நீர் பருகுவதின் நியமங்கள்

Spread the love

குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். கொஞ்சம் சூடாக காய்ச்சினால் போதாது. கிருமிகளை கொல்ல நீரை நன்றாக கொதிக்க விட்டு இறக்கி, தானாகவே ஆறவிட்டு குடிக்க வேண்டும்.

சூடான நீரை ‘டம்ளர் – டபரா’வினால் ஆற்றக் கூடாது. வெளிக்காற்று நீரை ஆற்றும் போது மாசுபடித்தி விடும்.

ஆறிய வென்னீரை மறுபடியும் காய்ச்சக் கூடாது.

பசியெடுக்கும் போது உணவை உண்ணாமல், நீரை பருகக் கூடாது. வயிற்று வலி ஏற்படும். சாப்பிட்ட பின் நிறைய நீரை பருகக் கூடாது. ஜீரணம் தடைப்படும். தாகத்தை அடக்க சிறுகச் சிறுக நீர் குடிக்க வேண்டும்.

காய்ச்சிக் குளிர்ந்த வென்னீர் எப்பொழுதும், எந்த நிலையிலும் குடிக்கத்தக்கது. நீரை பொங்கும் வரை காய்ச்சி, பொறுக்கும் படியான சூடுநிலையிலேயே குடிக்கலாம். சூடான நீர் வாயுவை பிரிக்கும். உணவு ஜீரணமாகும். இருமல் குறையும். ஜுரத்தில் குடிக்க ஏற்றது. ஜலத்தை கால் பங்காக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் வாயு நோய்கள் குறையும். கப நோய்களையும் போக்கும். நீர் அரைப்பங்காக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் பித்த நோய்களில் நல்லது.

பகலில் காய்ச்சிய நீரை இரவில் உபயோகிக்கக் கூடாது. அதே போல், இரவில் காய்ச்சிய நீரை பகலில் உபயோகிக்க கூடாது.

இரவில் படுக்கு முன் வெந்நீரை குடித்து விட்டு படுத்தால் மறுநாள் மலச்சிக்கல் ஏற்படாது. விடியற்காலையில் குளிர்ந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். நோய்கள் ஏற்படாது. கண் பார்வை தெளிவடையும்.

தலை சுற்றல், மயக்கம், வாந்தி, இதய படப்படப்பு போன்ற நிலைகளில் குளிர்ந்த நீர் அருந்துவது நல்லது. சளி, விலாப் பிடிப்பு, வயிற்று உப்புசம், அஜீரணம், ஜுரம் இவற்றுக்கு வெந்நீர் நல்லது.

கேரளத்தில் “சுக்கு வெள்ளம்” என்ற, சுக்கு, ஜீரகம், தனியா முதலியவற்றை ஜலத்தில் போட்டு காய்ச்சிக் குடிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.


Spread the love