சர்க்கரைக்கேற்ற முருங்கை
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.
சர்க்கரை நோயில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்ப கால சர்க்கரை நோய் என பல வகைகள் உள்ளன. குடும்பத்தில் ஒருவருக்கு டைப்-1 டயாபடீஸ் இருப்பின் மற்ற அனைவருக்கும் இரத்த பரிசோதனை செய்யவும். பரிசோதனையின் போது சர்க்கரை நோய் இருப்பின், ஆரம்பத்திலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தால் போதும்.
சர்க்கரை அளவு அதிகமாக இருப்பின் முருங்கையை உணவில் சேர்த்துக் கொண்டு வர சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். சர்க்கரை நோயாளிக்கு முருங்கை ஒரு மாமருந்து ஆகும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முருங்கையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
முருங்கையின் நற்குணங்கள்
வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் இருந்தால் போதும் எவ்வித நோயும் அண்டாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இதில் அடங்கியுள்ள மருத்துவ குணமே இதற்கான காரணமாகும். முருங்கை காய், பூ, இலை மட்டுமின்றி அவற்றின் பட்டைகள், வேர், விதை, முருங்கை பிசின் என அனைத்துமே நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
இது இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் குளுக்கோஸின் அளவை குறைக்கிறது. நம் உடலினுள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் முட்டைக்கு நிகரான புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆரம்ப கால சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பதற்கு முருங்கையின் இலை, வேர், விதைகள் பெரிதும் உதவுகிறது. இது காயங்களை ஆற்றி அதிகப்படியான இரத்தம் வெளியேராமல் தடுக்கிறது.
இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் எலும்பு மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்கவும், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பெரிதும் உதவுகிறது.
சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள்
முறையற்ற வாழ்க்கை, அதிக உடல் எடை, பரம்பரை, சீரற்ற உணவு பழக்கம் போன்றவை சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
முருங்கையை பயன்படுத்தும் முறை
தினமும் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முருங்கை இலையை பொடி செய்து அதனை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேநீர் தயாரித்து குடிக்கலாம். முருங்கை பொடியை நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கி பயன்படுத்தலாம்.
முருங்கை தேநீர் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை கிரீன் டீ போன்று தயாரித்து பருகலாம்.
முருங்கை காய்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். முருங்கைக்காயின் சாறு நன்கு இறங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி பருகலாம்.
முருங்கை இலையை சூப் செய்து அருந்தலாம்.
முருங்கை சூப்
தேவையான பொருட்கள்
முருங்கை இலை | 1 ½ கப் |
அரிசி தண்ணீர் | 2 கப் |
சாம்பார் வெங்காயம் | 5 |
தக்காளி | 1 |
பச்சை மிளகாய் | 1 |
தேங்காய் பால் | ஒரு கப் |
சீரகம் | ஒரு டீஸ்பூன் |
மிளகு | அரை டீஸ்பூன் |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் சமயத்தில் முருங்கைக் கீரையை சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரம் சென்ற பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும்.
முருங்கைக் கீரை வெந்ததும் தேங்காய்ப்பால், இடித்த மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றவும். சுவையான முருங்கை சூப் தயார்.
குறிப்பு
சரியான நேரத்தில் தூங்கி எழுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, சமச்சீர் உணவு, சீரான வாழ்வியல் முறை போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.