முருங்கைக்கீரையின் முழுப்பயன்

Spread the love

சித்த வைத்தியத்தில் சமூலம்என்ற ஒரு வார்த்தை உண்டு. சில தாவரங்களில் சில பகுதிகள் மாத்திரமே பயன்படும். தாவரத்தின் எல்லா பாகங்களும் – வேர், தண்டு, பட்டை, காய், பூ, இலை – பயனாகும் தாவரங்களும் உண்டு. சமூலம்என்றால் எல்லா பாகங்களும் பயன்படும் என்பது பொருள். அதற்கு சிறந்த உதாரணம் முருங்கை. இலை, காய் முதலியவை தவிர, முருங்கை மரப்பட்டையின் பிசின் கூட பயன்படும். பழங்காலத்திலிருந்தே சிறந்த உணவாக முருங்கை பயன்படுத்தப்பட்டுள்ளது.

முருங்கை கீரையின் பயன்கள்

அகத்திய முனிவர், முருங்கைக் கீரையை நெய்யில் பொரித்து தினமும் உண்டு வர “யாளி” போல் பலம் பெருகும் என்கிறார். யாளி பத்து யானைகளின் பலம் கொண்டது என்பார்கள். இதை தெரிவிக்கும் அகத்திய முனிவர்களின் பாடல் –

“நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்

யாளி” யென விஞ்சுவார் போகத்தில்”

அகத்தியர் குணபாடத்தில் வரும் சித்தர் பாடல் ஒன்று கீழ்வருமாறு

செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்

வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமே

நெருங்க யிலையொத்த விழி நேரிழையே நல்ல

முருங்கை யிலையை மொழி.

முருங்கை இலையினால் அக்கினி மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிமூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.

இதன் இலையை கட்டிகள் உடைவதற்கும் வதக்கிக் கட்டுதல் உண்டு.

உடல் வலிமை மட்டுமல்ல, உள்ளிருக்கும் நரம்புகளையும் வலுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மூட்டுவலிகள் போக, தினமும் முருங்கை கீரையை உப்புடன் வேக வைத்து 15 நாள் சாப்பிடவும்.

முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் விலகும்.

முருங்கை கீரையில் விட்டமின் இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. நீர் விடாமல் வேக வைத்து கண்களின் மீது வைத்து கட்டினால் கண் நோய்கள் நீங்கி இலையின் ரசத்துடன் தேன் சேர்த்து கண்ணிமைகளில் தேய்க்கலாம்.

முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுபோடலாம்.

இலைச்சாற்றை 40 கிராம் அளவில், கொடுக்க, நன்றாக வாந்தியாகும்.

முருங்கை கீரை இரத்த சோகையை போக்கும். 10 மிளகு சேர்த்து அரைத்த முருங்கைக் கீரை (ஒரு கைப்பிடி) யை 15 நாள் சாப்பிட வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, 20 நாள் தினசரி காலை, மாலை இரு வேளை தேன் + முருங்கை இலைச்சாறு (15 மில்லி) + 10 மிளகு (பொடித்தது) அருந்தி வரவும்.

முருங்கை கீரை ஆண்மையை பெருக்கும். அதன் சாற்றில் ஜாதிக்காயை உடைத்து சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உலர்த்தி, பொடியாக்கி தினமும் இரவில் 2 கிராம் சாப்பிட்டு வர, காதல் உணர்வுகள் அதிகமாகும்.

சிறுநீர் தாராளமாக, சுலபமாக பிரிய பார்லி கொடுப்பதுண்டு. அத்துடன் முருங்கை கீரை, சீரகம் (கால் ஸ்பூன்) சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும். முருங்கை கீரை சாற்றை குடித்தால் வயிற்று வலி தீரும்.

முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

எள் சேர்த்து சமைத்த முருங்கை கீரை கூட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. முருங்கைக் கீரை ஒரு சர்வரோக நிவாரணி. மலச்சிக்கலை சீக்கிரமாக போக்கும்.

100 கிராம் முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து – 75.9%, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுப்பொருட்கள் – 2.3%, நார்ச்சத்து – 0.9%, கார்போஹைடிரேட் – 12.5%, கால்சியம் – 440 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 70 மில்லிகிராம், அயச்சத்து – 0.85 மில்லிகிராம், விட்டமின் சி‘ – 260 மில்லிகிராம், இதர பிகாம்ப்ளக்ஸ் விட்டமின்கள் சிறிதளவு, கலோரி அளவு – 92 கிலோ கலோரி.

முருங்கை கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை                தேவையான அளவு

துவரம் பருப்பு          –         50 கிராம்

பாசிப் பருப்பு            –         50 கிராம்

தேங்காய்                         1/2 மூடி

சின்ன வெங்காயம்     –           1 பெரிய கரண்டி அளவு

மிளகாய் வற்றல்                 3

ஜீரகம், கடலைப்பருப்பு –           ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பொடி                     1/2 டீஸ்பூன்

தனியா                              2 ஸ்பூன்

தக்காளி                  –            2

நல்லெண்ணெய்        –             3 ஸ்பூன்

பெருங்காயம்           –             சிறிதளவு

உப்பு                                 தேவையான அளவு

செய்முறை

முதலில் பருப்புகளை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.

இதர பொருட்களை தனித்தனியே வறுத்து பொடியாக்கவும்.

பருப்புகளுடன் கீரையை சேர்த்து பொடிகள், உப்பு இவற்றை போட்டு வேக வைக்கவும்.

தனி வாணலியில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி தாளிக்க வேண்டும். எண்ணெய்யில் கடலைப் பருப்பு இன்னும் நான்கு ஸ்பூன் விட்டு வறுத்து குழம்பில் போட்டு எலுமிச்சை பழம் சாறு பிழிந்து இறக்கி வைத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். சைனஸ், சளி, அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற கபப் பிரச்சனைகள் முருங்கை கீரை தீர்க்கும்.

முருங்கை கீரை பானம்

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை                   200 கிராம் (இலைகள் மட்டும்)

தண்ணீர்                            500 மி.லி.

தேன் அல்லது நாட்டு சர்க்கரை –  100 கிராம்

தேங்காய் பால் அல்லது திருகல் – 100 கிராம்

செய்முறை

கீரைகள், இலைகளை கழுவவும். மிக்ஸியில் ஸ்பீடு ஒன்றில் அரைக்கவும். நீர் சேர்த்து வடிகட்டி சாறு பிழியவும்.

கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளுடன் தேங்காய் பால் கலக்கலாம். இனிப்புத் தேவையெனில் கலக்கலாம்.

ஒரு டம்ளர் சாறை ஐந்து நிமிடம் ஸ்பூன் மூலம் சாப்பிட வேண்டும். முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இலைகளை பொடியாக சாப்பிடும் சமயம் 5 முதல் 10 கிராம் வரை ஒரு வேளைக்குச் சாப்பிடலாம்.

இரவில் ஜீரணத்தை தடை செய்யும் சமைத்த, வேக வைத்த கீரைகள் நீக்கவும். ஆனால், கீரைப் பொடிகளைச் சாப்பிடலாம். இரவில் சமைத்த கீரைகள், தயிர் தவிர்க்கவும்.

தொடர்ந்து கீரைச்சாறுகள் சாப்பிடுவதில் பயம் கொள்ளத் தேவையில்லை. பிற விஷச்செடிகள் கீரைகளில் கலந்து உள்ளதா என சரி பார்த்து பின் சாறு தயாரிக்க வேண்டும்.

முருங்கைக் கீரை பொறியல்

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை           1 கட்டு

நெய்                          தாளிப்பதற்கு

சீரகம்                         தாளிப்பதற்கு

கறிவேப்பிலை           –     தாளிப்பதற்கு

தேங்காய்                     சிறிதளவு

உப்பு                          தேவையான அளவு

உளுத்தம் பருப்பு             தாளிப்பதற்கு

செய்முறை

முருங்கைக்கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து (பழுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும்). பிறகு நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் கழுவி வைத்துள்ள கீரையை போட்டு தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து வேக விட வேண்டும். (மூடக்கூடாது) நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு அதனுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும். இந்த இதழில் முருங்கைக்கீரையைப் பற்றி பார்ப்போம். அடுத்த இதழில் முருங்கையின் முழுப்பயனைப் பார்ப்போம்.


Spread the love