குழந்தை பாக்கியத்துக்கு- துரியான்

Spread the love

‘துரியான்’ ஒரு விசித்திரமான பழம். சிலர் அதை தீவிரமாக விரும்புகிறார்கள்; பலர் அதை தீவிரமாக வெறுக்கிறார்கள். தென்கிழக்கு ஆசிய மக்கள் ‘பழங்களின் அரசன்’ என்று துரியானை கொண்டாடி உண்கின்றனர். சில வெளிநாட்டவரும் துரியான் பழத்தை விரும்பி உண்கின்றனர்.

இந்த விருப்பு – வெறுப்புகளுக்கு காரணம் துரியான் பழம் எழுப்பும் வாசனை தான். தோலை எடுக்காமலேயே, துரியான் பழத்திலிருந்து ‘பலமான’ வாசனை எழும்புகிறது. விரும்பாதவர்கள் இந்த நாற்றத்தை கேவலமாக விமர்சிக்கின்றனர்! சாக்கடை நாற்றம், துவைக்காத காலுறைகளின் நாற்றம், அழுகிய வெங்காய நாற்றம், டர்பென்டைன் வாசம், வாந்தி வாசம் முதலியன துரியானை பிடிக்காதவர்கள் வர்ணிக்கும் வார்த்தைகள்! இன்னும் மோசமான, அச்சிட முடியாத வார்த்தைகளால் துரியானை பிடிக்காதவர்கள் விமர்சிக்கின்றனர். இந்த எச்சரிக்கைகளை மீறி அதை சுவைப்பவர்களில் பலர், அதன் விசித்திர சுவைக்கு அடிமையாகிவிடுகின்றனர்! அவர்களுக்கு அது “பாதாம்“ பருப்பின் சுவை போல் தெரிகிறது! துரியானின் துர்வாசனையால் அது தென்கிழக்கு ஆசியாவின் பிரபல ஹோட்டல்கள், பொது இடங்கள், பஸ், ரயில், விமான நிலையங்களில் வைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

துரியானில் 30 இனங்கள் உள்ளன. இவற்றில் 9 இனங்களை மட்டுமே உண்ணத் தகுந்த பழங்களை தருகின்றன. Duro zibethinus இனம் மாத்திரம் சர்வதேச சந்தையில் கிடைக்கும் பழ வகை. ஆனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளை தவிர்த்து, இதர ஆசிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து துரியானுக்கு ‘டிமாண்ட்’ இல்லை.

துரியான் மரங்கள் பெரியவை. 25 லிருந்து 50 மீட்டர் உயரம் வளர்பவை மரத்தின் சுற்றளவு சராசரி 1.2 மீட்டர் விதையால் வளர்க்கப்படுபவை. பச்சை நிற பசுமையான இலைகள், நீள் வட்டமாக, அகலத்தை காட்டிலும் நீட்டம் அதிகமாக, 10 லிருந்து 18 செ.மீ. நீளம் உடையவை. பூக்கள் பெரியவை வெண்மையானவை. மென்மையானவை. தேன் செறிந்தவை. அதிக வாசம் வீசுபவை. துரியானின் மகரந்த சேர்க்கை (கிட்டத்தட்ட முழுவதும்) குகைகளில் வசிக்கும் பழம் தின்னும் வெளவால்களால் செய்யப்படுகின்றன. பெரிய உருவமுள்ள தேனீக்கள் சில பறவைகளும் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.

நட்ட ஏழு வருடங்களில் துரியான் மரம் பழம் தர தொடங்கும். தற்போது 4 (அ) 5 வருடங்களில் பலன் தரும் ரகங்களும் உண்டு. துரியான் பழங்கள் மரத்தின் எல்லா கிளைகளிலிருந்தும் தொங்கும். மகரந்த சேர்க்கை நிகழ்ந்த 3 மாதங்களில் பழங்கள் முதிர்ச்சி அடையும். பழம் 30 செ.மீ. நீளம், 15 செ.மீ. சுற்றளவு இருக்கும். எடை ஒன்றிலிருந்து மூன்று கிலோ இருக்கும். வடிவம் அகலத்தை காட்டிலும் நீளமாக இருக்கும். அதன் தோல் பச்சை – பழுப்பு நிறம். பழத்தின் உள்ளே, ஐந்து அறைகளில், வெண்மை “கிரீம்“, வெளிர்மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் (இனத்தைப் பொருத்து) பழக் கதுப்பு காணப்படும். ஒன்றிலிருந்து ஏழு விதைகள் இருக்கும். பழச்சதை வெண்ணெய் / நெய் போல், மிகுந்த மணத்துடன் இருக்கும். இந்த மணம் தான் சிலரை சுண்டி இழுக்கும். பலருக்கு பிடிக்காமல் போகும்!

துரியான் பழம், பலாப்பழம் போலிருக்கும். பலாப்பழத்தின் வெளிப்புற முட்களை விட துரியான் பழத்தின் வெளிப்புற தோலின் முட்கள் கூர்மையானவை. கையுறைகள் இன்றி துரியான் பழங்களை கையாள்வது கடினம்.

துரியான் பழம் சீக்கிரமே கெட்டு விடும். மரத்திலிருந்து தானாகவே விழும் பழங்கள் 2 (அ) 3 நாட்கள் பழுத்திருக்கும். 5 (அ) 6 நாட்களில் அழுகி விடும்.

சாதாரணமாக துரியான் பழங்களை மரத்திலிருந்து பறிப்பதில்லை. தானாக விழும் பழங்கள் சேகரிக்கப்படுகின்றன. எச்சரிக்கையாக பழங்களை சேகரிக்க வேண்டும். ஏனென்றால் தலை மேல் பழங்கள் விழுந்தால் பலத்த காயம் ஏற்படலாம். தொப்பி / ஹெல்மேட் அணிந்து பழங்கள் சேகரிக்கப்படுகின்றன. துரியான் தோட்டங்களில் புல்வேய்ந்த குடிசைகளை அமைத்து 6 (அ) 8 வாரங்கள் அவற்றில் தங்கி, ஆட்கள் துரியான் பழத்தை சேகரிப்பார்கள்.

துரியான் உஷ்ணப்பிரதேசங்களில் வளரும் மரம் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து தேசங்களில் பரவலாக ஏகப்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் மரங்கள் 4 (அ) 7 வருடங்களில் பலன் தருகின்றன. இந்தியாவில் நட்டு 9 (அ) 12 வருடங்கள் கழித்தே பலன் தருகின்றன. அதுவும் தென்னிந்தியாவில், மரங்கள் 13 லிருந்து 21 வருடங்கள் கழித்தே பழம் தருகின்றன.

சமையலில் துரியான்

பொதுவாக துரியான் பழங்கள், புதிதாக நேரடியாக உண்ணப்படுகின்றன. சில சமயங்களில் சர்க்கரையுடன் சேர்ந்து வேக வைக்கப்படுகின்றன. இல்லை இளநீருடன் சேர்த்து சமைக்கப்படுகின்றன.

ஐஸ்கிரீம்களில் துரியான் சேர்க்கப்படுகிறது.

ஜாவா மக்கள், பழச்சதையை ‘சாஸ்’ போல் அரிசியுடன் உண்கின்றனர். துண்டு துண்டாக பழத்தையும், வெங்காயத்தையும் வெட்டி, உப்பு, வினிகர் சேர்த்து உண்பதும் வழக்கம்.

பழுக்காத துரியான் காய் காய்கறி போல் வேக வைத்து உண்ணப்படுகிறது.

துரியான் மரத்தின் இளம் தளிர்கள் (இலைகள்) சில சமயங்களில் கீரை போல் சமைத்து உண்ணப்படுகின்றன.

துரியான் பழத்தைக் கொண்டு, கேக், பழவகை இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

விதைகளும் சமைத்து உண்ணப்படுகின்றன. சமைக்காத விதைகள் உண்பது தவிர்க்கப்படுகிறது. சமைக்காத விதைகள் நச்சுத்தன்மை உள்ளவை. மூச்சுத் திணறலை உண்டாக்கலாம்.

எச்சரிக்கை

துரியான் பழம் சத்துக்கள் செறிந்தது. இருந்தாலும் அதிகமாக உண்பது கூடாது. கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துரியான் பழத்தை உண்ணக் கூடாது.

மருத்துவ பயன்கள்

துரியானில் ‘எஸ்ட்ரோஜென்கள்’ செறிந்துள்ளன. எஸ்ட்ரோஜென் பெண்கள் ஹார்மோன். இதனால் பெண்களின் குழந்தையின்மை குறையை போக்கும் சக்தி துரியானில் இருப்பதாக கருதப்படுகிறது. பொதுவாகவே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் (விட்டமின் ‘சி’, பொட்டாசியம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் முதலியன) – துரியான். அது ஒரு பாலுணர்வை தூண்டும் உணவாக, பரவலாக நம்பப்படுகிறது. அதனால் பாலியல் மற்றும் குழந்தையின்மை குறைபாடுகளுக்கு துரியான் மருந்தாக கருதப்படுகிறது. துரியானின் அபரிமிதமான “வாசனை” ‘இன்டோல் கலவைகளுடன்” உள்ள தொடர்பால் ஏற்படலாம். இந்த கலவைகள் “ட்ரைப்டோபான்” அமினோ அமிலத்திலிருந்து உருவாகின்றன. இந்த அமினோ அமிலம் துரியான் பழத்தில் உள்ளது. “இன்டோல்  கலவைகள்” பேக்டீரியாவின் வளர்ச்சிகளை தடுக்கும். எனவே, நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை மீட்டு தரும் டானிக்காக துரியான் பழம் உதவுகிறது.

தவிர நரம்புகளுக்கு வலுவூட்டும். தாது பலத்தை பெருக்கும். உடலுறவில் ஈடுபடும் திறமையை அதிகரிக்கும். இதைப்பற்றிய பழமொழிகள், ஜாவா, இந்தோனேசியாவில் கூறப்படுகின்றன. ஜாவாவில் பாலியல் குறைகளில் துரியான் பழத்தை உபயோகிப்பதில் சில விதிமுறைகளுடன் கடைப்பிடிக்கின்றனர்.

மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மையை போக்கி, மகிழ்ச்சியை உண்டாக்கும். காரணம் இந்தப்பொருள் மூளையின் “செரோடோனின்” அளவை அதிகரிக்கிறது.

சில உணவு நிபுணர்கள், துரியான் பழத்தை கொழுப்பு அதிகமுள்ள உணவாக கருதுகின்றனர். அதை அளவோடு உண்பது நல்லது என்கின்றனர். சில நிபுணர்கள் துரியான் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்கின்றனர்.

மலேசியாவில் இதன் இலைகள் மற்றும் வேர்களால் செய்யப்படும் கஷாயம், ஜுரத்தை குறைக்க (துணியை கஷாயத்தில் நனைத்து, தலையில் ‘பற்று’ போடுதல்) பயன்படுத்தப்படுகிறது. காமாலைக்கும் இலைகளின் கஷாயம் மருந்தாக பயனாகிறது.

தசை வளர்ச்சிக்கு துரியான் உதவுகிறது.


Spread the love