பொதுவாக இரவில் மிதமாகத்தான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் பெரும்பாலானோர் இரவில் டிபன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் உள்ளது. இரவு தூங்கும் நேரத்தில்தான் உடலில் உள்ள பாதிப்புகளை நமது உறுப்புகள் சரிபடுத்திக் கொள்ளும். அந்த சமயங்களில் கல்லீரல், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்கள் குறைந்து இருக்கும். நாம் லைட்டாக சாப்பிடாமல் கொழுப்புமிக்க உணவுகளை வெயிட்டாக சாப்பிட்டால், அவை ஜீரணமாக அதிக நேரம் ஆகும். இதனால் ஜீரண உறுப்புகள் சிரமப்படும். மேலும், பாதிப்புகளை சரிபடுத்த முடியாமல் உடல் திணறும். ஆகவே இரவில் லைட்டாக உண்பதுதான் ஆரோக்கியத்துக்கு உகந்தது.
எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகளை சாப்பிட்டால் அவை ஜீரணமாக அதிக நேரம் தேவைப்படும். இரவு தூங்கும்போது, உடலில் என்சைம்களின் சுரப்பு குறைவாக இருக்கும் என்பதால் ஜீரணம் சரியாக நடைபெறாது. இது உடலையும், தூக்கத்தினையும் பாதிக்கும். நடு இரவில் திடீரென காரணமில்லாமல் விழிப்பு வருவதற்கு, நீங்கள் சாப்பிட்ட உணவும் காரணமாக இருக்கலாம்.
இரவில் டீ, காபி சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. சிலர் தூக்கம் வரக்கூடாது என்பதற்காகவே டீ, காபி சாப்பிடுவார்கள். காபியில் கேஃபின் மற்றும் கோகோ ஆகியவை இருக்கிறது. இரண்டுமே நரம்புகளை தூண்டி, மூளையை விழித்திருக்கச் செய்பவை. இரவு நேரங்களில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் தூக்கம் கெட்டு விடும். இதனால் மறுநாள் உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. ஆகவே இரவில் காபி வேண்டாம்.
காரசாரமான மசாலா உணவுகள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் ஓட்டலுக்கு செல்வது, அல்லது நடைபாதை கடைகளில் சாப்பிடுவது பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. அங்கு காரசாரமான மசாலா உணவுகளை ஒரு கட்டு கட்டி விடுகிறார்கள். இந்த உணவுகள் அதிகமான அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், அஜீரணம் என வயிற்றை கெடுத்து தூக்கத்தை பாதிக்கும். எனவே இரவில் ருசிக்கு அடிமையாகி விடாதீர்கள்.
இரவில் இனிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவு வகைகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு எப்போதும் உடலுக்கு நல்லதல்ல. அதிலும் இரவு சாப்பிடுவது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க காரணமாகி விடும். ஆகவே, இரவில் நோ ஸ்வீட் ப்ளீஸ். அதே போலவே ஐஸ்க்ரீம். சிறியவர் முதல் பெரியவர் வரை இதற்கு மயங்காதவர்களே கிடையாது. ஐஸ்க்ரீம் ‘ஜில், ஜில்’ என்று உள்ளே இறங்கும். ஆனால், ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இனிப்பு, ஐஸ்க்ரீமை இரவில் அறவே தவிர்ப்பது நல்லது.