சீசன் உணவு மாற்றம்

Spread the love

பருவத்திற்கேற்ற உணவு

வஸந்த ருது – (சித்திரை, வைகாசி – மார்ச் நடுவிலிருந்து மே நடுமாதம் வரை) பனிக்காலத்தில் குவிந்துள்ள கபம், வஸந்த ருதுவில் கதிரவனின் கிரணங்களால் உருகி, பெருகிச் சீற்றமடைந்து சடராக்னியைக் குறைத்துவிடுகிறது. அதனால் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. ஆகையால் அந்தக் குவிந்த கபத்தைப் போக்க வஸந்த ருதுவில் வாந்திக்குக் கொடுப்பது போன்ற பஞ்சகர்ம சிகிச்சைகளைச் செய்விக்க வேண்டும்.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பார்லி, தேன் சுடப்பட்ட மாமிசம், மாம்பழ ரசம் – இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

புளிப்பு, இனிப்பு சுவையுள்ள எண்ணைப்பசை அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கவும்.

கிரீஷ்ம ருது – (ஆனி, ஆடி – மே நடுவிலிருந்து ஜுலை நடுமாதம் வரை) இந்த கடுமையான கோடை சீசன் தமிழ்நாட்டைப் பொருத்த வரை வெய்யிலின் தாக்கம் ஆனியுடனேயே குறைந்து விடுகிறது. காற்று அதிகம் வீசும். “ஆடிக் காற்றில் அம்மி பறக்கும்” என்பார்கள்.

இந்த சீசனில் இனிப்பு சுவையுள்ள குளிர்ச்சியான உணவுகளை மிதமாக உண்ண வேண்டும்.

கோடை தாக்கத்தைத் தீர்க்க வீடுகளில் “பானகம்” செய்வார்கள். இதன் செய்முறை – நல்ல சுத்தமான வெல்லத்தை (30 கிராம்) ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும். இத்துடன் சிறிது சுக்குப்பொடி, ஏலக்காய், லவங்கப்பட்டை பொடிகளை போட்டு கலக்கவும். மண் பானையில் குளிர வைத்து பருகினால் தாகம் தணியும்.

பானகம் தவிர “மந்தா” என்ற பானத்தை வீட்டிலேயே செய்யலாம். உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம் இவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இவற்றை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் அரைத்து ஜுஸாக்கி பருகவும்.

புழுங்கலரிசி சாதத்துடன் மாமிசம். சோளமாவு, தயிர், மோர் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் – இவற்றை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊற வைத்து உண்ணலாம்.

பஞ்சசாரம் – திராட்சைப்பழம், வாழைப்பழம், ஈச்சம்பழம், பேரீச்சை, வில்வப்பழம் – இந்த 5 பழங்களை துண்டங்களாக்கி, சர்க்கரை பாகில் ஒரு நாள் ஊற வைத்து மறுநாள் சாப்பிடலாம்.

இந்த சீசன் காலரா போன்ற நோய்கள் அதிகம் தோன்றும் காலம். சுத்தமான சூழ்நிலையில், சுத்தமாக தயாரித்த சூடான உணவை உட்கொள்வது அவசியம். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

வர்ஷ ருது – (ஆவணி, புரட்டாசி – ஜுலை நடுமாதம் – செப்டம்பர் நடுமாதம்)

உத்தராயணத்தில் (தை முதல் ஆனி வரை) மனிதர்களின் உடலி வலிவு இயற்கையாகவே குறைந்திருக்கும். வலிவு குறைந்த உடலில் சடராக்னியின் வலிவும் குறைந்திருக்கும். வர்ஷ ருது (ஆவணி, புரட்டாசி) தொடங்கியவுடன் கெட்டுப்போன வாதம் முதலான தோஷங்களால் கேடடடைந்த சடராக்னி மேலும் சக்தியை இழந்து விடுகிறது. இந்தப் பருவத்தில் நிலத்திலிருந்து ஆவி வெளிவருதல், ஆகாயத்திலிருந்து மழை பெய்தல், நீர் விபாகத்தில் (உணவு மாறுபாடு அடையும் சமயம்) புளிப்புச் சுவையாக மாறுபாடு அடைதல் ஆகிய இவற்றாலும் சடராக்னிக்கு மிக்க வலிவுக் குறைவு ஏற்படுகிறது. இதனால் வாதம் போன்ற தோஷங்கள் சீற்றலை அடைகின்றன. ஆகையால் வர்ஷ ருதுவில் (மழைக்காலத்தில்) பொதுவான எல்லாக் கட்டுப்பாடு முறைகளையும் கடைப்பிடிப்பது சிறந்ததாகும்.

இது மழைக்காலம். காய்ச்சிய நீர், நெய்யுப்பும் சூடும் மிக்க, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ளவும். சரகசம்ஹிதை மழைக்காலத்தில் பருகும் பொருட்கள், உண்ணும் பொருட்கள் இவற்றில் பெரும்பாலும் தேன் சேர்க்க வேண்டும் என்கிறது.

புதிதாக அறுவடையான தானியங்களை தவிர்க்கவும். பழைய தானியங்கள், மாமிச சூப்புகள், பயத்தம் பருப்பு கஞ்சி இவைகள் ஏற்றவை.

கீரைகளை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளவும்.

இஞ்சி, கருமிளகு, எலுமிச்சம் பழச்சாறு – இவை பசியை தூண்டுபவை. ஆற்று நீரை பருகுவதை தவிர்க்கவும்.

சரத் ருது – (ஐப்பசி, கார்த்திகை – செப்டம்பர் நடுவிலிருந்து நவம்பர் நடுமாதம் வரை) மழைக்காலத்தில் குளுமை ஒத்துக் கொண்டவர்களுக்கு திடீர் என்று கதிரவனின் கிரணங்களின் சூடு ஏற்படுவதனால் குவிந்திருக்கிற பித்தம் பெரும்பாலும் சரத் ருதுவில் சீற்றலை அடைகிறது. இனிப்புச்சுவை, இலகுகுணம், குளிர்ந்த வீர்யம், கைப்புச் சுவை, பித்தத்தைத் தணிக்கக் கூடிய உணவு வகைகள் இவைகளை அளவுடன் நன்கு பசி எடுத்த பின் புசிக்க வேண்டும்.

அரிசி, பாசிப்பருப்பு, நெல்லிக்காய், தேன் போன்ற லகுஉணவுகளை உட்கொள்ளவும். தயிர், எண்ணை போன்ற கனஉணவுகளை தவிர்க்கவும்.

ஹேமந்த ருது சரியை – (மார்கழி, தை – நவம்பர் நடுவிலிருந்து – ஜனவரி நடுமாதம் வரை) இந்த பருவத்தை முன்பனிக்காலம் எனலாம். தமிழ்நாட்டில் மார்கழியில் தொடங்கும் பனி, சிவ, சிவ என்று மாசியில் விலகும் என்பர். இந்த பருவத்தில் மனிதரின் வலிமை அதிகப்படும். பசியும், ஜீரணசக்தியும் மிகுந்திருக்கும். எனவே இந்த சீசனில் கனஉணவு தேவை.

சரகசம்ஹிதை சொல்வது

பனிக்காலத்தில் எண்ணெய்ப் பசையுள்ள பொருட்கள், புளிப்பு, உப்புச் சுவையுள்ள பொருட்கள், அதிக கொழுப்புச் சத்துள்ள நீர்வாழ் பிராணிகளின் இறைச்சி, நீர் நிறைந்த, காற்றடர்ந்த இடங்களில் வாழும் உயிரினங்களின் மாமிசம் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பனிக்காலத்தில் பால், தயிர், பாலேடு போன்றவை, கரும்பினால் தயாரித்த வெல்லம், சர்க்கரை, கற்கண்டு போன்றவை, எண்ணெய், புது அரிசி, சுடுநீர் இவற்றைப் பயன்படுத்துவதால் ஆயுள் குறையாது.

கோதுமை, மாவுப்பொருட்கள், சோளம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, கேரட், அத்தி, பேரீச்சம்பழம், கொட்டைகள் முதலியவை ஹேமந்தருதுவிக்கு ஏற்ற உணவுகள்.

குடிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்தவும். ஜீரண சக்தியை பலப்படுத்தும். சரக சம்ஹிதையின் படி வாதத்தை உண்டாக்கும் உணவுகள் மற்றும் எளிதில் ஜீரணமாகும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

இந்த சீசனில் நல்ல பசியும், சுறுசுறுப்பும் உண்டாகும். அதனால் தான் மார்கழி திருநாளில் நெய் செறிந்த பொங்கலும், தைத்திருநாளில் சர்க்கரை பொங்கலும் ஹேமந்த ருதுவுக்கு ஏற்ற உணவுகள்.

சிசிர ருது – (மாசி, பங்குனி – ஜனவரி நடுமாதத்திலிருந்து மார்ச் நடுமாதம் வரை) சிசிர ருதுவை பின்பனிக்காலம் என்றும் சொல்வார்கள். ஹேமந்த ருதுவில் சொல்லப்பட்ட உணவு முறைகளையே இந்த சீசனிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுவாக ஹேமந்தம் என்ற பனிக்காலமும், சிசிரம் என்ற இலையுதிர் காலமும் சமமானவை. ஆனால் இலையுதிர் காலத்தில் சிறிது மாறுபாடு உள்ளது. இப்பருவத்தில் உத்தராயணத்தில் இயல்பாக வறட்சி ஏற்படுகிறது. மேகம், காற்று, மழை இவற்றின் காரணமாக மிக்கக் குளிர்ச்சி உண்டாகிறது. சிசிர ருதுவில், ஹேமந்த ருதுவிற்குக் கூறப்பட்ட எல்லா முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

மேற்சொன்ன பருவங்கள் ஒரே சீராக இருப்பதில்லை. இப்போதெல்லாம் தட்ப வெப்ப நிலைகள் மாறிக் கொண்டே வருகின்றன, இருந்தாலும் ஆயுர்வேதம் சொல்லும் பருவத்திற்கேற்ற நடைமுறைகள் உபயோகமானவை. எந்த பருவம் ஆனாலும் நாம் குடிக்கும் நீர் சுத்தமானதாக இருந்தால் பாதி பாதிப்புகளை தவிர்க்கலாம். கேரளத்தில் சுக்கு, தேங்காய் கொட்டாங்கச்சி, வறுத்த கொள்ளு, கருங்காலிக் கட்டை, ஜீரகம், சோம்பு, கொத்தமல்லி விதை முதலியவற்றை போட்டுக்காய்ச்சியே குடிக்கின்றனர். இதை அவர்கள் “சுக்கு வெள்ளம்” என்கின்றனர்.

உணவு நலம் ஆகஸ்ட் 2010

சீசன், உணவு, மாற்றம், பருவத்திற்கேற்ற, உணவு, பஞ்சகர்மா, சிகிச்சை,

திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், காலரா, நோய்கள், சரகசம்ஹிதை,

கொழுப்பு, உணவு, ஆயுர்வேதம், பருவம்,


Spread the love