‘‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு’’
மேற்கண்ட திருக்குறளுக்கு அர்த்தம், எந்தப் பொருளை யார் சொல்லக் கேட்டாலும், அவற்றின் உண்மையான தன்மையை ஆராய்ந்து அறிவதே அறிவாகும் என்பதாகும். ஆனால், நம்மில் பலர் அப்படியில்லை. உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகி விடுவோம்.. தேன் சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுவோம்.. என்று வழிவழியாக நம்பிக் கொண்டிருப்பதோடு, அதை மற்றவர்களுக்கும் அட்வைஸ் செய்கிறோம். இவற்றில் உண்மையிருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பது இல்லை.
முதலில் உருளைக்கிழங்கு விஷயத்தை பார்ப்போம்.. உருளைக்கிழங்குவுக்கும், உடம்பு குண்டாவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதில் ஒரு சதவீதம் கூட கொழுப்பு இல்லை என்பதுதான் உண்மை. கார்போஹைட்ரேட் அதிகம். இதிலுள்ள சத்துக்கள் நமது தசைகளை பாதுகாத்து வலுப்படுத்தும். உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை உருளைக்கிழங்கு வழங்கும். அதனால்தான் விளையாட்டு வீரர்கள் அதிகமாக உருளைக்கிழங்கை சாப்பிடுவார்கள். உருளைக் கிழங்கை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பது நல்லது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் உருளைக் கிழங்கை ஒரு வெட்டு வெட்டுகிறார்கள். ஏன் வட இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு உருளைக் கிழங்குக்கு தடை விதித்தால் ஒரு புரட்சியே வெடிக்கும்.
‘‘பருப்பு சாப்பிட்டால் எனக்கு கேஸ் தொந்தரவு வரும்பா.. நான் பருப்பை தொடவே மாட்டேன்’’ & இப்படிச் சொல்பவர்கள் பலர். பருப்பு சாப்பிட்டால் வாய்வு தொந்தரவு ஏற்படுமா? எல்லா வகை உணவுகளும், எல்லோரின் உடலும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும் என்பது இல்லை. சிலவகை உணவுகள் சிலருக்கு பிடிக்காமல் அலர்ஜியாவதும் உண்டு. சிலருக்கு சில உணவுகள் அலர்ஜியால் ஜீரணமாகாமல் பிரச்சினை உண்டாக்குவதும் உண்டு. எந்த வகையான உணவாக இருந்தாலும் அவை ஜீரணமாகாவிட்டால் அதனால் தொந்தரவு நிச்சயம் உண்டு. குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் வாய்வு தொந்தரவுகள், ஆளாளுக்கு வேறுபடும். சிலருக்கு சில உணவுகள் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட உணவுகள் எவ்வித பிரச்சினையையும் உருவாக்காது. சிலருக்கு வாய்வுத் தொந்தரவு கொடுக்கும் உணவுகள் வேகமாக ஜீரணமாகிவிடும். ஆனால் பருப்பில் வெஜிடேரியன் புரோட்டீன் அதிகம். மாமிசம், மீன் ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கண்டிப்பாக பருப்புவகை உணவுகளை சாப்பிடவேண்டும். இதனால் உடலில் வலுவும், ஆரோக்கியமும் அதிகமாகும். அதேபோல், நார்ச்சத்துள்ள பழங்களை அதிகமாக அனைவரும் சாப்பிட வேண்டும்.
இதேபோல் சோயா பீன்ஸ் சாப்பிட்டால் கிட்னி நோய்கள் வரும் என்று சொல்கிறார்கள். சோயாபீன்ஸில் புரதம் அதிகமாக உள்ளது. அதிக புரதம் உடைய உணவுகளை நாம் சாப்பிட்டால் அவை கிட்னியை பாதிக்கும் என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் சோயாபீன்ஸை தண்ணீரில் வேக வைக்கும்போது, புரதங்கள் வெளியாகி விடும். நாம் வேக வைத்த சோயாபீன்ஸை நாம் சாப்பிடும்போது பெருமளவு புரதங்கள் கிடைப்பதில்லை. சரியான முறையில் அவை செரிமானமாகி நமக்கு அவை கிடைப்பதில்லை. இப்படி ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக இருந்தாலும், அதை சாப்பிடுவதால், நமது உடலில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சோம்பல் வரும் என்கிறார்கள். இதில் உள்ள ஹைட்ரோசயானிக் என்னும் மூலப்பொருள், சாப்பிடும்போது உள்ள சத்தை உடம்பில் சேருவதை தடுக்கும். இதனால் இதை பச்சையாக சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடலாம். அதாவது மரவள்ளிக் கிழங்கை வேகவைக்கும்போது தண்ணீரில் ஹைட்ரோ சயானிக் வெளியேறிவிடும். இதில் தானியங்களைவிட சத்துக்கள் அதிகம் என்பதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்போது, நமது உடல் சிறப்பாக செயல்பட மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவார்கள்.