமாகும் முன்பே மதிய உணவை உண்பதில் பெரிய கெடுதி ஏற்படுவதில்லை. ஆனால் இரவில் நிலைமை வேறு. சூரிய ஒளி இல்லாததால் உடல் ‘அக்னி’ குறைகிறது. உடலின் இயக்கங்கள் நிறுத்தப்படுகின்றன அல்லது குறைந்து விடுகின்றன. முழு உடல் இயக்கம் இல்லாததால் கழிவுகள் வெளியேறும் இயக்கங்கள் மந்தமடைகின்றன.

எனவே காலையில் எழுந்தவுடன், நல்ல பசி இருந்து, முன்னிரவில் உண்ட உணவு ஜீரணமாகி விட்டது என்ற உணர்வும் இருந்தால் உணவு உண்பதில் தவறில்லை. பசியின்மை, வயிற்றில் கனமான உணர்வு, மலம் வெளியேறாமை – போன்றவை இருந்தால், உடற்பயிற்சி (அ) உடலுழைப்பு மற்றும் சூர்ய ஒளியால் உடலின் செரிமானத்தை மேம்படுத்தி, பின்னர் உண்பதே நல்லது.

இதனைத் தான் திருவள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அறிந்து போற்றி உணின்.
என்று திருக்குறளில் கூறியுள்ளார்.


Spread the love