ஐம்புலன்களில் ஒன்று காது. மற்றவர்கள் பேசுவதை கேட்கவும், சுற்றுப்புற சப்தங்களை கேட்கவும் தான் காதுகள் உதவுகின்றன என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணியுடன் காது, நமது தேகம் இருக்க வேண்டிய சமநிலையை காக்கிறது. நாம் நிற்கும் போது தள்ளாடாமல் நிற்கவும், உடல்வெப்பத்தை சீராக வைக்கவும் காதுகள் உதவுகின்றன.
காதுகளை மூன்று பாகமாக வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று சொல்லலாம். இந்த மூன்று பாகங்களை திட, திரவ, காற்று ஊடகங்கள் என்றும் சொல்லலாம். காதில் விழும் ஒலி அலைகளை வெளிக்காது வாங்கி, உள்ளே அனுப்பும். வெளிக்காது காற்று ஊடகம். இந்த ஒலி அலைகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை சென்றடைகின்றன. நடுக்காது திட ஊடகம். ஒலியின் அளவுக்கேற்ப, செவிப்பறை அதிர்கிறது. செவிப்பறையோடு இருக்கும் சிறு மூன்று எலும்புகள், ஒலி அதிர்வுகளை உட்காதுக்கு அனுப்புகின்றன. உட்காது திரவமுள்ள ஊடகம். இங்கு ‘கோச்லியா’ என்ற அவயம் ஒலி அலைகளை வாங்கி, ஒலியை ஆராய்ந்து, ஒலியை நரம்பு துடிப்புகளாக மாற்றும்.
இந்த “கோச்லியா” திரவம் நிறைந்த குழாய். நத்தை ஓடு போல் சுருண்டிருக்கும். இதில் உள்ள கோர்டியில் 20,000 பிரத்யேக செல்கள் உள்ளன. இவற்றை முடி செல்கள் என்பார்கள். இந்த செல்களில் சிறுமுடி போன்ற “உறிஞ்சிகள்” திரவத்தில் மிதந்திருக்கும். கோசியாவிலிருந்து வரும் ஒலி அலைகள் சிலியாவை அதிர வைக்கும். வித, விதமான ஒலிகள், விதம் விதமாக சிலியாவை ஆட்டுவிக்கும். ஒலி அலைகள் நரம்பு துடிப்புகளாக மாற்றப்பட்டு மூளையை சென்றடையும். அப்போது நாம் சப்தத்தை உணருகிறோம்.
அதிக சப்தம் (தீபாவளி பட்டாஸ் வெடிப்பு), இரைச்சல் காதின் முடி செல்களை பாதிக்கும். முடி செல் பாதிக்கப்பட்டு, அழிந்து போனால், மறுபடியும் உண்டாகாது.
செவிட்டுத்தன்மை:–
இரண்டு காதிகளிலும் ஒரளவு அல்லது முழுமையான பாதிப்பை காது செவிடு என்கிறோம். கடத்தும் செவிடு என்றால் ஒலி அலைகளை வெளிக்காது, நடுக்காதுக்கு அனுப்ப முடியாமல் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு ஆட்டிஸ் எக்ஸ்டர்னா வெளிக்காதிலிருந்து, செவிப்பறை வரையான பாதையில் தொற்று நோய் தாக்கினால் ஏற்படும்.
ஆட்டிஸ் மீடியா வில் உட்காது, பாக்டீரியா, வைரஸ் நோய்களால் பாதிக்கப்படும். புலப்படும் செவிட்டுத்தன்மை கோச்லியாவில், காது நரம்புகளில் ஏற்படும், காயங்கள், புண்களால் ஏற்படும். இது அடிபட்டுக் கொள்ளுதல், நோய், முதுமை இவற்றால் ஏற்படும்.
காது கேளாமைக்கு காரணங்கள்
ஒலி கடத்தும் பாதை – காது கேளாமை
ஓட்டிடஸ் மீடியா – பாக்டீரியா, வைரஸ் தொற்றால் வருவது.
காதில் உள்ள மெழுகு கெட்டியாகி விட்டால். இதன் காரணம் காதை தவறாக சுத்தம் செய்வது. பஞ்சு மொட்டுக்களால் காதை சுத்தம் செய்ய முயன்றால், அவை மெழுகை மேலும் உள்ளே தள்ளி, பாறாங்கல் போல் கெட்டியாக்கி விடும். இதனால் ஒலிகள் செல்லும் வழி அடைக்கப்படுகிறது.
காதின் திரவத்தில் தொற்று நோய்
ஓட்டை விழுந்த செவிப்பறை
புற்றுநோயில்லாத வீக்கம், கட்டி, தொற்றால் வருவது.
புலன்படும் காது கேளாமை
முதுமை
மெனியர் வியாதி, மூளையில் கட்டி
பாலியல் தொற்று நோய்கள்
பிறவிக் கோளாறு
உட்காதில் வைரஸ் தாக்கு.
இரைச்சல்
டின்னிடஸ் – வெளிச்சத்தம் ஏதும் இல்லாத போது, காதில் ரீங்காரம், யாரோ போவது போன்ற உணர்வு, விசில் சப்தம் போன்றவை கேட்டால், உங்களுக்கு வந்திருப்பது காரணங்கள் – காதின் ஒலி நரம்புகள் பாதிப்பு, இரைச்சல், சில ஆன்டி – பயாடிக் மருந்துகள், காதில் குரும்பி அதிகம் சேர்ந்து அடைத்துக் கொள்ளுதல் போன்றவை.
காதுவலி – காதுவலி காதில் தான் ஆரம்பிக்கும் என்பதில்லை. வலி உற்பத்தியாகும் இடம் மூளைக்கு அருகாமையிலும் இருக்கலாம். காதுவலிக்கு முக்கிய காரணம் தொற்று நோய்கள். அதுவும் அடிக்கடி குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலிக்கு காரணம் நடுக்காது தொற்றுநோய் தான். காதின் பாதையில் ஏற்படும் தொற்றுநோய் மிகவும் வலிக்கும். எல்லா வயதினரையும் தாக்கும். நடுக்காதையும், மூக்கின் பின்புறத்தையும் இணைக்கும் பாதையின் பெயர். இது அடைத்துக் கொண்டால், நடுக்காதுக்கும், வெளியில் இருக்கும் காற்றழுத்தத்தை சமனாக்க முடியாது. இந்த அழுத்த மாற்றத்தால் உண்டாகும் வலியை, விமானத்தில் பயணிக்கும் போதும், கடலின் உள் ஆழத்திற்கு செல்பவர்களும் உணரலாம். மூக்கை சிந்துவதால் அழுத்தமும், வலியும் குறையும்.
ஆயுர்வேதமும் காதும்
ஆயுர்வேதம் 33 வகை காது வலிகளை சொல்கிறது.
சரகர் சொல்வது:-
செவி நோய்களின் அறிகுறிகள் – காதில் மணிச் சப்தம், வலி, மெழுகு, காதிலிருந்து நீர்த்த திரவம் வழிவது, உலர்ந்து போது – இவை வாத தோஷம் சீர் குலைந்தால் ஏற்படும்.
பித்த தோஷம் ஏறுமாறானால் – வீக்கம், சிவந்து போதல், எரிச்சல், மஞ்சள் நிற சீழ் வடிதல் – இவை தோன்றும்.
கபத்தோஷ கோளாறுகளில் அரிப்பு, காது கேளாமை, வீக்கம், குறைந்த வலி, வெண்ணிற சீழ் வடிதல் இவை தோன்றும்.
சிகிச்சை முறைகள் எந்த தோஷம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பொறுத்து அமையும். பத்திய உணவு, தைல மசாஜ், மூக்கின் வழியே மருந்துகள் இவையெல்லாம் சிகிச்சையில் செய்யப்படும். சீழ் வடியும் நிலைகளில் அறுவை சிகிச்சை நிபுணரின் உதவி எடுத்துக் கொள்ளப்படும். கீழ்க்கண்ட காதுக்குள் போகும் மருந்துகள் பயன்படுத்தப்படும்.
தயாரிப்பு குறிப்புகள்
பெருங்காயம்+தும்புரு +சுக்கு
காது ரோகங்களை குறைக்கும்.
கடுகெண்ணையில் காய்ச்சி காதுக்குள் விடும் மருந்து.
சோழி+ரஸாஞ்சனம்+ சுக்கு
காது வலியை போக்கும்.
சோழிகளை மண்பாண்டத்தில் சுட்டு, சாம்பலை மூலிகை மற்றும் தைலத்துடன் சேர்த்து தயாரிக்கப்படும்.
இளசான முள்ளங்கி+பெருங்காயம்+சுக்கு+கதலிசாறு
செவிட்டுத்தன்மையை குணப்படுத்தும்.
உலர்த்தி, சாம்பலை எடுத்து சில வைத்திய முறைகளில் தயாரித்து காதுக்குள் விடும் மருந்தாக உபயோகப்படுத்தப்படும்.
வீட்டு வைத்தியம்
ஒரு கரண்டி சமையல் எண்ணெயில் 1 பூண்டு கொத்தை போட்டு சூடாக்கவும். குளிர வைத்து இந்த எண்ணெய்யை சொட்டு மருந்தாக காது வலிக்கு காதில் விடலாம்.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை அரைகப் பாலில் கொதிக்க வைக்கவும். குளிர வைத்து காது வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெயில் ஒரே ஒரு கிராம்பை போட்டு சூடுபடுத்தவும். ஆறிய பின் இந்த எண்ணெய்யின் மூன்று அல்லது நான்கு சொட்டுக்கள் வலிக்கும் காதில் விடலாம்.
வில்வ வேரின் களிம்பை கடுகெண்ணெயில் கொதிக்க வைக்கவும். சூடு ஆறிய பின் வடிகட்டி காதுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
இஞ்சி சாற்றுடன் சிறிது சூடாக்கப்பட்ட வெங்காயச் சாற்றை கலந்து காதுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.
காதை சுற்றி சூட்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
காது கோளாறுகள் மற்றும் காது வலியின் போது உண்ண வேண்டிய உணவுகள்:-
வெங்காயம், பூண்டு மற்றும் மஞ்சள் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு, தயிர், சாத்துக்குடி பழங்கள், கொய்யாப்பழம், தர்பூசணி மற்றும் வெண்டைக்காய் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் ஜலதோஷத்தை உண்டாக்கலாம். இதனால் காது வலி அதிகமாகும்.
காது கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகள்:-
பூண்டு காது வலிக்கு சிறந்த மருந்து. பூண்டை போலவே பூண்டு எண்ணெய்யையும் உபயோகிக்கலாம்.
நொச்சி மூலிகையின் இலைகளை பிழிந்து சாறு எடுத்து காதுக்குள் விடும் சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.
வேம்பு ஆன்டி – செப்டிக் குணங்களுடையது. அது தொற்றை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும்.
ஒரு தேக்கரண்டி ஓமத்தை அரை கப் பாலில் கொதிக்க வைக்கவும். ஆறிய பின் வடிகட்டி காதுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.
துளசி இலைகளின் சாற்றையும் காதுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.
காதிலிருந்து நீர், சீழ் வடிதல்:–
இந்த கோளாறு உடனே கவனிக்கப்பட வேண்டியது. இதன் காரணங்களும் அறிகுறிகளும்:- நடுக்காதில் ஏற்படும் தொற்று, எக்ஸிமா, கட்டிகள், காதின் மெழுகு அடைப்பு இவற்றால் சீழ் வடிதல் ஏற்படலாம். சீழை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் இருமல், ஜலதோஷம் மற்றும் சைனஸ் பிரச்சனைகள் இருந்தால் உண்டாகும். பாக்டீரியாக்களும், வைரஸ்களும் சீழை உண்டாக்கும். ஆயுர்வேதத்தில் சரிவாதி வடீ, பிருங்காமலாக தைலம், சார தைலம் மற்றும் நொச்சி தைலம் போன்ற மருந்துகள் காது கோளாறுகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகின்றன.
காதை கவனிக்க:-
காது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் அவயம். காதிலுள்ள மெழுகு, காதில் வேண்டாத பொருள்கள் நுழைவதை தடுக்கும். நுண்ணிய, மெல்லிய முடிகள் காதின் பாதையில் உள்ளன. இவை தொடர்ந்து மெழுகை இங்கும் அங்கும் தள்ளும். அழுக்கான மெழுகு மற்றும் இறந்த தோல் திசுக்களை வெளியேற்றும். காதின் பாதை சுத்தமாக இல்லாவிடில் செவிப்பறை அடைப்பட்டு விடும். இதனால் காது கேளாமை உருவாகி, கடைசியில் முழு செவிட்டை உண்டாக்கும்.
உங்கள் காதில் எரிச்சலோ, குடைச்சலோ இருந்தால் சிறிதளவு குழந்தைக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை காதில் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை காதில் விட்டுக் கொள்ளலாம். இதனால் காதில் எண்ணெய்ப் பசை அதிகமாகும்.
நடுக்காதில் திரவம் சேர்ந்திருந்தால் மருத்துவ நிபுணரை அணுகவும். இதன் அறிகுறி வலி.
காதில் சீழ் வடிந்தால் தொற்று நோய் என்று அர்த்தம். உடனே டாக்டரிடம் செல்லவும்.
காது கேளாமையின் அறிகுறிகள் – காதில் மணி ஓசை, வேறு சில சப்தங்கள் கேட்பது, காதில் ஒரு வித அழுத்தத்தை உணர்வது மற்றும் தலைசுற்றல். இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது.
குழந்தைகளின் நோயான பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, ஜுரம், கக்குவான் இருமல் இவையெல்லாம் காதை பாதிக்கக் கூடியவை. எனவே உங்கள் குழந்தைக்கு இத்தகைய உபாதைகள் வந்தால் காது மருத்துவரையும் கலந்தாலோசிக்கவும்.
கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை மற்றும் வைரஸ் இவைகள் வந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது பாதிப்பு பிறவியிலேயே உண்டாகலாம். எனவே குழந்தை பிறந்த பின்பு காதுகளை பரிசோதிக்கவும்.
காதில் உள்ள மெழுகை எடுக்க பருத்தி மொட்டுக்கள், ஹேர் பின் இவற்றையெல்லாம் உபயோகப்படுத்த வேண்டாம். செவிப்பறை பாதிக்கப்படும். டாக்டரிடம் சென்று மெழுகு / அழுக்கை வெளியேற்றி கொள்ளலாம்.